தந்தை பெரியாரிடம், ‘‘அய்ந்தாம் ஜாதியான நாங்கள் எங்கே பிறந்தோம்?’’ என்று
எழுதி கேட்கிறார் கல்லூரி மாணவர் ஒருவர்!
‘‘நீங்கள்தான் உங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தீங்க’’ என்று பதிலளித்தார் தந்தை பெரியார்!
சென்னை, ஆக.26 ‘‘தலையில் பிறந்தால், பிராமண ஜாதி; தோளில் பிறந்தால், சத்திரிய ஜாதி; தொடையில் பிறந்தால், வைசியன்; காலில் பிறந்தால், சூத்திரன்; அப்புறம் பஞ்சமன் – அய்ந்தாம் ஜாதியான நாங்கள் எங்கே பிறந்தோம்? எங்களுக்கு Allotment இல்லையே? எங்கே பிறந்தோம்?’’ என்று எழுதி கேட்கிறார் கல்லூரிக்குச் சென்று வந்த மாணவர் ஒருவர். அய்யா Spontaneous ஆக பதில் சொல்வார் Computer மாதிரி! ‘‘நீங்கள்தான் உங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தீங்க” என்று அய்யா பதில் சொன்னார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதைச் சுடரொளி தி. பெரியார் சாக்ரடீசு நினைவு நாள் – தமிழர் தலைவர் உரை
கடந்த 12.5.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில், சுயமரியாதைச் சுடரொளி தி. பெரியார் சாக்ரடீசு நினைவு நாள் உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்..
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
குடும்பப் பாசம்; கொள்கைப்பாசம். அந்த கொள்கைப்பாசத்தோடு இருக்கிற தோழர்கள். அதேமாதிரி கவிஞர் வாசல் எழிலன், இராவணன் – மல்லிகா இப்படிப்பட்ட பல தோழர்கள். நன்றி உரை கூறவிருக்கின்ற புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் பொருளாளர் தோழர் மாணிக்கம் அவர்கள். எல்லாவற்றுக்கும் மேலே கவிஞர் அவர்கள், ஒரு நல்ல தொடக்க உரை ஆற்றினார்.
‘‘சுயமரியாதை இயக்கமும்,
மூடநம்பிக்கையும்!”
சில பேருக்கு பெரியார் சாக்ரட்டீசைப் பார்க்கவும், பழகவும் வாய்ப்பு இருந்திருக்காது. நல்ல இளைஞனை நாம் இழந்தோம். அந்த இழப்புக்கு ஆறுதல் இல்லை. இருந்தாலும் கொள்கைப்பூர்வமாக வரும்போது, அந்த துயரத்தைப் போக்கவும், துன்பத்திலிருந்து வெளியே வரவும், நமது தொண்டறத்தைத் தொடரவும் இது ஒரு வாய்ப்பு. அதனால்தான் ஒரு நல்ல தலைப்பாக ஆக்கிக்கொண்டு சொல்லவேண்டும் என்றுதான், ‘‘சுயமரியாதை இயக்கமும், மூடநம்பிக்கையும்” என்ற தலைப்பில் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். புதுமை இலக்கியத் தென்றல் தலைவர், ‘‘ஓ… என் சகோதரரே, ஒன்றுக்கும் அஞ்சாதீர்’’ என்ற கவிதை சொன்னார்கள்.
Rationalist Capital Periyar Thidal
‘‘Science and Religion: Are they compatible?’’ ‘பால் கர்ட்ஸ்’ எழுதிய புகழ்பெற்ற புத்தகம், நான் அமெரிக்கா சென்றபோது கையெழுத்துப் போட்டு, அவர் என்னிடம் கொடுத்தார். நம்மைப் போலவே நிறைய புத்தகங்கள் போட்டு, பரப்பக்கூடியவர். அங்கே ஒரு பதிப்பகம் பெரிய அளவில் இருக்கிறது. அவர் மறைந்துவிட்டார். ஓர் அற்புதமான ஆய்வாளர். ஆனால், பெரியார் உருவாக்கிய பகுத்தறிவு இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்பது, மக்கள் இயக்கம். மற்றவை எல்லாம் அறிவு ஜீவிகள் மத்தியில் ஓர் அரங்கத்திற்குள் இயங்குபவை. தமிழ்நாட்டுக்கு வந்து பார்த்துவிட்டு, பெரியார் திடலை Rationalist Capital Periyar Thidal என்று பேசினார்கள். அங்கே இருக்கும் அமைப்பினர், அமெரிக்காவில் என்னை செயிண்ட் லூயிஸ் அழைத்துச் சென்றார்கள். நான் இதற்காக டெட்ராய்டில் மகள் வீட்டிலிருந்து விமானம் மூலமாக அங்கு சொற்பொழிவாற்றச் சென்றேன். மிகவும் ஆர்வமாகப் பலர் வந்திருந்தார்கள். அங்கெல்லாம் ஒருவர், இருவர்தான் வரவேற்பார்கள். மற்றவர்கள் வந்து, அவரவரது பணியில் இருப்பார்கள். இருவரில் நம்ம அரசு செல்லையா அந்தப் பகுதியில் இருந்தார். அவர் என்னை அழைத்துச் சென்றார். சென்றவுடனே அங்கே ஓர் அரங்கம். நான் நினைத்தேன், இங்கே போட்டுள்ளது போன்று நிறைய நாற்காலிகள் போட்டிருப்பார்கள் என்று. ஆனால், அங்கொரு நாற்காலி, இங்கொரு நாற்காலி என Round Table Conference மாதிரி போட்டிருந்தார்கள். சோபா செட் மாதிரி போட்டு, ரொம்ப வயதானவர்கள், மிகவும் வசதியாக ஆறு பேர், ஏழு பேர் அமர்ந்திருந்தார்கள். இந்தம்மாவும் வந்தாங்க. நான், ‘‘என்னங்க இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்கோம். 10 பேர் கூட இல்லையே’’ என்றேன்.
“O… Biggest crowd…’’
நிகழ்வை ஒருங்கிணைத்திருந்த அந்தம்மா, பணியிலிருந்து கொஞ்சம் தாமதமாக வந்தாங்க. நாங்க காத்திருந்தோம். வந்திருந்தவங்க எல்லாரும் என்னைவிட மூத்தவர்கள். என்னிடம் கைகொடுத்து வாழ்த்தினார்கள். பிறகு 15 பேர் வந்தார்கள். அந்த அம்மா பேசும் போது, “O… Biggest crowd’’ என்றார்கள். சோபாவில் உட்கார்ந்து ஒவ்வொருத்தரும் கேள்வி கேட்டு, பதில் சொல்லி நிகழ்ச்சி நடந்தது. கடைசியில் சொன்னாங்க. “O… Mr.Veeramani don’t think that this is a very small audience. So far in our history this is the biggest crowd, a large number of audience’’ என்று சொன்னார்கள்.
யாருக்கும் கிடைக்காத
பழைய பைபிள் புத்தகம்!
நான் பேசி முடிந்த பிறகு, ஏதாவது அன்பளிப்பு வழங்க நினைத்தார்கள். ‘‘பைபிளில் பின்னாடி நிறைய மாத்திட்டாங்க. நான் யாருக்கும் கிடைக்காத பழைய பைபிள் புத்தகத்தை வைத்திருக்கிறேன், பெரிய புத்தகம்’’ என்று அங்கே பொறுப்பிலிருந்த தலைவர் சொன்னார்.
‘‘Original புத்தகத்தை அப்படியே வைத்திருக்கிறேன். நாங்க இதுவரையிலும் பலரது பேச்சுகளைக் கேட்டுள்ளோம். ஆனால், உங்க பேச்சு – பெரியாரைப் பற்றி கேட்டபிறகு, இந்தப் புத்தகம் ரொம்ப முக்கிய மானவங்ககிட்ட இருக்கணும். அதனால் உங்களுக்கு இதையே அன்பளிப்பாக வழங்குகிறோம்’’ என்று எழுதிக் கொடுத்தார்கள். வாங்கி வந்து நூலகத்தில் கொடுத்திருக்கிறேன். நமது நூலகத்தில் இருக்கிறது. அது 200 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்டது. பழைய கருத்துகள் மாற்றப்படாமல் பல விசயங்களை உள்ளடக்கி இருக்கிற புத்தகம் அது. மேல்நாட்டில் அப்படி ஒரு நிகழ்வு!
‘‘Putting centuries in a capsule’’
நமது நாட்டில் பார்த்தீர்கள் என்றால், அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். பிரிந்த பிற்பாடு 18 ஆண்டுகள் கழித்துப் பெரியாரைப் பார்த்ததைப் பற்றி முதலமைச்சர் அண்ணா அவர்கள் மனம் திறந்து பேசும் போது சொல்கிறார். அய்யாவுக்கும் பெருமையாக இருக்கிறது. திருச்சியில் பிறந்தநாள் விழாவில் பேசுகிறார். ‘‘Putting centuries in a capsule’’ என்ற ஆங்கிலச் சொற்றொடரைக் குறிப்பிட்டார். அதாவது Putting centuries – பல நூற்றாண்டுகளை – Capsule – ஒரு சின்ன குளிகை – மருந்து குளிகை – அதில் எப்படி மருந்து இருக்கிறதோ அதுமாதிரி பெரியாரின் கொள்கைகள் இருக்கிறது என்று பதிவு செய்தார்.
பெரியார் என்ன செய்தார், என்று கேட்கிறார்கள்?
புரட்சிக்கவிஞர், ஒருகாலத்தில் ‘‘சுப்பிரமணியத் துதியமுது’’ பாடியவர். அவரையும், சுயமரியாதை இயக்கம் ஈர்த்தது. அப்புறம் அவர் எவ்வளவு மாறினார். இப்படி எத்தனையோ சொல்லலாம் நண்பர்களே! ஜாதி ஒரு மூடநம்பிக்கை. ஜாதி ஒரு கட்டு – மனக்கட்டு. புரட்சியாளர் அம்பேத்கர் அழகாக, ‘‘அதுவொன்றும் கட்டடம் அல்ல. புல்டோசரை வைத்து இடிப்பதற்கு; அந்தக் கட்டடம் இருக்கும் இடம் மூளை!” என்று சொன்னார். எந்த நாட்டில் இப்படிப்பட்ட காட்டு மிராண்டித்தனம் உச்சத்தில் இருக்கிறது? நாம் நன்றாக வளர்ந்துவிட்டோம். பலபேருக்குத் தெரியாது. இவ்வளவும் செய்தபிறகு, பெரியார் என்ன செய்தார்? என்று கேட்கிறார்கள். இவர்களைச் சமமாக அமர வைத்தவரே பெரியார்தான். நம் அனைவரையும்தான்! இங்கே அமர்ந்திருப்பவர்கள், யார், என்ன ஜாதி? என்று தெரியாது. மூடநம்பிக்கைகளில் முதல் மூடநம்பிக்கை ஜாதி. ஒருத்தன் தலையில் பிறந்தான்; இன்னொருத்தன் தோளில் பிறந்தான்; இன்னொருத்தன் தொடையில் பிறந்தான்; இன்னொருத்தன் காலில் பிறந்தான்; இன்னொருத்தன் எங்கே பிறந்தான்னு தெரியாத அளவுக்கு அதைவிட கீழே இருந்தான் என்று எழுதி வைத்திருக்கிறார்களே!
இந்த மாதிரி பிரசவம் பார்த்ததேயில்லையே:
டாக்டர் டி.எம்.நாயர்
டாக்டர் டி.எம்.நாயர் திராவிட இயக்கத்தை உண்டாக்கி யவர். அவர் ஆற்றிய உரைகள் நம்மிடம் இருக்கின்றன. அந்த உரைகளைப் புத்தகங்களாகப் போட்டிருக்கிறோம். அந்த புத்தகங்களில் ஒரு பெரிய சிறப்பு என்ன என்றால் – அவர் கேட்டார், “மூடநம்பிக்கைகளில் இவ்வளவு மோசம் உண்டா?” என்று! ‘‘நான் ஒரு பெரிய டாக்டர். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையாளன் தான்” – அழகாகச் சொன்னார். ‘‘நானும் எவ்வளவோ பிரசவங்களை மருத்துவமனையில் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி தலையில் பிறக்கிறது; தோளில் பிறக்கிறது; இந்த மாதிரி பிரசவம் பார்த்ததேயில்லையே?” என்றார்.
அடுத்த கேள்வி நம்மாளுங்க மேலே மேலே போனாங்க. கலைஞர் கேட்டார். எல்லாம் பெரியார் பாடம். ‘‘சரி, தோளில் பிறந்தான்; தொடையில் பிறந்தான்; காலில் பிறந்தால் என்ன? உடம்பிலேதான் பிறந்தி ருக்கான். அவன் கடவுள்தானே? எங்க பிறந்தாலும் ஒன்னுதானே?’’ என்றார்.
தலையைவிட முக்கியமானது
கால்தானே?
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை வேண்டி எல்லா ஊர்களிலும் பிரச்சாரம் செய்துகொண்டு வந்தார் அய்யா அவர்கள். மதுரையில் பேசினார். அடுத்து திருநெல்வேலியில் பேசுகிறார். கடவுளைப் பற்றி சொல்லும் போது, “உன் பாதார விந்தத்தை என் தலைமீது வைத்து, என்றுதானே, கடவுள் பாதத்தைத் தன் தலையில் தானே வாங்கிக்கொள்கிறார்கள். இப்போதுகூட காலில்தானே விழுகிறான். அப்போது தலையைவிட முக்கியமானது கால்தானே? அப்படியே வைத்துக்கொள்; எங்க ஆளை நீ மதிக்கணுமா? இல்லையா? காலில் பிறந்தவனுக்குத்தானே முன்னு ரிமை கொடுக்கவேண்டும். யாரும் தலையைப் போய்க் கட்டிப் பிடிப்பது இல்லையே.’’
இந்தக் கருத்தை, பெரியாரைத் தவிர, வேறு யாரும் சொல்லவில்லை. ஆச்சரியமாக இருந்தது; எனக்கெல்லாம் ஒரே சிரிப்பு. புலவர் எழுதிக்கிட்டிருக்கும் போதே சிரித்தார்.
அய்யா அதை கவனிச்சிருக்காரு. வாகனத்தில் திரும்பி வரும்போது பேசிக்கொண்டு வருகிறோம். ‘‘என்ன, நான் பேசிகிட்டு இருக்கும்போது நடுவில் இரண்டு பேரும் சிரிச்சுகிட்டு இருந்தீங்களே, எதுக்கு சிரிச்சீங்க’’ன்னு கேட்டார்.
அய்யா அவர்கள் கேட்கும்போதே, மறுபடியும் எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
அய்யா, ‘‘என்ன மறுபடியும் சிரிக்கிறீங்க? ஏன் தவறாக எதாவது பேசிவிட்டேனா?’’ என்று கேட்டார்.
நாங்கள், ‘‘இல்லை அய்யா, இதுவரையில் நாங்கள் கேட்டதே இல்லை. நீங்கதான் இந்தக்கருத்தை சொல்றீங்க. ‘உன் பாதாரவிந்தங்களில்’ அப்படின்னு கடவுள் சிலை காலில்தானே விழுகிறான்’’ என்று!
இப்போது ஒரு புது வியாதி நம் ஊரில், ‘‘பரிந்துரை என்று வருகிறவர்கள், நாம் கொஞ்சம் அசந்த நேரம் பார்த்து, ‘டபக்’குன்னு காலில் விழுந்துவிடுகிறார்கள். காலை ரொம்ப ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதுமாதிரி இருக்கிறது. இவ்வளவு பெரிய மூடத்த னத்தை உண்டாக்குகிற நேரத்தில், ‘‘காலில் பிறந்தால் என்னய்யா? கடவுள் கால்கள்தானே அது! நம்மாள் கால்கள் இல்லையே? அப்புறம் ஏன் கீழானது என்று நினைக்கிறாய்?’’ என்று அய்யா சொன்னார்.
தந்தை பெரியாரிடம், கல்லூரி மாணவர் எழுப்பிய கேள்வி!
ஆதிதிராவிடர் தோழர்கள் கூட்டத்தில் எழுதிக் கேட்டார்கள். நான் இதைப்பற்றி பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். உங்களுக்கும் தெரியும். ‘‘தலையில் பிறந்தால், பிராமண ஜாதி; தோளில் பிறந்தால், சத்திரிய ஜாதி; தொடையில் பிறந்தால், வைசியன்; காலில் பிறந்தால், சூத்திரன்; அப்புறம் பஞ்சமன் – அய்ந்தாம் ஜாதியான நாங்கள் எங்கே பிறந்தோம்? எங்களுக்கு Allotment இல்லையே? எங்க பிறந்தோம்?’’ என்று எழுதி கேட்கிறார் கல்லூ ரிக்குச் சென்று வந்த மாணவர்.
அய்யா Spontaneous ஆக பதில் சொல்வார் Computer மாதிரி! ‘‘நீங்கள்தான் உங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தீங்க” என்று அய்யா பதில் சொன்னார்.
‘‘அவன் தான்யா ஒழுங்கா பிறந்தவன்.’’ எவ்வளவு அழகாகச் சொன்னார் பாருங்கள். அன்றைக்கும் மக்கள் கைதட்டினார்கள். மகிழ்ச்சியாக இருந்தார்கள். அய்யோ இப்படி சொல்லிட்டாங்களேன்னு நினைக்கவில்லை.
அய்யா, ‘‘நான் சொல்லிட்டேன்னு நீங்க கைதட்ட றீங்க. ஆனால், எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா? மக்களை எவ்வளவு கேவலமாக நினைக்கி றானே? எங்களை எல்லாம் ஒதுக்குறானே?’’ என்றார்.
சுயமரியாதை இயக்கம் முதலில் கை வைத்தது மூடநம்பிக்கை, ஜாதி – தீண்டாமை, நெருங்காமை, பாராமை இவற்றின்மீது!
இன்னும் சில பேர் என்ன சொல்றாங்க, அய்யாவை; இந்த இயக்கத்தைக் கொஞ்சம் பின்னால் தள்ளுவதற்கு ‘இதனுடைய சிறப்புகளை ஒத்துக்கொள்ளக் கூடாது. இந்த இயக்கத்துக்கு முக்கியத்துவம் வரக்கூடாது. முன்னுரிமை வந்துவிடக்கூடாது.’ அதற்காக, ‘என்னங்க பெரியார் சொல்லிட்டாரு. அதுக்கு முன்பே வள்ளலார் சொல்லிட்டார். அதுக்கும் முதலில் பாரதியார் பாடியிருக்கார், அதுக்கு முன்பே திருவள்ளுவரே சொல்லிட்டார். பெரியார் அப்புறம்தான் சொன்னார்’ என்று சொல்வார்கள்.
பெரியாரின் சிறப்பை அவர்களால் செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை!
பெரியாரின் சிறப்பை அவர்களால் செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை. கொஞ்சம் அப்படியே – ‘‘நட் லூஸ் தியரின்னு’’ சொல்வாங்க. மெதுவாக ஒரு நட்டைக் கழட்டி விடுவான். ‘எல்லாம் சரிதாங்க. ஆனா…’ அப்படின்னு சொன்ன உடனேயே, நம்மாளு கழண்டிடுவான். அதுதான் மிக முக்கியம்.
‘‘பறைச்சியாவது ஏதடா? பனத்தியாவது ஏதடா? இறைச்சி தோல், எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ’’ என்று சிவவாக்கியார் பாடியிருக்கிறார். பாட்டுப் பாடிட்டு போயிட்டாரு. பாரதியார் கவிதை எழுதிட்டு போயிட்டாரு. அவர் கவிதையிலேயே ஒரு தடவை, ‘‘ஆயிரம் உண்டிங்கு ஜாதி; இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி?’’ என்றார்.
பெரியார் அடுத்த வார்த்தை கேட்டார், “ஏய்யா, ஆயிரம் ஜாதியை வைச்சுகிட்டிருந்தால் அப்புறம் அந்நி யர் புகாம, என்னய்யா பண்ணுவாரு?” என்று கேட்டார்.
எதிர்நீச்சல் அடித்து வரலாற்றில்
பெரிய வெற்றி கண்ட
ஒரே தலைவர் தந்தை பெரியார்!
அப்படி அய்யா பகுத்தறிவு அடிப்படையில் பேசக்கூடியவர். காலத்தால் முன்பு பிறந்தவர்கள் பலரும் பாடியிருக்கலாம்; எழுதியிருக்கலாம்; பேசியிருக்கலாம். நாம் அதையெல்லாம் மறுக்க வில்லை. பெரியார்தான் முதல் முதலில் சொன்னாருன்னு, நாம சொல்ல வரவில்லை. மற்றவர்களை விட பெரியாருடைய சாதனையை ஏன் பாராட்டுகிறோம் என்று சொன்னால், இதுதான் பதில் – இளைய தலைமுறை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். “எல்லாரும் சொல்லிட்டு போயிட்டாங்க; எழுதிட்டு போயிட்டாங்க. ஆனால், அதற்காகவே களம் கண்டு, போராடி, அந்தப் போராட்டத்தினுடைய வெற்றியைச் சமத்துவமாக இந்த சமுதாயத்துக்கு அமைத்து, எதிர்நீச்சல் அடித்து வரலாற்றில் பெரிய வெற்றி கண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார். ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கம். அதுதான் சிறப்பு!
பெரியார் ஒருத்தர்தான் கருத்துச் சுதந்திரம்; அறிவுச்சுதந்திரம் கொடுத்தார்!
2000 ஆண்டுகளுக்கு முன்னால், ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்று வள்ளுவர் சொல்லிட்டார். புத்தர் அதுக்கும் முன்பே, ‘‘ஜாதி கிடையாது’’ன்னு சொல்லிட்டார். அதெல்லாம் சரி, புத்தம் எங்க இருக்கு? அதே புத்தம் சீனாவில் இருக்கு; மலேசியாவில் இருக்கு. பெரிய மதமாக இருக்கிறது. மார்க்கமாக இருக்கிறது. ஆனால், இருக்கிற மதம் என்னாயிற்று என்றால், இவன் அவனை விட மோசமாக கீழே விழுந்து விழுந்து கும்பிடறான். சிரிக்கிற புத்தர்; தூங்குகிற புத்தர்; பெண் புத்தர்; ஆண் புத்தர். எல்லாம் புத்தர் புத்தருன்னு வைத்து வசூல் பண்றான். பெரியார் ஒருத்தர்தான் கருத்துச் சுதந்திரம்; அறிவுச்சுதந்திரம் கொடுத்தார். அறிவுக்கு சுந்தந்திரத்தைக் கொடுத்தார்.
மதம் என்ன சொன்னது?
‘‘வேதம் – நம்பு இல்லேன்னா உனக்கு நரகம். கேள்வி கேட்காதே!’’ என்று சொன்னது! மனுதர்மத்திலேயே கடைசி சுலோகம் ஒன்று இருக்கிறது. நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள்.
‘‘இதைக் கேள்வி கேட்கிறவன் தண்டனைக்குரியவன். இதை சந்தேகப்படக்கூடாது. அறிவினால் – தர்க்க அறிவினால் இந்த நூலை ஆராயக்கூடாது. அவன் நரகத்துக்குப் போவான். அவனுக்குத் தண்டனை. அவன் பிரம்மஹத்தி தோசத்துக்கு ஆளாவான்’’ இப்படியெல்லாம் எழுதி வச்சிருக்கான்.
‘‘நான் சொல்வதையும் கேட்காதே’’ என்றவர் பெரியார்! இந்த சுதந்திரம் யார் கொடுத்திருக்கிறார்கள்?
‘‘இன்னிக்கு என்னை புரட்சியாளர் பெரியார் சமுதாயத்தை மாத்தினவருன்னு, நீங்களெல்லாம் பாராட்டுகிறீர்கள். இன்னும் 200 ஆண்டுகள் கழிந்த பிற்பாடு என்ன ஆகும்? ‘‘ராமசாமின்னு ஒரு பிற்போக்குவாதி இருந்தான்’’ என்று ஒருத்தன் சொன்னால், நான் அதை வரவேற்பேன். ஏனென்றால் கருத்துகள் வளரவேண்டும். என்னுடைய கருத்து நாளைக்கு சின்னக் கோடு ஆகிவிடும். என் கருத்து சாதாரண கருத்தாக ஆகிவிடும். அவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டுவிடும், மனிதன் சுதந்திரமாகச் சிந்தித்தால்!’’ என்று சொன்னவர் பெரியார்.
விலங்குகள் அற்ற – விலங்குகளை உடைத்த ஒரு மனிதனாக இருந்தால், இந்த அளவுக்குப் போவான். இதுதான் பெரியாருடைய சிந்தனை! இந்த மாதிரி எத்தனையோ சொல்லலாம்.
(தொடரும்)