சென்னை, ஆக. 25- தமிழ்நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக, மாநில அரசு புதிய கணக்கெடுப்பு நடத்த டெண்டர் கோரியுள்ளது. இந்த ஆய்வு தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும். 2015-2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முந்தைய கணக்கெடுப்பின்படி, தமிழ் நாட்டில் சுமார் 67.74 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப் பட்டது. தற்போது, 2025ஆம் ஆண்டுக்கான விரிவான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்கள்: பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தோர்: ஆந்திரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்த தனிநபர்கள், குடும்பங்கள், மற்றும் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். பணி மற்றும் வாழ்க்கை நிலை: தொழிலாளர்களின் வேலை நேரம், ஊதியம், பணியிட வசதிகள், தங்குமிடம், உணவு மற்றும் பிற வாழ்க்கைச் செலவுகள் ஆகியவை விரிவாக பகுப்பாய்வு செய்யப்படும்.
சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு: உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள், சுகாதார வசதிகள் மற்றும் அரசு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.
கொள்கை உருவாக்கம்: இந்த ஆய்வின் முடிவுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அரசுக்கு உதவும். இந்தக் கணக்கெடுப்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.