இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
சென்னை, ஆக.25- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22ஆம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரை மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், 100 வயதாகியுள்ள அவருக்கு வயது மூப்பு காரணமாக உடம்பில் ஏற்பட்டுள்ள மற்ற சில பிரச்சினைகளுக்காக நரம்பியல், நுரையீரல், இதயம் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மருத்துவமனை இயக்குநரும், மூத்த இதய சிகிச்சை நிபுணருமான மருத்துவர் தில்லை வள்ளல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு
ரூபாய் ஒரு கோடியை ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம் வழங்கியது
சென்னை, ஆக. 25- ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம் வணிக ரீதியான வளர்ச்சியையும் தாண்டி, இந்த சமூகத்துக்கு பங்களிப்பை வழங்கி வரும் வகையில், இந்நிறுவனம் தனது பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் சமீபத்தில் தமிழ் நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையானது டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான நிதியுதவி, மருந்துகள் மற்றும் ஏழை, எளிய சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச அல்லது குறைந்த செலவில் மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட சேவைகளுக்கு உதவும்.
இதற்கான விழாவில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர்கள் ஜி.ஆர்.அனந்தபத்மநாபன். ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறும் போது. எங்களைப் பொருத்தவரை வணிகமும், சமூகமும் பிரிக்க முடியாதவை.
சமூகத்துக்கு திரும்பக் கொடுப்பது ஒரு தொண்டு. இது ஒரு பரிசளிப்பு செயல் அல்ல, மாறாக நாங்கள் நன்றியுடன் ஏற்கும் ஒரு கடமையாகும். இதைச் சாத்தியமாக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்” என்றனர்.