நெல்லை, ஆக. 25– “வேரோடு பிடுங்கப்படும் பயிர்தான் பிரமாண்டமாக வளரும்” என்று அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் நேரு பதிலடி கொடுத்தார். தமிழ்நாட்டில் திமுகவுக்கு போட்டியே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தி.மு.க. வெற்றி பெறும்!
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே ரூ.5 கோடி மதிப்பில் அமையவுள்ள முதல்வர் படைப்பகம் கட்டும் பணிகளுக்கு சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, “15 ஆண்டுகளாக பாஜக வேரோடு பிடுங்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. திமுக கூட்டணிதான் வெற்றி பெற்றது.
விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நடவு செய்தால் அந்தப் பயிர் இன்னும் பெரியதாக – செழிப்பாக வளரும். அதுபோல அவர்கள் பிடுங்க நினைத்தால் எங்கள் ஆட்சி சிறப்பாக இருக்கும்.
எதிர்காலத்திலும் திமுகதான் வெற்றி பெறும். அமித்ஷா பேசிய இந்த ஊரில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம்” என்று கூறினார்.
“அ.தி.மு.க. – பா.ஜ.க. தொண்டர்கள் ஒத்துழைக்கவில்லை”
அதிமுக – பாஜக கூட்டணி குறித்துப் பேசிய அமைச்சர், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது இருண்ட ஆட்சியாக இருந்தது, அது அமித்ஷா கண்ணுக்குத் தெரியவில்லை. அமித்ஷா தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கூட்டணி ஆட்சி என்கிறார், எடப்பாடி பழனிசாமி தனித்து ஆட்சி என்கிறார். ஆனால், தொண்டர்கள் இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.
மேலும், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை யார் எந்தப் பெயரை வைத்து அழைத்தாலும், மீண்டும் தமிழக முதலமைச்சராக தளபதிதான் வரப்போகிறார். எம்.ஜி.ஆருக்கு இருந்த மகளிர் ஆதரவைத் தாண்டி இப்போது முதலமைச்சருக்கு அவர்களின் ஆதரவு பெருகி வருகிறது. நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.