சென்னை, ஆக.25– மருத்துவ சேவை வழங்குவதிலும், மக்களின் உடல்நலனை காப்பதிலும் தமிழ்நாடு நம்பர் 1 என்பதை உறுதி செய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறப்பு மருத்துவ முகாம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமை கடந்த 2ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அன்றைய நாள் 38 மாவட்டங் களில் 38 இடங்களில் நடந்த முகாம்களில் 44,418 பேர் பயன் பெற்றனர்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி 48,046 பேர் பயனடைந்தனர். ஆகஸ்ட் 16ஆம் தேதி விழா விடுமுறை நாள் என்பதால் முகாம் நடை பெறவில்லை. இந்நிலையில், மூன்றாவது வாரமான நேற்று முன்தினம் 38 மாவட்டங்களில் 38 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த முகாம்களில் 56,245 பேர் பயன் பெற்றனர்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்களில் பங்குகொள்ளும் பயனாளர்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இதய மருத்துவம், எலும்பியல் மருத் துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை, மகப்பேறு, இயன்முறை மருத்துவம், பல், கண் மருத்துவம், மனநலம், குழந்தைகள் நலம், நுரையீரல் மருத்துவம் ஆகிய மருத்துவச் சேவைகள் மற்றும் இந்திய மருத் துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு வழங்கப்படுகிறது.
பரிசோதனைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன. மூன்றாம் வாரமாக நடந்த முகாம்களில் 56,245 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். மருத்துவ சேவை வழங்குவதிலும், மக்களின் உடல் நலனை காப்பதிலும் நம்பர் 1 என உறுதிசெய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.