சென்னை, ஆக. 25- ‘தமிழ்நாட்டை பின்பற்றி இங்கிலாந்து, கனடா, இலங்கை போன்ற நாடுகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவது உலகக் கண்ணோட்டத்துடன் தமிழ்நாடு செயல்படுவதை உறுதி செய்கிறது’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
தொண்டர்களுக்கு கடிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று போற்றுகிறது பழந்தமிழ் இலக்கியம். அதனால்தான், பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது என்பதை முக்கியமான திட்டமாக ஒரு நூற்றாண்டுக்கு முன்பே செயல்படுத்தியது திராவிட இயக்கமான நீதிக்கட்சியின் நிருவாகத்தில் இருந்த சென்னை மாநகராட்சி மன்றம்.
அதன் தலைவராக இருந்த நீதிக்கட்சி யின் நாயகர் பி. டி.தியாகராயர், 16.9.1920 அன்று மாணவர்களுக்கு உணவு வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றி அதனடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அது, சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களின் பசி தீர்க்கும் வகையில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப் பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் அது சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டு, கருணாநிதி ஆட்சியில் முட்டையுடன் கூடிய நிறைவான சத்துணவு திட்டமானது.
பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழலில், அவர்கள் பள்ளி செல்லும் தங்கள் குழந்தைகளுக்கு காலை உணவை வழங்க முடியாத நிலையையும் பல இடங்களில் காண முடிந்தது.
இதற்கு தீர்வு காண வேண்டும் என்ப தற்காக 7.5.2022 அன்று, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்னால் அறிவிக் கப்பட்டது. 15.9.2022 அன்று அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ குழந்தைகளுடன் அமர்ந்து, சாப்பிட்டு மகிழ்ந்தேன்.
முதல் கட்டமாகத் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 1,545 தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டது. அடுத்த கட்டமாக, 2023ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள 433 அரசு தொடக்கப்பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஊரக பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
உலக கண்ணோட்டத்துடன் தமிழ்நாடு
தற்போது மொத்தம் 34 ஆயிரத்து 987 தொடக்க பள்ளிகளில், 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் சத்தான காலை உணவுடன், தெம்பாக கல்வி பயின்று வருகிறார்கள்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி உள்ள மாற்றங்களையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலும் இதனை பின்பற்றுவதற்கான செயல்திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டதும், இங்கிலாந்து-கனடா-இலங்கை உள்ளிட்ட நாடுகளில் காலை உணவுத் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டிருப்பதும், உலகக் கண்ணோட்டத்துடன் தமிழ்நாடு செயல்படுவதை உறுதி செய்கிறது.
அறிவு வளர்கிறது
அடுத்தகட்டமாக காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
26ஆம் ந்தேதி (நாளை) சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தை பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த்மான் முன்னிலையில் தொடங்கி வைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். இந்த விரிவாக்கத்தின் மூலம் நகர்ப்புறம் சார்ந்த 2 ஆயிரத்து 429 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 6 ஆயிரம் மாணவ-மாணவியர் பயன் பெறுவர். திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களில் ஒன்றான காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் போதெல்லாம் பள்ளி குழந்தைகளின் வயிறு நிறைகிறது. அவர்களின் அறிவு வளர்கிறது.
பெற்றோரின் மனதில் மகிழ்ச்சி புன்னகை மலர்கிறது. தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.