குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 Min Read

சென்னை, ஆக. 25 ஒன்றிய பாஜக அரசு அரசியல் எதிரிகளை பழி வாங்க புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் காக்க, மக்களாட்சியைக் காக்க, அரசியலமைப்பைக் காக்க, குடியரசுத் துணைத் தலைவராக சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட் பாளா் சுதா்சன் ரெட்டி நேற்று (24.8.2025) சென்னை வந்தாா். சென்னை வந்த சுதர்சன் ரெட்டியை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்றனர்.  அவர்களை சந்தித்து அவர் ஆதரவு  திரட்டினாா்.

இந்தியா கூட்டணி குடியரசு; துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியுடனான சந்திப்பு கூட்டத்தில் அவரை ஆதரித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்  பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடிய  சுதர்சன் ரெட்டியை தமிழ்நாட்டுக்கு வருக, வருக,  என வரவேற்கிறேன்! திமுக தலைவராக மட்டுமல்ல மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பிலும் முதலில் அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தகுதி வாய்ந்தவர்

அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசராக பணியாற்றிய நீங்கள், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு மிகவும் தகுதிவாய்ந்தவர்! அதனால்தான், இந்தியா கூட்டணி சார்பில், உங்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்.

உங்களை ஒருமனதாக தேர்ந்தெடுத்து அறி வித்த இந்தியா கூட்டணி யின் அனைத்துத் தலைவர் களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்தியா கூட்டணியினர் மட்டு மில்லை, ஜனநாயகத்தின் மீது மக்களாட்சித் தத்து வத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அத்தனை பேரும் உங்களைத்தான் குடி யரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

தென் மாநிலத்தைச் சேர்ந்த இவருடைய தகுதியை, வளர்ச்சியை எல்லோரும் கவனிக்கவேண்டும். உஸ்மானியா யூனிவர்சிட்டியில் சட்டம் பயின்று, 1971 இல் வழக்குரைஞராக பயிற்சி செய்ய தொடங்கினார். பின்னர், ஆந்திரம் மாநில அரசு வழக் குரைஞர் – ஒன்றிய அரசின் கூடுதல் நிலை ஆலோசகர் – ஆந்திரம் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி – கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்று படிப்படியாக முன்னேறி, உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து, இன்றைக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உயர்ந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட தன்னுடைய அறுபது ஆண்டுகால வாழ்வை, சட்டம் – நீதி ஆகியவற்றுக்காக அர்ப்பணித்திருக்கிறார். இவர் நீதியரசராக பணியாற்றிய காலத்தில், நேர்மையாக, சுதந்திரமாக செயல்பட்டு, மக்களுடைய உரிமைகளையும், சமூகநீதியையும் உயர்த்திப் பிடித்து, அரசியலமைப்புச் சட்டத்தின் மாண் பையும் போற்றி பாதுகாத்தவர்.

கோவா மாநில லோக் ஆயுக்தா தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ஏன் இன்றைக்கு தேவைப்படுகிறார் என்றால், பாஜகவினர் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க நினைக்கின்ற இந்த நேரத்தில், அரசியல் சட்டத்தை பாதுகாத்த நீதியரசரான இவர், அதை பாதுகாக்கின்ற பொறுப்புக்கு தேவைப்படுகிறார்! சுதர்சன் ரெட்டியை பொறுத்த வரைக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கக் கூடியவர்.!

முக்கியமான பணி எது?

அதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான், புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநாட்டில் அவர் பேசியது. அவர் பேசியதைச் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், “இது திருவள்ளுவர், பாரதியார், பெரியார், கலைஞர் ஆகியோருடைய மண். போராட்டக் குணத்தை இந்த மண் எப்போதும் விடுவதில்லை” என்று சொல்லி, “புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகப் போராடுவது நம்முடைய கடமை. இது இந்த நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இவர்கள் கொண்டுவர நினைக்கின்ற தேசிய கல்விக் கொள்கை மனித மாண்புகளுக்கு எதிரானது. நான் – எனது -என்னுடையது என்ற கலாசாரத்தை மட்டுமே இது உருவாக்கும். பன்முகத் தன்மையையோ, கல்வியின் ஜனநாயகப் பரவலையோ இது உருவாக்காது” என்று தன்னு டைய கருத்துகளைப் பதிவு செய்து, தமிழ் நாட்டின் உணர்வுகளை உறுதியுடன் வெளிப்படுத்தினார்.

இப்படி, அரசியலமைப்புச் சட்டத் துக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், முற்போக்காகவும், மக்களுக்காகவும் பேசுகின்ற இவரை நாம் முன்மொழிய, இதைவிட பெரிய காரணம் தேவையா? ஆனால், மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசரை உள்துறை அமைச்சர் என்னவென்று விமர்சிக்கிறார்? நக்சல் என்று சொல்கிறார். ஒரு உள்துறை அமைச்சர், தன்னுடைய பொறுப்பை மறந்து, ஒரு மேனாள் நீதியரசர் பற்றி அபாண்டமாக பேசி இருக்கிறார். அவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை. அந்த கையாலாகாத நிலையை மறைக்க, நீதியரசர் மேல் பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *