இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வந்தார், தன் மனம் போன போக்கில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டியுள்ளார்.
தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறியப் போவதாகக் கொக்கரித்துள்ளார்.
அ.தி.மு.க.வை எப்படியெல்லாம் அச்சுறுத்தித் தன் கூட்டணிக் கூண்டுக்குள் பா.ஜ.க., அடைத்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தியே!
‘தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி’ என்கிறார் அமித்ஷா. ‘கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை; அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும்’ என்று அடித்துச் சொல்லுகிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இப்பொழுது தமிழ்நாடு வந்த போதுகூட கூட்டணி ஆட்சி என்றுதான் அமித்ஷா போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போனார். கூட்டணிக் கட்சிக்களுக்குள்ளேயே உள்ள ‘பஞ்சாயத்து’த் தீரவில்லை.
இந்த இலட்சணத்தில் தி.மு.க.வையும், தி.மு.க. கூட்டணியையும் வீழ்த்தப் போவதாக மோடியின் அத்தியந்த நண்பரான அமித்ஷா ‘ஆவேசமாக’ப் பேசுகிறார்.
அகில இந்திய அளவில் கல்வி, பொருளாதாரம், பெண்களுக்கான வளர்ச்சித் திட்டம், மருத்துவம், வேலை வாய்ப்புப் போன்றவற்றில் ‘திராவிட மாடல்’ அரசே முதல் நிலையில் இருப்பதாக ஒன்றிய பிஜேபி அரசே நற்சான்றுகள் வழங்கியுள்ள நிலையில், ஒன்றிய ஆட்சியில் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கக் கூடிய ஒருவர் வாய்க்கு வந்தவாறு எல்லாம் திமுக ஆட்சியையும், முதல் அமைச்சரையும் குறை சொல்வது பொறுப்பற்றது என்பதல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?
அண்மை நாட்களாக வாக்குத் திருட்டு, 130 ஆவது திருத்தம் என்ற கருப்புச் சட்டம் என்று தனக்குத்தானே கழுத்தில் தாம்புக் கயிறை இறுக்கமாக அழுத்தித் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் ஒன்றிய பிஜேபி அரசு, மாற்றுக் கட்சி ஆளும் மாநிலங்கள் மீது சேற்றை வாரி இறைப்பது எல்லாம் கடைந்தெடுத்த நகைச்சுவையாகும்.
மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது ஒன்றினை ஒழுங்காக நிறைவேற்றியதுண்டா?
ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக வாய் நீள வாக்குறுதி கொடுத்தது என்னாச்சு? கேட்டால் பகோடா விற்கலாமே, அதுகூட வேலை வாய்ப்பு தானே என்று ‘ஏகடியம்’ பேசுவது ஒரு பிரதமருக்கு அழகா?
ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்போம் என்றாரே மோடி – அது என்ன ஆயிற்று என்று கேட்டால் அதெல்லாம் ‘ஜும்லா’ என்று இதே உள்துறை அமைச்சர் கூறுகிறார் என்றால் நாட்டு மக்களை எந்தத் தரத்தில் எடை போடுகிறார்?
இவர்களின் இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கும் மணிப்பூரின் அலங்கோலம் சொல்லும் தரம் உண்டோ!
பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றதைவிட கேடு கெட்ட அவலம் வேறு ஒன்றும் இருக்க முடியுமா?
ஊழலைப்பற்றி வேறு உள்துறை அமைச்சர் பேசுவதுதான் வேடிக்கைக்கு ஜரிகை முண்டாசு கட்டுவதைப் போல் இருக்கிறது.
இன்றைக்கு மகாராட்டிராவில் துணை முதலமைச்சராகவிருக்கும் அஜித்பவார் யார்?
இவர் தேசியவாத காங்கிரசில் இருந்தபோது ரூபாய் 70 ஆயிரம் கோடி சர்க்கரை ஆலை ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகவில்லையா?
பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு, தனது ஆதரவாளர்களுடன், மகாராட்டிரத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து துணை முதலமைச்சராகி விட்டாரே!
அசாமில் ேஹமந்த் பிஸ்வா சர்மாவின் நிலை என்ன? அவர் சாரதா சிட்பண்ட் தொடர்பான 15,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கவில்லையா?
காங்கிரசிலிருந்து விலகி – இப்பொழுது பிஜேபி அசாம் மாநில முதலமைச்சர் ஆகி விட்டாரே!
பிஜேபி என்றால் ‘வாஷிங் மெஷின்’ என்ற சொலவடையைப் பொது மக்கள் அன்றாடம் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதே!
இவர்கள்தான் ஊழலைப்பற்றி குன்றின் மேல் தாவி நின்று உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்!
இன்னும் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம்?
நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில் நடக்கவிருக்கும் பல மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு நல்ல அளவு பாடம் கற்பிக்கும்! அப்பொழுது அமித்ஷா என்ன பேசுவார் என்று பார்ப்போம்!!