* தந்தை பெரியாருடைய கருத்துகள் இன்றைக்கு அகிலம் முழுவதும் பரவியிருக்கிறது!
* ஒருபோதும் தோற்காத, தோற்கடிக்கப்பட முடியாத கொள்கை!
‘‘பெரியார் சாக்ரடீசு நினைவு அறக்கட்டளை’’ முதல் சொற்பொழிவினைத் தொடங்கி வைக்கிறேன்; ஆண்டு தவறாமல் இந்நிகழ்வு நடைபெறும்!
சென்னை, ஆக.25 தந்தை பெரியாருடைய கருத்துகள் இன்றைக்கு அகிலம் முழுவதும் பரவியிருக்கின்றன. ஒருபோதும் தோற்காத, தோற்கடிக்கப்பட முடியாத கொள்கை, பெரியாரின் கொள்கை. “பெரியார் சாக்ரடீசு நினைவு அறக்கட்டளை” முதல் சொற்பொழிவினைத் தொடங்கி வைக்கிறேன். ஆண்டு தவறாமல் நல்ல தலைப்புகளில் நிகழ்ச்சியை நடத்துவோம். இது தோழர்களுக்கு அன்புக்கட்டளை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதைச் சுடரொளி
தி. பெரியார் சாக்ரடீசு நினைவு நாள் – தமிழர் தலைவர் உரை
கடந்த 12.5.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்ற புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில், சுயமரியாதைச் சுடரொளி தி. பெரியார் சாக்ரடீசு நினைவு நாள் உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்..
அவரது சிறப்புரை வருமாறு:
பாரம்பரிய சுயமரியாதைக்
குடும்பத்தைச் சேர்ந்தவர்
சுயமரியாதைச் சுடரொளி தி. பெரியார் சாக்ரடீசு, நம்முடைய நினைவை விட்டு எப்போதும் நீங்காத ஒரு கொள்கை வாலிபர். அவர் வாழ்ந்த காலம் வெகு குறுகிய காலம். ஆனால், அந்தக் குறுகிய காலத்தில் ஒரு வரலாற்றுப் பெருமையைச் சாதித்துக்காட்டிய பெருமையைப் பெற்ற ஒரு தனிச் சிறப்புடைய இளைஞர். அவர் சாதாரணமான சாக்ரடீசு அல்ல. அவருடைய பெற்றோர், தாத்தா பாட்டி எல்லோரும் நம்முடைய கவிஞர் அவர்கள் சொன்னதைப் போல, ஒரு பாரம்பரிய சுயமரியாதைக் குடும்பத்தவர். இன்றைக்கும் தமிழ்நாட்டில் தேடினால், நான்காவது அல்லது அய்ந்தாவது தலைமுறை என்ற பெருமைக்குரிய தொடர்ச்சியான ஒரு குடும்பம் என்று சொன்னால், காரைக்குடி அய்யா என்.ஆர்.சாமி – பேராண்டாள் குடும்பம்தான். அந்தக் குடும்பத்தி லிருந்து வந்த ஒவ்வொரு வாரிசுகள், அந்தப் பண்ணை யிலிருந்து உருவான விளைச்சல்களில் ஒருவர்தான் சாக்ரடீசு. அப்படிப்பட்ட அவர் வெறும் சாக்ரடீசு அல்ல. பெரியார் சாக்ரடீசு! தத்துவ மேதை சாக்ரட்டீசை அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய கொள்கை எதிரிகள் விசம் கொடுத்துச் சாகடித்தார்கள். அவர்தான் மிகப்பெரிய ‘வீர ஈகியர்’ (Martyr)!
வரலாற்றுப் பேராசிரியர் சுப்பிரமணியம்!
சிறந்த வரலாற்று ஆய்வாளர் – நம்முடைய வர லாற்றுப் பேராசிரியர். வரலாற்றுப் பேராசிரியருக்கு எல்லாம் பேராசிரியர் என்ற பெருமை மிகுந்த ஒருவர், உடுமலைப்பேட்டையிலே தன்னுடைய ஓய்வுக்காலத்தை அமைத்துக்கொண்ட பேராசிரியர் சுப்பிரமணியம் அவர்கள். அவர் பிறப்பினால் ஒரு பார்ப்பனர். சிந்தனையினால் ஜாதிகளை அகற்றிய ஒருவர். ஆழமாகப் பேசக்கூடிய அப்படிப்பட்ட அவர், ஒருமுறை ‘என்னுடைய கருத்துகளை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்காது. உங்களைப் போல துணிந்து மேடையிலே பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடையாது. எனவேதான் எனக்குப் பிடித்த மானவற்றைப் பேசுகிறேன்; எழுதுகிறேன்; என்னை இந்தச் சமூகத்திலிருந்து, உலகத்திலிருந்து விலக்கிக் கொண்டிருக்கிறேன்’ என்று என்னிடத்திலும், என்னு டைய வாழ்விணையரிடத்திலும் மணிக்கணக்காக சொந்த பிள்ளையிடத்திலே கருத்துகளைச் சொல்லுவது போல சொல்லுவார்கள்.
தத்துவ மேதை சாக்ரடீசுக்கு இணையான தலைவர் யாராவது உண்டா?
அவர் ஒருமுறை என்னுடன் பேசிக்கொண்டிருக்கிற போது, இந்தக் கேள்வியை என்னிடத்தில் கேட்டார். ‘‘உயிரைத் தியாகம் செய்ததாகப் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் நம்முடைய நாட்டிலே இருப்பதாகச் சொல்கிறார்கள். சாக்ரடீசுக்கு இணையான தலைவர் யாராவது உண்டா?’ என்று கேட்டார். ‘துப்பாக்கியால் சுடுவதால் சிலர் செத்துப்போகிறார்கள். அவர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், ‘அவர்தான் தன்னுடைய உயிரையே நாட்டுக்காக தியாகம் செஞ்சாரு, நாட்டுக்காக தியாகம் செஞ்சாரு’ன்னு சொல்றதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.’’ இது அவருடைய கருத்து. இதை நான் வெளியில் போய் சொல்ல முடியாது. பெரியார் மாதிரி இருக்ககூடிய உங்ககிட்டதான் சொல்லமுடியும். எனக்கு வாய்ப்பு கிடையாது. அந்தளவுக்குத் துணிச்சல் கிடையாது. ‘சாக்ரட்டீஸ் தன்னுடைய உயிர் போகப்போகிறது’ என்று தெரிந்தே விசத்தைக் குடித்தார். இன்னொருத்தர் எதிர்பாராமல் சுடப்பட்டு உயிர் போயிடுச்சுன்னா, அதை நாட்டுக்காக உயிர் விட்டார்னு சொல்றோம். அதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தக் கருத்தை எத்தனைப் பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை என்று அவர் சொன்னார். அப்படித்தான் பெரியாரின் கொள்கைக்காக வாழ்ந்தவர் சாக்ரடீசு. உயிரிழந்த ஒரு சாக்ரடீசு. Martyr என்று சொல்லக்கூடிய அந்த ஆங்கில வார்த்தைக்கு, தன்னுடைய உயிரைக் கொள்கைக்காக ஈந்தவர் என்று பொருள். அப்படிப்பட்ட ஒருவர்தான் பெரியார் சாக்ரடீசு!
சுயமரியாதைச் சுடரொளி
என்.ஆர். சாமி!
அவருடைய தாத்தா என்.ஆர்.எஸ்.தான், பேரப்பிள்ளை களுக்கு எல்லாம் பெயர் வைப்பார். வித்தியாசமாக இருக்கும். அதைத்தான் துணைத் தலைவர் கவிஞர் அழகாக எடுத்துச் சொல்லிவிட்டார். இந்தப் பெரியார் சாக்ரட்டீசில் பெரிய சிறப்பு என்னவென்றால், சாக்ரடீசு காலத்தில் விசம் கொடுத்து அவரைக் கொன்றார்கள். பெரியார் காலத்தில் அவர்களால் செய்ய முடியவில்லை. இதுதான் பெரியாரின் சிறப்பு! காந்தியாரிடம் கூட சென்றார்கள். ஆனால், பெரியாரிடத்தில் அந்த வேலையைக் காட்ட முடியவில்லை. ஏன்? இதற்கு பெரியாரே பதில் சொல்லி இருக்கிறார்! அதுதான் வேடிக்கை. நாம் எதையும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எல்லா கேள்விகளுக்கும் அய்யா பதில் சொல்லியிருக்கிறார். புரட்டிக்காட்ட வேண்டி யதுதான் நம்முடைய வேலை. அதனால் எதிரிகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்றால் புரட்டுச் செய்கிறார்கள். நாம் புரட்டிக்காட்டுகிறோம். அவர்கள் புரட்டுச் செய்கிறார்கள். ‘இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் வெட்டலாமா?’ என்று பார்க்கிறார்கள். அப்படி வெட்டி வெட்டி என்னாயிற்று? இப்போது முகவரி தெரியாமல் ஆகிவிட்டார்கள். அதனால்தான் முன்னாடியே, ‘‘பைத்தியக்காரர்களுக்கு எல்லாம் நாங்க பதில் சொல்லமாட்டோம்’’ என்று சொன்னோம்.
பெரியாருக்கு என்ன சிறப்பு?
அதேமாதிரி ராமலிங்க அடிகள் பாடியிருக்கிறார். அதில் இன்னொரு கருத்து இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். அந்தப் பாடலின் வரிகள் என்னவென்றால், ‘‘கடைவிரித்தோம்; கொள்வார் இல்லை; கட்டிவிட்டோம்’’ என்பதாகும். பெரி யாருக்கு என்ன சிறப்பு? ‘‘கடையை விரிச்சிட்டேன். கொள்கிற வரையில் உன்னை விடமாட்டேன். அது தெருவில; சந்துல; பொந்துல எந்த இடமானாலும் பிரச்சாரம் நடக்கும், ஆரம்பிச்சுட்டேன்.’’
‘‘அய்யா பேப்பர் போகலைய்யா… நட்டத்தில் போகுதய்யா ‘குடிஅரசு’ என்றாலும், நான் ஒருத்தனே எழுதி, திண்ணையில் அமர்ந்து நானே படிப்பேனே தவிர, நிறுத்தமாட்டேன்’’ என்றார்.
இதுதான் பெரியார்!
மறைந்தும் மறையாமல்
நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும்…
எனவே, உயிர்த்தியாகமும் உண்டு, பெரியார் மாதிரி வெற்றி பெறக்கூடிய வாய்ப்பும் உண்டு. இந்த இரண்டும் சேர்ந்த இளைஞன் தான் பெரியார் சாக்ரடீசு! அந்தப் பெயர் எவ்வளவு முன்னோட்டமான பெயர்; முன்னோட்டமான ஒரு கருத்து. மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் அப்படிப்பட்ட அந்த இளைஞனின் நினைவு நாளை ஒட்டி, அவருடைய பெற்றோர்; மற்ற நண்பர்கள் சேர்ந்து அவருடைய பெயரில் ஒரு நினைவு அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறார்கள். நினைவு நாள் அன்றைக்குக் கொள்கைப்பூர்வமான, அறிவுபூர்வமான பிரச்சாரம் நடக்க வேண்டும். நம்முடைய பல பணிகளுக்கு இடையில் கொஞ்ச காலம் தவறி விட்டது. அதை நினைவூட்டினார்கள். இன்றைக்கு அந்தப்பணிகளை செய்வதற்குப் பிராட்லா மாதிரி, பிரின்சு மாதிரி இருக்கிறார்கள்.
புயலடித்தாலும், பூகம்பம் வந்தாலும்
தென்றல் புதுமையாக இருக்கும்!
ஆண்டுக்கொரு முறை பாராட்டு – விருதுகள் வழங்குவது – விழா இவையெல்லாம் ஏற்பாடு செய்வதற்குத் திடலில் இருக்கின்ற தோழர்களது உரிய ஒத்துழைப்பு இருக்கிறது. புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் சொன்னார், ‘‘கட்டுமானங்களை ஏற்படுத்தியிருக்கிறோம்’’ என்று! ‘‘கட்டுமானங்களை உருவாக்குவது பெரிதல்ல. ஆனால், நீங்கள் கட்டுப்பாடாக இந்த அமைப்பை நடத்துகிறீர்கள் அல்லவா? அதுதான் முக்கியம்! வாரம் தவறாமல் நடத்துகின்றீர்கள். புலவர் வெற்றியழகன் மாதிரி உள்ள ஒவ்வொருவருக்கும் முன்னிலை பொறுப்பு தந்திருக்கிறீர்கள். நம்மைவிட பெரிய பெரிய இயக்கங்கள் எல்லாம் இருக்கின்றன. (நிகழ்ச்சியின் துண்டறிக்கையை சுட்டிக்காட்டிப் பேசுகிறார்) இவ்வளவு முறையாகப் போட்டிருக்கிறார்கள். புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்ச்சி 1040. புயலடித்தாலும், பூகம்பம் வந்தாலும் தென்றல் புதுமையாக இருக்கும், இங்கே வந்தால். அது 5 பேர் வருகிறார்களா? 10 பேர் வருகிறார்களா? என்பது முக்கியமில்லை. நிகழ்ச்சி நடக்கும். இந்த உறுதிக்குப் பொறுப்பேற்கிறார்கள் பாருங்கள். மீனாட்சி சுந்தரம் போன்று தோழர்கள் கிடைத்தார்கள். கிடைத்தற்கரியவர்கள் நமக்குக் கிடைத்தார்கள். நாங்கள் உருவாக்கத்தான் முடியும் – கட்டடம் கட்டுவதில் கொத்தனாருக்கு என்ன வேலை? கட்டி முடித்துவிட்டால் அவர் போய்விடுவார். ஆனால், அதற்குப் பிறகு அங்கு வசிக்கிறவர்களும், பயன்படுத்துகிறவர்களும்தான் மிக முக்கியம். ஒன்றை உருவாக்குவதைவிட சிறப்பு, அதை நுகர்வோர் – பயனாளிகள் பயன்பெறும் வகையில் தொடர்வது மிகமுக்கியம். அந்த வகையில் புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பு தொடர்ந்து 1040 ஆம் நிகழ்ச்சியாக, “பெரியார் சாக்ரடீசு நினைவு அறக்கட்டளை” தொடக்கவிழாவை நடத்துகிறது.
Standing Audience
நான் சில கருத்துகள்பற்றிப் பேசவேண்டும் என்று நினைப்பேன். நாம் அங்கு சென்றால், Standing Audience எப்படியும் இருப்பார்கள். வந்துவிடுவார்கள். அதனால் கவலையே இல்லை நமக்கு! பேசுகிறோம். அத்துடன் அதை எடுத்துப் பரப்புகிறார்கள் என்கின்ற மனநிறைவு உண்டு. நானும், கவிஞரும் சேர்ந்து கூட்டம் போடுங்க என்று தோழர்களிடம் சொல்வோம். வியாழக்கிழமை, பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பார்கள். அதே மாதிரி திங்கட்கிழமை, மீனாட்சி சுந்தரம் புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பார் என்று சொல்வார்கள்.
பகுத்தறிவினுடைய பயன்!
உடனே நான், ‘‘நல்லதாகப் போயிற்று, அதை Inconvenient என்று சொல்லாதீர்கள். Convenient ஆக மாற்றிக்கொள்வோம். அதுதானே பகுத்தறிவு! எது நமக்கு பலவீனமோ அதை பலமாக மாற்றவேண்டும். எது நமக்கு குறையோ அதை எல்லாம் நிறைவாக்க வேண்டும். அதுதான் பகுத்தறிவினுடைய பயன்’’ என்பேன். அந்த அடிப்படையில் இன்று (12.05.2025) நிகழ்ச்சி இங்கே இன்று நடக்கிறது. நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக வருகின்றன.
தொண்டை வலி ஏற்பட்டதின் காரணமாக அதைக் காட்டுவதற்காக மருத்துவரிடம் சென்றேன்.
தொண்டை எப்படிப் போனாலும் என்ன?
நமது தொண்டு சரியாக இருந்தால் போதும்!
மருத்துவர் என்னிடம், ‘‘எனக்குதான் அழைப்பிதழ் எல்லாம் வருகிறது. நீங்கதான், நாள்தோறும் பேசிக்கொண்டேதானே இருக்கிறீர்கள். அப்புறம் வந்து தொண்டையைக் காட்டுகிறீர்களே’’ என்றார். நான் பரவாயில்லைங்க, தொண்டை எப்படிப் போனாலும் என்ன? நமது தொண்டு சரியாக இருந்தால் போதும்’’ என்று நான் சொன்னேன். அதனால் இப்படி ஒரு வாய்ப்பு உங்களை எல்லாம் சந்திப்பதற்குக் கிடைத்திருக்கிறது. அது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒருபோதும் தோற்காத,
தோற்கடிக்கப்பட முடியாத கொள்கை!
பெரியாருடைய கருத்துகள் இன்றைக்கு அகிலம் முழுவதும் பரவியிருக்கிறது. ஒருபோதும் தோற்காத, தோற்கடிக்கப்பட முடியாத கொள்கை. சாக்ரட்டீசை இயற்கை பறித்துக்கொண்டது. ‘‘இயற்கையின் கோணல் புத்தி’’ என்று குறிப்பிட்டார்கள். நல்ல வார்த்தை. அவர் போனவு டனேயே அது நின்று போகவில்லை. அதைப்பற்றி கவிஞர், இங்கே எடுத்துச் சொன்னார். அப்படிப்பட்ட முதல் அறக்கட்டளைச் சொற்பொழிவை நான் தொடங்கி வைக்கிறேன். ஆண்டு தவறாமல் இந்தத் தேதியில் அதை ஒட்டிய தேதிகளில் நல்ல தலைப்புகளில் நிகழ்ச்சியை நடத்துவோம். இது தோழர்களுக்கு அன்புக்கட்டளை. திராவிடர் கழகம் சார்பாகவோ அல்லது பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாகவோ அதனை நடத்துவோம்.
மருத்துவர்களாலும்,உங்களாலும்தான்…
அப்படிப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை ஆற்றி யுள்ளார் புதுமை இலக்கிய தென்றலின் செயலாளர் கலையரசன். தலைமை ஏற்றிருக்கக்கூடியவர் நமக்கு கிடைத்தற்கரிய பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்.முன்பு பாவலர் பாலசுந்தரம் இருந்தார். ‘ஓடி வந்த ஹிந்திப்பெண்ணே கேள்; நீ தேடி வந்த நாடு இதல்லவே’ என்று சொல்லியவர் பாவலர். ‘‘சங்குகள் நிறமும் மாறும். சந்தனம் மணமும் மாறும்; எங்கள் பெரியாரின் தத்துவம் மாறாது – மறையாது’’ என்று சொல்வார். அதோடு அவரது அந்த கம்பீரம். அவர் மறைந்துவிட்டாரே என்று பார்த்தால் பட்டுப்பாவலர் வந்தார். அவருடைய வாழக்கை இணையர்; அவரு டைய மகள்; அவருடைய மகன் தமிழரசன் குடும்பம் குடும்பமாக வந்தார்கள். இன்றைக்கும் ‘இறையன் இல்லையே’ என்று வருத்தமாக இருக்கிறது. அவருடைய குடும்பம் இருக்கிறது. திருமகள் வந்தார். திருமகள் மறைந்தார். இன்றைக்குப் பிள்ளைகள் இசையின்பன் இருக்கிறார். மருமகள் இருக்கிறார். அவர் பெரிய பொறுப்புகளைக் கவனிக்கிறார். ஒவ்வொருத்தரும் வந்துகொண்டே இருப்பார்கள். எத்தனைப் பொருளாளர் மாறியிருக்காங்க? பழைய கோட்டை அர்ச்சுனன் தொடங்கி மாறிக்கொண்டு வருகிறது. எப்படியோ நான் தப்பித்துக்கொண்டு வருகிறேன் பரவாயில்லை. நான் ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்கிறேன். ஒரு பெரிய போராட்டம், அவ்வளவுதான். நான் தப்பித்துக்கொண்டு வருகிறேன் என்றால், மருத்துவர்களாலும், உங்களாலும்தான் நான் தப்பித்துக்கொண்டு வருகிறேன்.
என்னுடயே ஆசிரியர்
எழுதிக்கொடுத்துத்தான்..
கவிஞர் பேசும் போது நான் சிறு வயதில் மேடையேறிப் பேசிய நாளை நினைவு கூர்ந்தார். நல்ல வாய்ப்பாக இது அந்த மேசை அல்ல. வேறு மேசை. அங்கேதான் தூக்கிவிட்டார்கள். என்னு ைடயே ஆசிரியர் எழுதிக்கொடுத்துத்தான், நான் வரப்படுத்திதான் (மனப்பாடம்) பேசினேன். கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் பேச பயிற்சி கொடுத்தாரு. அதற்கப்புறம் ஜெயங்கொண்டம் என்று ஒரு ஊர். அதைச் சார்ந்தவர் ஆஸ்திரிலேயாவில் இருக்கிறார்கள். அந்த குடும்பத்திலிருந்து என்னை வரவேற்றார்கள். சிறுவயதில் அந்த ஊரில் என்ன பண்ணாங்க? என்னைச் சோதிக்கற மாதிரி ஒருத்தர் வேண்டுமென்றே, கேள்வி எழுதிக் கொடுத்துட்டாரு கடைசியில்! வரப்படுத்திட்டு (மனப்பாடம்) போறவனுக்கு திடீரென்று கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? பேசறது இயல்பாக பேசுகி றாரா? கொள்கையைத் தெரிஞ்சு பேசறாரா? என்பதைச் சோதிப்ப தற்காக நம்மாட்களோ, வேற ஆட்களோ எதிரிகள் மாதிரி – காங்கிரஸ்காரங்க அப்பல்லாம் கேள்வி கேட்பார்கள்.
கேள்விகளுக்கு இயல்பாகப்
பதில் சொன்னேன்!
அங்கே என்னுடைய ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள் இருக்கிறார். கூட வருவார். என்னுடைய ஆசிரி யரோ, ‘‘என்ன திடீரென்று கேள்வி எழுதிக் கொடுத்தார்கள். இவன் என்ன பதில் சொல்லப்போறான்?’’ என்று நினைத்திருப்பார். அய்யாவினுடைய கூட்டங்களைக் கேட்டதால், அந்தக் கேள்விகளுக்கு இயல்பாகப் பதில் சொன்னேன். பிறகு ஆசிரியர் வந்து பாராட்டினார். ‘‘பரவாயில்லை, இனிமேல் நான் எழுதிக்கொடுக்க மாட்டேன். நீயேதான் பேசணும்’’ என்று சொன்னார். அதுமாதிரி ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதேமாதிரி ஒவ்வொருவரும் சிறப்புக்குரியவர்கள்தான்.
எங்களுடைய சுமையில் பெரும்பகுதியைச் சுமந்தவர்கள் நம்முடைய தோழர்கள்!
அடுத்ததாக திடலில் மு.நீ.சிவராசன் இருந்தார். அதே மாதிரி பேராசிரியர் கு.வெ.கி.ஆசான்! இந்தத் திடலில் இருந்தவர்களை நினைத்தால், அவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. கவிஞர் அரசுப் பணியை விட்டுட்டு பெரியார் திடலுக்கு வந்தார். முன்பெல்லாம் பெரியார் பிறந்த நாள் மலர் தயாரிக்கிற பணி பெரும்பாடாக இருக்கும். இப்போதெல்லாம் மிகவும் சுலபமாக ஆக்கிவிட்டார்கள். எங்களுடைய சுமையில் பெரும்பகுதியைச் சுமந்தவர்கள் நம்முடைய தோழர் பெரியார் சாக்ரடீசு போன்றவர்கள்.
‘‘பாரதிதாசன் விழாவிற்கு ஏற்பாடு செய்தாகிவிட்டதா?’’ என்று கேட்பேன். ‘‘ஏற்பாடு செய்தாகிவிட்டது’’ என்று, ஒரு பட்டியல் கொடுப்பார். ‘‘இதில் யார் யார் வரணும் என்று சொல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, உடனடியாக அவர்களை நேரி டையாக அணுகுவார்.
கொள்கைப்பாசத்தோடு இருக்கிற தோழர்கள்!
அப்படிப்பட்ட இந்த விழாவிலே முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய புலவர் வெற்றியழகன், அதேமாதிரி தோழர் கோ.பிச்சை வள்ளிநாயகம், தங்க தனலட்சுமி – நம்ம தங்க தனலட்சுமி இணையர் இருக்கிறார்களே – நமக்கு ஒரு துணிச்சல், எந்த கூட்டத்திற்குப் போனாலும், நமக்கு கூட்டம் வருகிறதோ இல்லையோ, இரண்டு பேர் உறுதியாக இருப்பாங்க. புத்தகம் கொடுத்தாலும் அவங்கதான் முதலில் வாங்குவாங்க. அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.
(தொடரும்)