சென்னை, ஆக.24- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:
2025-2026ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, விபத்து உயிரிழப்புக்கான இழப்பீடு, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி, இயற்கை மறைவுக்கான நிதி உதவி, இறுதி நிகழ்வு நடத்துவதற்கான நிதி உதவி ஆகியவை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து உயிரிழப்புக்காக வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சம் என்பதை ரூ.2 லட்சம் என்றும், உடல் உறுப்பு இழப்பிற்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.1 லட்சம் என்றும், இயற்கை மறைவுக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.20 ஆயிரம் என்பதை ரூ.30 ஆயிரம் என்றும், இறுதி நிகழ்வுக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ.2,500 என்பதை ரூ.10 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்களுக்கு வார விடுப்பு
சென்னை, ஆக.24- ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்களுக்கு சுழற்சி அடிப்படையில் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊராட்சிகளில் வீடுதோறும் குப்பை சேகரிக்க வெளிநிரவல் முறையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் தூய்மைக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர் சங்கம், தூய்மைக் காவலர்களுக்கு விடுமுறை மற்றும் விடுப்பு வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்துள்ளது.
எனவே, தூய்மைக் காவலர்கள் சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுப்பு எடுக்கலாம். இதற்கு மேல் கூடுதலாக விடுப்பு எடுக்கப்பட்டால் அவர்களுக்கு ஒருநாள் ஊதியமாக ரூ.160 பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.