திருச்சி, ஆக.24- திருச்சி பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 3 நாள் பிரச்சாரம் செய்கிறார்.
இந்த நிலையில் நேற்று (23.8.2025) மாலை திருச்சி அடுத்த திருவெறும்பூரில் நடந்த பிரசாரத்தில் அதிமுக பொதுச் ெசயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் பாஜ கூட்டணி பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. அதை தொடர்ந்து திருச்சி காந்திமார்க்கெட் மரக்கடை பகுதியில் நேற்றிரவு நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவை பெற்று, அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டால் அவர்களின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார். நெல்லையில் நடந்த பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் பாஜ-அதிமுக இணைந்த தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் பேசிய நிலையில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருப்பது பாஜ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.