மைசூரு, ஆக.24- கருநாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன்காரணமாக அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணை, மைசூருவில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பி விட்டன.
இந்த அணைகளில் இருந்து உபரி நீர் தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் இரு அணைகளில் இருந்தும் 2 நாள்களுக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு மழை குறைந்து நீர்வரத்து குறைந்ததால், தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டது.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று (23.8.2025) காலை நிலவரப்படி 123.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 887 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரத்து 65 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,283.82 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 870 கனஅடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.
இரு அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 19 ஆயிரத்து 65 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் அகண்ட காவிரியாக தமிழ்நாடு நோக்கி பாய்ந்தோடுகிறது. இரு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், காவிரியில் வெள்ளம் குறைந்துள்ளது.
நாய்கள் ஜாக்கிரதை
லக்னோ, ஆக.24- உத்தரப் பிரதேச மாநிலம் ஷியாம் நகர் பகுதியை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி வைஷ்ணவி சாகு. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி கல்லூரி முடிந்து வைஷ்ணவி வழக்கம்போல் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த தெருநாய்கள் திடீரென வைஷ்ணவியை ஆவேசத்தோடு விரட்டி கடித்துக் குதறின. இதில் வைஷ்ணவி நிலை தடுமாறி கீழே விழுந்தார். நாய்கள் கடித்ததில் அவரது முகத்தில் வலது கன்னத்தின் ஒரு பகுதி கிழிந்து தொங்கியது. மேலும் மூக்கு, கை உள்பட பல இடங்களிலும் நாய்கள் கடித்ததில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், நாய்களிடம் இருந்து வைஷ்ணவியை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் வைஷ்ணவியின் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரது முகத்தில் சுமார் 17 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சமீப காலமாக நாய்க்கடி விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ள சூழலில், கல்லூரி மாணவியை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.