இஸ்லாமாபாத் ஆக 24- பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய ஏரியான ஷிஷி ஏரி (Shishi Lake) எந்நேரமும் உடைந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டின் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ஏரி, நாட்டின் வடக்கு மாநிலமான கில்கிட் பால்டிஸ்தானில் அமைந்துள்ளது.
ஏரியின் கீழ்ப்பகுதியில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், உடைப்பு ஏற்பட்டு மிகப் பெரிய வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த வெள்ளத்தால் ஏரியைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கையாகப் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் வெளி யேற்றப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இந்த மாதத் தொடக்கத்திலிருந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.