நியூயார்க், ஆக.24- நயாகரா அருவியை சுற்றிப் பார்க்க உல்லாசப் பயணம் சென்ற சுற்றுலாப் பேருந்து நியூயார்க் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்தியாவைச் சேர்ந்தவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
நயாகரா அருவிக்கு…
இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த 50 சுற்றுலாப் பயணிகள் ஒரு சுற்றுலாப் பேருந்தில் நியூயார்க்கில் இருந்து உலக பிரசித்திப் பெற்ற நயாகரா அருவிக்கு உல்லாசப் பயணமாக சென்றனர்.
அருவியைக் கண்குளிர ரசித்து விட்டு பேருந்தில் நியூயார்க் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
விபத்து
அந்தப் பேருந்து நியூயார்க் அருகே வந்துகொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 40 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து இருக்கலாம் என்று தெரிய வந்தது.
விபத்தின்போது பயணிகளில் பெரும்பாலானோர் இருக்கை ‘பெல்ட்’ அணியவில்லை என்று கூறப்படுகிறது.
போக்குவரத்து பாதிப்பு
விபத்து காரணமாக அந்தப் பகுதியில் பல மணி நேரம் சாலை மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.