‘‘மலையில் தோன்றாமலும்,
இடையிலே தோன்றிக்
கடலை அடையாமலும் உள்ள
சிற்றாறுகள் பல. சென்னையை
இரு கூறாகப் பிரிப்பதும்,
அரசுத் தலைமை அலுவலகம்
கோட்டையருகே கடலில் சேரும்
ஆறு, கூவம் ஆறு.
அடையாறு என்பது,
திருஞானசம்பந்த பெருமான்,
மயிலாப்பூரிலே எலும்பைப்
பெண்ணுருவாக்கித்
திருவான்மியூருக்கு போகும்
வழியில், சிறிது நேரம்
அடியார்களுடன் தங்கி
இளைப்பாறிய ஆறு ஆதலால்,
‘அடியார் ஆறு’ என்ற பெயர்
பெற்றது. இப்போது
அடையாறு என, பெயர்
மருவி வழங்குகிறது என்பர்,
ஆராய்ச்சி அறிஞர்கள்.
அக்காலத்தில் இது
கடற்காடாக இருந்தது.
மந்தைவெளி பாக்கத்துக்கு
அடுத்து தெற்கே இருந்த
இக்காடு, இப்போது
மாடமாளிகைகளுடனே
பொலிவுற்று விளங்குகிறது.’’
‘தினமலர்’ வாரமலர்
17.8.2025
‘புளுகினாலும் பொருத்தமா புளுகங்கடா – அடப் போக்கத்தப் பசங்களா!’ என்று அழகாகப் பாடினார் உடுமலை நாராயணகவி.
திருஞான சம்பந்தனாம் – பார்வதி தேவியார் ஞானப்பால் ஊட்டினாளாம்! எத்தனைப் பிள்ளைகள் பாலின்றித் தவிக்கின்றன – அழுகின்றன! அந்தப் பிள்ளைகள் எல்லாம் பார்வதி தேவியின் கண்களுக்குத் தெரியவில்லையா?
சீர்காழி சிவபாத ஹ்ருதயர் என்ற பார்ப்பனர் மகன்தான் சிவனின் மனைவி பார்வதி தேவிக்குத் தெரிந்தானா?
சென்னை மயிலாப்பூரில் எலும்பை – ஒரு பாடலால் பெண்ணுருவாக்கினானாம்.
மூன்று வயதில் ‘‘தோடுடைய சேவியன் சேவயன்’’ என்று தொடங்கும் பாடலைப் பாடினானாம்.
பார்வதிதேவியாரிடம் ‘ஞானப்பால்’ உண்டவனாயிற்றே!
‘திருநீலகண்டன்’ என்ற திரைப்படத்திலே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நக்கலாக ஒரு பாடலைப் பாடினார்.
‘‘சின்ன வயசிலே – கன்னித் தமிழிலே
சொன்னான் ஒரு பாட்டு
என்று போடுறாயே வேட்டு
கல்வி கற்றுத் தேறா முன்னம்
கவி எழுதிட வருமா?
கட்டுக் கதைகளை விட்டுத் தள்ளு
குட்டு வெளிப்படுமே’’
என்பதுதான் அந்தப் பாட்டு!
இந்தப் பாட்டுக்கு இதுவரை யார்தான் பதில் அளித்தார்கள்? ஆராய்ச்சி அறிஞர்கள் எல்லாம் கூறுவதாக ஒரு புரூடா விடுகிறது ‘தினமலர்’ என்னும் ‘இன’மலர்.
சரி, இவ்வளவு தெய்வீக அருட்கடாட்சம் பெற்ற திருஞானசம்பந்தன் பதினாறே வயதிலேயே திருமணமாகி, அந்தக் கோலத்திலேயே மரணித்தது ஏன்? என்ற கேள்விக்குப் பதில் என்ன?
சின்ன வயதிலேயே ‘பெண்ணகத்து எழில் சாக்கியர் பேயமன்’ என்று தொடங்கும் பாடலைப் பாடினாராம்.
அழகிய சமணர், பவுத்தர் வீட்டுப் பெண்களைக் கற்பழிக்க அருள்தருவாய் சிவனே! என்று பாடியிருக்கிறான் என்றால்… இதுதான் ஞானப்பால் உண்ட இலட்சணமா?
– மயிலாடன்