திருச்சி, ஆக. 23 பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியின் ஆய்வுக்குப் பயன்படும் பிராணிகள் பராமரிப்புக் கூடத்தினை (Animal House) 22.08.2025 அன்று மாலை 6.45 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், திருச்சி மாநகராட்சியின் மேயர் மு. அன்பழகன் மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்க, தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்கள். முன்னதாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அனைவரையும் வரவேற்றார்.
44 ஆண்டுகள் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணியில் சிறந்து விளங்கும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் எலி வகைகளைப் பாதுகாக்கும் பிராணிகள் பராமரிப்புக் கூடம் 2000ஆம் ஆண்டு முதல் IAEC (Instituitional Animal Ethics Committee) அனுமதி பெற்று மருந்தியல் பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மருந்துகளின் நச்சுத்தன்மை மற்றும் குணமாக்கும் தன்மைகளை எலிகளைக் கொண்டு பரிசோதனை செய்து ஆய்வின் முடிவினை துல்லியமாக அளிக்கப் பயன்படும் பிராணிகள் பராமரிப்புக் கூடமானது ரூபாய் 20 இலட்சம் மதிப்பிலான புதிய கட்டடத்தில் அனைத்து வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் 9 மாநிலங்களிலிருந்து 40 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 319 ஆய்வாளர்கள் பங்கேற்று, ‘‘மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு’’ என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய ISBN பதிவு பெற்ற புத்தகம் அமைச்சர் பெருமக்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.