உச்ச நீதிமன்றத்திலும், டில்லி பாட்டியாலா உயர் நீதிமன்றத்திலும் மூத்த வழக்குரைஞர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சாய்தீபக், சமூக வலைத்தளங்களில் மத மோதல்களைத் தூண்டும் வகையில் போலிச் செய்திகளைப் பரப்புவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அண்மையில், ‘கிளியர் கட் டாக்ஸ்’ (Clear Cut Talks) என்ற யூடியூப் சேனலில் வெளியான ஒரு காணொலியில், சாய்தீபக் தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு எதிரானச் சூழல் நிலவுவதாகப் பேசியுள்ளார்.
“நீங்கள் பிராமணர் என்று தெரிந்தால், உங்கள் நெற்றியில் உள்ள விபூதியை அழிப்பார்கள். இது 100% நடக்கும். தமிழ்நாட்டில் ஒரு பிராமணராக வாழ்வது பாதுகாப்பானது அல்ல, தமிழ்நாட்டில் நிலவும் அச்சமூட்டும் சூழலில் வாழ்வதற்கு நிறைய தைரியம் தேவைப்படுகிறது, எனவே அங்குள்ள பிராமணர்கள் கோழைகள் அல்ல, பயத்தில் வாழ்பவர்கள்” என்றும் அவர் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டின் மீது உண்மைக்குப் புறம்பான இத்தகைய அவதூறுகள் தொடர்ந்து திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. இதன் மூலம் திராவிட இயக்கங்கள் மீதும், தந்தை பெரியார் மீதும் அவதூறு பரப்புவது தொடர்கதையாகி வருகிறது.
முன்னதாக, பீகாரைச் சேர்ந்த பத்திரிகையாளர் மனிஷ் கஷ்யப், தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் பொய்யான செய்திகளைப் பரப்பியதற்காக தமிழ்நாடு மற்றும் பீகார் காவல்துறையால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோன்று, சாய்தீபக் தமிழ்நாட்டைப் பற்றி வட இந்தியாவில் அவதூறுகளைப் பரப்புவதால், அவர் மீது தமிழ்நாடு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூக வலைத்தளங்களில் வலுத்து வருகின்றன.
இந்தியத் துணைக் கண்டத்தில் மதமோதல்கள் பல மாநிலங்களில் ஏற்பட்டாலும் அமைதித் தென்றல் தவழும் மலர்க் காடாகத் திகழும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே!
காந்தியார் ஒரு பார்ப்பனரால் கொலை செய்யப்பட்ட போதுகூட, மகாராட்டிரத்தில், குறிப்பாக மும்பையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர், வீடுகள் தாக்கப்பட்டன, எரியூட்டவும்பட்டன.
பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் வலிவோடு இருக்கும் தமிழ்நாட்டில், பார்ப்பனர்கள்மீதான தாக்குதல் அதிகமாக இருக்கும், கடுமையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது; ஆனால் நடந்தது என்ன?
பார்ப்பனர்கள்மீது ஒரு துரும்பு தூசு கூடப்பட வில்லை. அன்றைய முதலமைச்சர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியாரின் வேண்டுகோளை ஏற்று, தந்தை பெரியார் வானொலியில் பேசினார்.
கொன்றவன் யார் என்பதைவிட, அவனுக்குப் பின்னால் இருந்த தத்துவம் என்ன? அதை ஒழிக்க வேண்டும் – அமைதி காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்பொழுது மட்டுமல்ல; பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதுகூட இந்தியாவின் பல மாநிலங்களிலும் கலவரங்கள் வெடித்தபோது தமிழ்நாடு அமைதி காத்தது.
‘மதவெறி மாய்ப்போம் – மனித நேயம் காப்போம்’ என்ற வட்டார மாநாடுகளைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது திராவிடர் கழகமே! அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்று உரையாற்றியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
பார்ப்பனர்களுக்குத் தமிழ் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று எல்லாம் சொல்லுவது – பேச்சல்ல – பிதற்றலே!