இளம் வயதிலேயே குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் முதுமையில் எலும்பின் அடர்த்தி குறைவது, தேய்மானம் ஏற்படுவது, எலும்பு முறிவு போன்ற பிரச் சினைகளைத் தவிர்க்க முடி யும். குழந்தைகளைக் கண்ணும் கருத்தாகத்தான் எல்லா பெற்றோரும் வளர்க்கிறார்கள்.
குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைக் கொடுக்க வேண்டும் என்பதிலும் பெரிதும் கவனம் செலுத்துகிறார்கள். எலும்பின் ஆரோக்கியத்துக்குத் தேவையான கால்சியம் நிறைந்துள்ள பால், முட்டை போன்ற உணவுகளைக் கொடுக்கிறார்கள். பாலின் நிறம், சுவை பிடிக்காத குழந்தைகளுக்கு மில்க் ஷேக் மாதிரியும் கொடுத்து சமாளித்து விடுகிறார்கள். சிலர் பாலில் சாக்லெட் கலந்து கொடுப்பதையும் கேள்விப்படுகிறோம். ஆனால், அவர்களை அதீத கவனம் எடுக்கிறோம் என்ற பெயரில் விளையாட விடுவதில்லை. இதை சரிசெய்தால் போதும்.
குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது, நோயில் இருந்து பாதுகாக்க வேண்டும், சிறுகாயம்கூட ஏற்படாமல் வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளை விளையாட அனுமதிக்காதது தவறு. குழந்தைகள் தவழும் நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக நடக்க ஆரம்பிக்கிறார்களோ, எந்த அளவுக்கு ஓடி ஆடி விளையாடுகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுடைய எலும்புகள் வலிமை உள்ளதாக இருக்கும்.
பெரும்பாலான பெற்றோர் இந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்துவிடுகிறார்கள். குழந்தைப் பருவத்தில் எலும்பு களின் அமைப்பு மாறிக்கொண்டே இருக்கும். குழந்தைகள் வளர்ச்சி அடைவதற்கு ஏற்ப, ஏற்கெனவே உள்ள எலும்புகள் மாறி புதிய எலும்புகள் உருவாகும். குறிப்பாக, எலும்புகளில் உள்ள திசுக்களின் அமைப்பு மாறிக்கொண்டு இருக்கும். இந்த மாற்றத்தை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும்.
எத்தனை சீக்கிரம் நடக்கிறார்களோ அதைப் போல அவர் களின் உடல் சார்ந்த விளையாட்டிலும் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். சின்ன வயதில் அவர்கள் ஓடி ஆடி விளையாடுவதே உடற்பயிற்சிக்கு இணையானது.
வெயிலில் விளையாடும்போது அவர்களுக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து போதுமான வைட்டமின் டியும் கிடைக்கும். இதன்மூலமும் எலும்பு பலமாகும். குழந்தைகள் விளையாட்டை நாம் ஊக்கப்படுத்தும்போது எலும்புக்கூட்டில் இருக்கும் திசுவின் அடர்த்தி அதிகரிக்கும்.