மனிதநேய அறப்பணி சென்னையில் முதியோர்களுக்கு உதவி மய்யம் பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை சென்னை மாநகர காவல்துறை ஏற்பாடு

2 Min Read

சென்னை, ஆக. 23- உதவி மய்யம் அமைத்து முதியோர்களுக்கு சென்னை காவல்துறை உதவி வருகிறது. இதில், பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

முதியோர்களுக்கு
உதவி மய்யம்

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ”60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவ ”1252” என்ற எண்ணுடன் சென்னை காவல் துறையில் முதியோர் உதவி மய்யம் செயல்பட்டு வருகிறது. 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட `பந்தம்’ என்ற சேவை திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. காவல் ஆணையர் அருண் வழிகாட்டுதலின் பேரில் இந்த திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 94999 57575 என்ற கைபேசி எண் மூலம் உதவி கேட்கும் முதியவர்களுக்கு உடனடி உதவி காவல்துறையினர் மூலம் கிடைக்கிறது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், வெளிநாடுகளில் பிள்ளைகள் வசிப்பதால் தனித்து வாழும் முதியோர்கள், வாரிசு இல்லாத முதியோர்கள் என தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் அழைப்புகளுக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கப்படுகிறது. அவர் களுக்குத் தேவையான மருத்துவ வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆலோ சனைகள், சட்ட உதவி உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தாண்டு இதுவரை `பந்தம்’ உதவி மய்யம் மூலமாக 185 அழைப்பு களுக்கு சட்டரீதியான தீர்வும், 6 அழைப்புகளுக்கு மருத்துவ உதவியும், 5 அழைப்புகளுக்கு பாதுகாப்பு உதவியும், 41 அழைப்புகளுக்கு இதர அத்தியாவசிய உதவியும் செய் யப்பட்டுள்ளது. 954 அழைப்புகளுக்கு தகவல் மற்றும் வழிகாட்டுதல் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,191 அழைப்புகள் பெறப்பட்டு 72 மணி நேரத்துக்குள் தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் சென்னை காவல் துறையில் செயல்பட்டு வரும் காவல் கரங்கள் உதவி மய்யம் மூலம் இந்த ஆண்டில் இதுவரை 646 ஆதரவற்ற முதியவர்கள் மீட்கப்பட்டு தகுந்த பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டனர் என்றும், இதில் 117 முதியவர்களின் முகவரிகளைக் கண்டறிந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *