சென்னை, ஆக.23- ‘தமிழ்நாடு கடந்த நான்கு நிதியாண்டுகளில், 6.70 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளது’ என, எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 – 2022 முதல், 2024 – 2025 வரையிலான காலத்தில், தமிழ்நாட்டில் முதலீடு, மேம்பாடு மற்றும் வளர்ச்சி ஆய்வை, எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் வெளியிட்டுள்ளது.
இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு, 6.70 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளது. இதில் 35,620 கோடி ரூபாய் மதிப்பிலான நிலுவையில் உள்ள திட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மொத்த முதலீட்டு திட்டத்தில் தனியார் துறை பங்களிப்பு, 5.20 லட்சம் கோடி ரூபாய். ‘பார்ச்சூன் 500’ பிரிவில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், 130 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கவுன்சில் தலைவர் ராவத் கூறுகையில், ‘செலவு அதிகரிக்கும் அபாயத்தை தவிர்க்க, நிலுவையில் உள்ள முதலீட்டு திட்டங்களை விரைவாக செயல்படுத்த, உயர் அதிகாரம் உடைய குழுவை அமைக்க வேண்டும்’ என பரிந்துரை செய்துள்ளார்.