பூசாரியிடம் சவுக்கடி வாங்கிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்
இன்னொரு செய்தியும் உண்டு அதே நாளில் வெளிவந்துள்ளது சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், தூச் மாவட்டம், ஜாங்கிரி என்னும் ஒரு கிராமத்தில் ஆண்டு தோறும் தீபாவளிக்கு மறு நாள் நடக்கும் பசுக்களை வழிபடும் கோவர்த்தன பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது என்ன நடந்தது தெரியுமா?
கோயில் பூசாரி பக்தர்கள் கையில் சவுக்கடி கொடுப்பது வழக்கம். அத்தகைய சவுக்கடி சத்தீஸகர் முதலமைச்சருக்கும் பூசாரியால் கிடைத்தது என்றால், பக்தி எவ்வளவு கீழிறக்கமாகி முடைநாற்றம் மூக்கைத் துளைக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.
சேலம் மாவட்டம், அன்னதானப் பட்டியில் ஆண்டுதோறும் செருப்படி திருவிழாவும் நடந்து வருகிறது.
ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை, மருத்துவமனைகளில் கிருமிநாசினியாக (Anti Septic) மாட்டு மூத்திரத்தைத் தெளிக்க உத்தரவிட்டது என்றால், இது எவ்வளவு வெட்கக் கேடான செயல்!
சமூக சீர்த்திருத்தவாதிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த பான்ஸ்லே. கர்புரகி கவுரி லங்கேஷ் போன்றவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்டதையும் நினைத்துப் பார்க்கும் பொழுது, கேரளாவில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் மூடநம்பிக்கைத் தடை சட்டம் எவ்வளவு அவசியமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இத்தகைய சட்டம் எல்லா மாநிலங்களிலும் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வாஸ்து சாஸ்திர மடமை
சமையலறை இருந்த இடத்தில் குளியலறை. குளியலறை இருந்த இடத்தில் படுக்கையறை, படுக்கையறை இருந்த இடத்தில் படிக்கும் அறை இவ்வாறு அறைகளை இடித்து தகர்த்து மாற்றி கட்டி கொள்ளும் மடச் செயல்கள் இந்த வாஸ்து சாஸ்திர நம்பிக்கையாளர்களுக்கு உண்டு.
அறிவுடைமை ஆகாதே!
அய்தராபாத் ஜே.என். தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்துக் கட்டடக் கலைத் துறைப் பேராசிரியா கோல தாட்தார் அவர்கள், “வாஸ்து சாஸ்திரமும் உள்நாட்டுக் கட்டடக்கலையும் பற்றிய தேசிய கருத்தரங்கில் ஆற்றிய உரையில் பின்வருமாறு கூறியுள்ளார்.
“கட்டடக்கலை பற்றிய வரலாற்றைப் படிப்பவர்கள் பழங்காலத்தில் வாஸ்து சாஸ்திரம் என்ற ஒன்று இருந்தது. கட்டடம் கட்டுவோர் சிலர், அதனைப் பின்பற்றிக் கட்டடங்களை எழுப்பினர் என்ற அளவுக்கு அறிந்து கொள்ளலாமே தவிர, வாஸ்து சாஸ்திரத்தை இன்னும் பின்பற்றுவதும் அதனடிப்படையில் இருக்கின்ற கட்டடத்தை இடித்துத் தகர்த்தி புதிதாகக் கட்டுவதும் அறிவுடமையாகாது”
வாஸ்து சாஸ்திரம் உண்மையாக இருக்குமேயானால் வாழ்வு முடிவு எய்திய என்.டி.இராமாராவ் 5 ஆண்டுகளுக்கு முதலமைச்சராக உயிருடன் இருந்திருக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தின் மீது அவர் மிகுதியான நம்பிக்கை கொண்டிருந்ததால் தன் வீட்டின் பழைய நுழைவாயிலை மாற்றிவிட்டு தெற்குத் திசையில் புதிய நுழை பாதையை அவர் அமைக்க விரும்பினார்.
“வடக்கு வாயிலாக நுழைந்து விட்டார் நரேந்திரா” என யாரோ ஒருவர் அவரிடம் சொன்னதுதான் இதற்கு காரணம்.
இதனால் வடக்குப் பக்கம் இருந்த நிலத்தையெல்லாம் இடித்துவிட்டு, பல லட்சம் ரூபாய் செலவில் தெற்குப் பக்கம் ஒரு பாதையை அமைத்தார்.
ஆனால், 5மாதங்களுக்குள்ளாக அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கி ஏறியப்பட்டார்.
ஒரு சிறிது காலத்துக்குள்ளாகவே அவர்தம் வாழ்வே முடிவடைந்துவிட்டது.
எப்போது? எவர்?
மொகஞ்சதாரோவும் ஹரப்பாவும் கட்டடக் கலையால் வடிவமைக்கப்பட்ட போது வாஸ்து சாஸ்திரமோ, வாஸ்து சாஸ்திர வல்லுநர்களோ இருக்கவில்லை. இந்த வாஸ்து சாஸ்திரம் 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டதாக பல நூல்கள் தெரிவிக்கின்றன.
பொது மக்களை ஏமாற்றிப் பயன்படுத்திக் கொள்ளவே ஆரியர்கள் இந்த சாஸ்திரத்தை உருவாக்கினர் என்று கூறுவார் பேராசிரியர் முனைவர் கோல்ஹ்தாட்தார்.
வடபுலத்தில் வாழ்ந்த ஒருவரால் எழுதப்பட்டதால் அம்மண்ணில் குடியேறிய ஆரியப்பண்பாட்டின் மேல் எழுதப்பட்டது.
மயன் என்பவர் தான் இந்தச் சாஸ்திரத்தை எழுதியவர் எனக் கூறப்படுகிறது.
விதிப்படி எதுவும் நடப்பது என்றால், மனிதன் மீது எங்கே இருக்கிறது குற்றம்?
ஜோசியத்தை ஒப்புக் கொள்ளுகிற எல்லோரும் முன்ஜென்மம், முன்ஜென்மக் காமம். அதை அடுத்து கடவுளால் ஏற்படுத்தப்பட்ட விதி முதலியவைகளை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். ஆகவே, ஜாதகன் தன் ஜாதகத்தில் இருக்கிறபடி நடப்பதற்கு அது அவனுக்கு பொறுப்பல்லவென்றும், அது அவனவன் பூர்வஜென்ம பலன் என்றுதான் நாம் கொள்ள வேண்டும். உதாரணமாக, கோவிந்தசாமி, நாராயணசாமியை கொலை செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் கொலையானது கோவிந்தசாமியின் கையிலோ, ஜாதகத்திலோ கோவிந்தசாமியாகிய இவன் நாராயணசாமி என்பவனை இந்த வருஷம், இன்ன தேதி, இன்ன கிழமை, இத்தனை மணிக்கு இந்த இடத்தில் இவ்விதமாய்க் கொலை செய்வான் என்றும், நாராயணசாமியின் ஜாதகத்திலோ, கைரேகையிலோ இன்ன வருஷம், இன்ன மாதம், இன்ன கிழமை, இத்தனை மணிக்கு கோவிந்தசாமியால் இந்த இடத்தில் இவ்விதமாய் கொலை செய்யப்படுவான் என்றும் இருக்க வேண்டும்
ஆகவே, இப்படித்தான் என்று இது எழுதப்பட்டிருக்கு மாயின், கோவிந்தசாமியானவன் இந்த கொலையைச் செய்யக்கூடாது என்று எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் அவனால் அக்கொலை செய்யாமல் இருக்க முடியாது. அதுபோலவே நாராயணசாமியை எவ்வளவுதான் தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைத்தாலும் கொலையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்றாகிறது. ஏனென்றால் “விதிப்படி நடந்து தான் தீரும் ஆக விதிப்படி. ஜாதகப்படி நடந்த இக்கொலைக்கு நிச்சயமாக கோவிந்தசாமி பொறுப்பாளியாகமாட்டான்.
போன ஜென்மத்தில் யாரையோ நாராயணசாமி யானவன் கொலை செய்துள்ளான். அதனால் தான் இந்த ஜென்மத்தில் அவனுக்குக் “கருணை மிகுந்த கடவுள்” கொலைத் தண்டனையைக் கோவிந்தசாமி மூலமாக அருளிச் செய்துள்ளார்.
ஆகையால், நாராயணசாமி என்ற துஷ்டனைத் தண்டிப்பதற்கு கருணை மிகுந்த கடவுள் கோவிந்த சாமியை ஒரு “கருவி” யாகவே கையாண்டுள்ளார் என்று தெரிகிறது. அப்படியானால் கோவிந்தசாமியானவனுக்கு அடுத்த ஜென்மத்தில் நரகமோ, துன்பமோ அதிகாரமில்லை என்றாகிறது. ஆகவே சட்டப்படி கோவிந்தசாமியானவன் கொலை செய்தவனாக இருந்தாலும் அவன் குற்றமற்றவனாகவே கடவுளுக்கு கருதப்பட வேண்டியவன் ஏனென்றால் நாராயணசாமியின் சாவுக்கு கோவிந்தசாமியானவன் எவ்விதத்திலும் சம்பந்த மில்லாதவன்.
ஆக, முன்ஜென்மத்தில் மனிதர்கள் செயகின்ற பாவ புண்ணியங்களுக்கேற்ப இப்பிறவில் அவரவர்களுக்குப் பாவமோ புண்ணியமோ ஏற்பட கருணை கடவுள் வழிசெய்து கொடுக்கிறான். இப்படி இருக்க மனிதர்களைத் தனியாகத் தண்டிக்க வேண்டியதில்லை.