சரியான ஒப்பீடா? மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி – ஒன்றியம் நியமித்த பிரதிநிதி

2 Min Read

அண்மைக்காலமாக, சட்டமன்றத்தால் நிறைவேற்றப் படும் மசோதாக்களை ஆளுநர்கள் தாமதப்படுத்துவது அல்லது நிறுத்தி வைப்பது தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், ஒன்றிய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த வாதங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. “ஆளுநரும் ஒரு வகையில் மக்கள் பிரதிநிதிதான்,” மற்றும் “மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அது காலாவதியாகிவிடும்” போன்ற அவரது கருத்துகள், மக்களாட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாக உள்ளன.

நியமனம் vs. தேர்ந்தெடுப்பு: இரு வேறு உலகங்கள்

ஒருவர் மக்கள் பிரதிநிதி என்றால், அவர் மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், 35 வயது நிரம்பியிருக்க வேண்டும் போன்ற இரண்டு தகுதிகள் மட்டுமே போதும். இந்தக் குறைந்தபட்ச தகுதிகள் கொண்ட ஒருவர், ஒன்றிய அரசின் பிரதிநிதியாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இந்த நியமனம், மக்கள் பிரதிநிதியான முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சமமான அதிகாரத்தை வழங்குவது, ஜனநாயகத்தின் அடிப்­ப­டை­க் ­கட்டமைப்பை ஆட்டம் காணச் செய்யும் ஒரு அபாயகரமான போக்கு.

ஆளுநரின் நியமனம்: தகுதிகள் குறித்த கேள்வி

ஒன்றிய அரசு, ஆளுநர் பதவியை “உலகிலேயே ஒப்பற்ற உயர்ந்த பதவி” என்று கருதலாம். ஆனால், அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை உற்று நோக்கினால், அது முற்றிலும் மாறுபட்ட ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது. ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்கள்  பெரும்பாலும் இரண்டு வகையான பிரிவுகளிலிருந்து வருகின்றனர்:

  1. அரசியல் ரிட்டையர்டுகள் அல்லது கோஷ்டிப் பூசலில் வெல்லாதவர்கள், தங்கள் அரசியல் கட்சியில் பல தில்லுமுல்லுகளைச் செய்து, கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்ததற்காக அங்கீகாரம் பெற்றவர்கள்.
  2. அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இருந்து, ஆளும் கட்சிக்குச் சாதகமாகச் செயல்பட்டவர்கள்.

இப்படிப்பட்ட ஒருவர், லட்சக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் மசோதாவைச் செல்லாததாக்குவது அல்லது கிடப்பில் போடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும் இடையே சமநிலை இருக்க வேண்டும். ஆனால், ஆளுநர்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநில அரசின் திட்டங்களை முடக்குவது, மக்களாட்சிக்கு எதிரான செயல்.

நீதிமன்றங்களின் வெளிப்படைத்தன்மை vs. ஆளுநரின் மவுனம்

ஓர் அரசு தவறு செய்தால், நீதிமன்றங்கள் சட்டங்களை ஆராய்ந்து வெளிப்படையான தீர்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் ஆளுநர்கள் அவ்வாறு செயல்படுவதில்லை. மசோதாக்களைக் கிடப்பில் போடுவார்கள், அதற்கு எந்தக் காரணத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்க மாட்டார்கள். இது, ஒரு வெளிப்படையான விசாரணைக்கு இடம் கொடுக்காமல், மாநில அரசின் செயல்பாடுகளை முடக்கும் தந்திரமாகப் பார்க்கப்படுகிறது.

ஒருவேளை, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நிறைவேற்றிய மசோதாவைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கிடப்பில் போட்டால், ஒன்றிய அரசு அமைதியாக இருக்குமா? நிச்சயம் கொந்தளிக்கும். காரணம், குடியரசுத் தலைவர் பதவியே பிரதமரின் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ என காலம் காலமாக விமர்சிக்கப்படுவதுதான். ஆனால், மாநில அரசு மசோதாக்களைக் கிடப்பில் போடும்போது மட்டும், அது ஒரு “மக்களாட்சி”ச் செயல்பாடு என வாதிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

மக்களாட்சி என்பது, மக்களின் விருப்பத்தையும், வாக்கையும் மதித்துச் செயல்படுவது. ஆளுநரின் அதிகாரங்கள், இந்த அடிப்படைக் கொள்கைக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு விடுக்கப்படும் மிகப்பெரிய சவாலாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *