கல்வியே எனக்கு இலக்கு! 13 வயதில் திருமணமான பெண் – செவிலியராகிச் சாதனை!

3 Min Read

‘சின்னப்பொண்ணு’ என்று பொருள்படும் ‘சோட்டி ஸி உமர்..’ என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித்  தொடரின் கதைக்கு சிறந்த எடுத்துக் காட்டு, சோனாலி படே.

13 வயதில் தனக்கு நடந்த குழந்தைத் திருமணத்தை எதிர்த்து, காரிலிருந்து குதித்து, இன்று சொந்தக் காலில் செவிலியராகச் சாதித்திருக்கிறார் 26 வயதான சோனாலி. மகாராட்டிராவின் கிராமப்புறங்களில் குழந்தைத் திருமணங்கள் சாதாரணமாய் இருந்த காலத்தில், கல்விதான் தன் கனவு என உறுதியாய் நின்ற ஒரு பெண்ணின் போராட்டமிது.

மகாராட்டிராவின் பீட் தாலுகா, ஷிரூர் காசரைச் சேர்ந்த கரும்பு விவசாயியின் நான்காவது குழந்தை சோனாலி. ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, கரும்பு அறுவடை காலத்தில் குழந்தைகளைக் கவனிக்க ஆள் இல்லாததால், தன் வயது வந்த மகளை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் முடிவெடுத்தனர். சட்டப்படி அது தவறு எனத் தெரிந்தும், அந்தப் பகுதியில் அது சாதாரணமாகவே நடந்திருக்கிறது.

முடக்க நினைத்த உறவுகள்

தனக்கு திருமணம் நடந்தாலும், 12-ஆம் வகுப்பு வரை படிக்க அனுமதிக்க வேண்டும் என்று சோனாலி தன் பெற்றோரிடம் தொடர்ந்து கேட்டுள்ளார். ஆனால், “உனக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்?” என்ற கேள்வியே பதிலாய் கிடைத்தது. பெற்றோரோ, “உனது அக்காவிற்குக்கூட சிறு வயதிலேயே திருமணம் நடந்ததே, உனக்கு மட்டும் ஏன் அதில் விருப்பமில்லை?” எனக் கேட்டிருக்கின்றனர். 30 வயதான ஒரு நபரை மணமகனாகப் பார்த்து, ஒருநாள் பெண் பார்த்து, அடுத்த நாள் திருமணம் என வேகமாக எல்லாம் நடந்து முடிந்தது.

தற்கொலை முயற்சி முதல் தாலியை விற்றது வரை

திருமண சடங்குகளின்போது சோனாலி அழுததால், “சிறு வயதிலிருந்தே பிரிந்து பழகாததால் அழுகிறாள்” என பெற்றோர் காரணம் சொல்லியிருக்கின்றனர். திருமணத்திற்கு மறுத்த சோனாலிக்கு பெற்றோரிடமிருந்து பலவித அழுத்தங்கள் வந்தன. “நீ என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்” என அவரது தந்தை மிரட்டியபோது, சோனாலிக்கு அது மேலும் அழுத்தம் கொடுத்தது. ஒரு கட்டத்தில், காவல்நிலையத்திற்குச் சென்றும் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிடுகிறார்.

திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்குச் செல்வதற்காக, காரில் அமர்ந்த சோனாலி, நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருக்கும்போது கதவைத் திறந்து குதித்துள்ளார். நினைவில்லாமல் கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி செய்தனர். பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தனது இந்த முயற்சிக்குக் காரணம், “நான் உயிருடன் இருந்தால் எதையாவது சாதிக்க முடியும்” என்ற எண்ணம்தான் என்கிறார் சோனாலி.

அதன் பிறகு, ஊராரின் கேலிப் பேச்சிலிருந்து தப்பிப்பதற்காக, ஓராண்டு காலம் உறவினர்களின் வீடுகளுக்கு மாறி மாறி அனுப்பப்பட்டதால் அவரது படிப்பு தடைப்பட்டது. ஆனால், கனவை விடாத சோனாலி, தனது தோழிகளின் உதவியுடன் 10-ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து, படித்தார். அப்போது, அவரது கணவர் அவரை தன்னுடன் அழைத்துச் செல்ல தொடர்ந்து முயற்சி செய்திருக்கிறார். அதற்குப் பயந்து, கணவர் வீட்டிற்கு வரும்போது கையில் பிளேடு அல்லது கத்தி வைத்துக் கொண்டு தன்னைத் தற்காத்துக்கொண்டார்.

நனவான நர்சிங் கனவு

இந்த போராட்டமான காலகட்டத்தில், வயல்வேலைக்குச் சென்று ஒருநாளைக்கு 70 ரூபாய் சம்பாதித்து தனது படிப்பைத் தொடர்ந்தார். அப்போது, ஒரு கிராமப்புற மருத்துவப் பணியாளரை (ஆஷா) சந்தித்த பிறகு, சதாராவில் உள்ள வழக்குரைஞர் வர்ஷா தேஷ்பாண்டேவைப் பற்றி அறிந்துகொண்டார். அவரைச் சந்திக்க பணமில்லாமல், தனது தாயிடம் இருந்த தங்கத் தாலியை விற்று 5,000 ரூபாய் பெற்று சதாரா சென்றார்.

அங்கு வர்ஷா தேஷ்பாண்டேவின் வழிகாட்டுதலில், நர்சிங் படிப்பை தேர்ந்தெடுத்தார். புனேவில் உள்ள பல மருத்துவமனைகளில் பணிபுரிந்து பணம் சேமித்து, தனது நர்சிங் பட்டப் படிப்பை முடித்தார். இன்று, புனேவில் ஒரு பெரிய மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிகிறார். தனது கடின உழைப்பால், தனது தங்கைகளையும் 12-ஆம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார்.

படிக்க வேண்டும் என்ற தன் கனவை நனவாக்கிய சோனாலி, தற்போது ஒரு புதிய வாழ்க்கைத் துணையைப் பெறுவதற்கான கனவில் இருக்கிறார். பணம் மட்டும் வாழ்க்கை அல்ல, கடின உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் இந்த இளம் சாதனைப் பெண். (நன்றி: பிபிசி இணையதளம்)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *