இந்திய அரசியலில் எதிர்க்கட்சி ஆட்சி இருந்த மாநிலங்களில் முதலமைச்சர்களான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோரின் கைதின் அரசியல் பின்னணியும், இந்தியாவின் ஜனநாயக முறையில் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளன.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது
அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங் கிணைப்பாளராகவும், டில்லியின் மேனாள் முதலமைச்சராகவும் இருந்தவர்
2024ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று, டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இதற்கு சாட்சியாக இருந்தவர் தற்போது பா.ஜ.க. சார்பில் ஆந்திராவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
கெஜ்ரிவாலும் அவரது கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியாவும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் விடுதலை
கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் அமலாக்கத்துறையின் கைது சட்டவிரோதமானது என வாதிட்டார்.
2024 செப்டம்பர் 13 அன்று, சிபிஅய் வழக்கிலும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, கெஜ்ரிவால் திகார் சிறையிலிருந்து விடுதலையானார்.
ஜாமீன் நிபந்தனைகளாக, அவர் தனது அலுவலகத்துக்கோ அல்லது தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது, சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என உத்தரவிடப்பட்டது.
கெஜ்ரிவாலின் கைது – இதனைத் தொடர்ந்து பாஜக ஆம் ஆத்மியின் உள் விவகாரங்களில் புகுந்து இரண்டாம் மட்டத் தலைவர்களிடையே குழப்பம் ஏற்படுத்தியது இதனால் தொண்டர்கள் இடையே பிளவு ஏற்பட்டு 2025 பிப்ரவரி 5 இல் நடந்த டில்லி சட்டமன்றத் தேர்தலில், கெஜ்ரிவால் புது டில்லி தொகுதியில் தோல்வியடைந்தார், மேலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்தது.
ஹேமந்த் சோரனின் கைது
ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியின் தலைவரும், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சருமாவார். 2024 ஜனவரி 31 அன்று, நிலமோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்குகளில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
ஹேமந்த் சோரன் மீது, நிலமோசடி, நிலக்கரி சுரங்க ஊழல், பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அமலாக்கத்துறை, சோரனின் இல்லத்தில் சுமார் 7 மணி நேர விசாரணை நடத்திய பிறகு, அவரைக் கைது செய்தது.
அவரது கைதுக்குப் பிறகு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சம்பாய் சோரன் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சம்பாய் சோரன் பாஜகவில் முக்கியப் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 நவம்பர் 28 அன்று, ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் இந்தக் கைதை அரசியல் பழிவாங்கல் என்று குற்றம்சாட்டின. மேலும் இது ஒன்றிய அரசின் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் முயற்சியாகக் கருதப்பட்டது.
கெஜ்ரிவால், சோரன் இருவரும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; ஒன்றிய அரசுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள்.
இருவரின் கைதுகளும் அமலாக்கத்துறையால் மேற்கொள்ளப்பட்டவை. மேலும் இவை ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டவை.
இரு வழக்குகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டன.
அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனின் கைதுகள், இந்திய அரசியலில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதல்களையும், எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் அமலாக்க்த துறை நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகின்றன.
இத்தகைய நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அவர்களைப் பதவி விலக்க நிர்ப்பந்தம் தரப்பட்டது. இப்போது இதனையே சட்டரீதியாக ஆக்கி, 30 நாள்களுக்கு விசாரணைக் கைதியாக இருந்தாலே முதலமைச்சர்கள், அமைச்சர்களைப் பதவி நீக்க ஆளுநர்களுக்கு அதிகாரத்தை வழங்கும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.