வள்ளுவர் சுரங்கத்திலிருந்து….! (ஓர் ஆய்வு)

2 Min Read

அரசியல்

கற்க கசடற கற்பவை கற்றபின் 

நிற்க அதற்குத் தக                       (குறள் 391)

இந்தக் குறள் எமது கருத்தில் எளியவன் சிந்தனையின்படி மிக மிக ஆழமான பொருளை, இதனைக் கற்போரின் அறிவுப் பக்குவப்படி ஆழத்தை அளந்து பார்த்து சுவைப்பதோடு, வாழ்க்கையின் படிப்பினையாக வாழ்வியல் முறைகளையும்கூட நாம் வரையறுத்துக் கொள்ள முடியும்.

அவரவர் அறிவு அதன் தன்மைக்கேற்ப வள்ளுவரின் விசாலப் பார்வையின் உள்ளே நுழைந்து பயன் பெற முடியும்.

இக்குறளை சற்று சொற்களை மாற்றிப் போட்டுச் சிந்தித்தால், பொருள் எளிதாகப் புரியும்.

வாசிப்பு: கசடறக் ‘கற்க’

வினா: கற்றபின் எப்படி?

விடை: அதற்குத் தக நிற்க’ 

இன்னும் சற்று ஆழமாகப் போவோமா?

வினா: அதென்ன ‘கசடு?’

விடை: ‘கசடு’ என்பதற்கு சிலர் ‘அழுக்கு’ என்றும் வேறு சிலர் ‘தவறு’ என்றும் விளக்கம் கூறுவர் சரி.

வினா: மற்றொரு அய்யம்?

நமக்கு வீடுகளில் தாகம் தீர்ப்பதற்கோ அல்லது ‘பத்தியம்’ போன்ற ரசம், ‘கஷாயம்’ போன்றவற்றைக் குடிக்க வீட்டு மருத்துவம் அல்லது சித்த மருத்து வத்தில் கூறுகிறபோது, அடியில் தங்கியுள்ள ‘கசடு’களை விழுங்க வேண்டாம்; ஒதுக்கி விடுங்கள் அல்லது வெளியே துப்பி விடுங்கள் – விழுங்காமல் என்றுதான் அறிவுரை கூறுவர்.

எனவே ‘கசடு அற’ என்றால் அழுக்கை நீக்குங்கள், தவறை தள்ளுங்கள் – சரியானவற்றை மட்டும் ‘வடிகட்டி’ வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பொருள் கொள்ளலாமா? தவறில்லை.

‘கல்வி’ என்பதற்கு மூலச் சொல்லையே ஆராய்ந்தார் தந்தை பெரியார் என்ற ஒப்பற்ற சுய சிந்தனையாளர்; பல அறிஞர்களும் அப்படியே கூறுகின்றனர். ‘கல்வி’ என்பது கல்லுதல், வெளியே கொணர்தல் என்பதன் மூலம் கிடைக்கும் ‘அறிவு’ என்றே கூறுவர்.

எனவே ‘கல்வி’ என்பது – மனித மூளைக்கென சிந்தனை ஆழத்தில்  ‘புதை பொருளாக’ உள்ளதை வெளியே கொண்டு வந்து காட்டி, நமது ஆற்றல் வளர துணை புரிய உதவும் கருவியே ‘கல்வி’ என்பது அவரது கருத்து!

எனவேதான் எப்படி தங்கம் – வைரம் கிடைக்க  மண்ணை சலித்து, புடைத்து, ஒதுக்க வேண்டியவற்றை ஒதுக்கிய பிறகே, ‘தங்கம்  – வைரம்” கிடைக்கிறது – உடனிருக்கும் மண்ணை வெளியே ஒதுக்கி விடுகிறோம் அல்லவா – அந்தப் பொருள்தான் ‘கசடு’கள்

கசடுகளை நீக்கினால்தானே தேடும்

அரிய பொருள் கிடைக்கும்?

எனவே,

கற்பவை என்பவை ‘கசடு’ அற கற்றலே, பொய்மை நீக்கிய உண்மை;

அறியாமை போக்கிய அறிவே!

பேதமை நீக்கிய வாய்ப்பே!!

இல்லாமை அகற்றிய இருப்பே!!!

இன்னும் தோண்டுவோம் – திருவள்ளுவர் பெரு வள்ளுவராகக் கிடைப்பார்!

‘கற்றனைத் தூறும் ‘அறிவு’ என்று மற்றொரு குறளில் கற்றுத் தருகிறார் அல்லவா அவர்!

அறிவை விரிவு செய்தால்

கசடு அறவே அறும்; அகலும்!

மூடநம்பிக்கைகள் – பகுத்தறிவுக்கு முரணா னவை – கசடு என்றும் அறியுங்கள்; அழையுங்கள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *