“கேட்கத் தானே பேசுகிறோம்!”
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்பட அரங்க நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், பயிற்சிப் பட்டறைகள் அனைத்தையும் அரும்பாடுபட்டு, பெரும் செலவு செய்து ஒருங்கிணைக்கும் தோழர்கள் ஒலி அமைப்பில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.
1. அரங்கு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டால், அதற்கேற்ற ஒலி அமைப்பு அவ்வரங்கில் இருக்கிறதா என்று முன்பே பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. பெரும்பாலான அரங்குகள் கூட்டம் நடத்துவதற்கு ஏதுவான ஒலி அமைப்பு வைத்திருப்பதில்லை. எனவே அங்கிருக்கும் ஒலிபெருக்கிக் கருவிகளாலும், அரங்கு அமைப் பாலும் எதிரொலி ஏற்படவும், பேச்சு சரியாக சென்றடையாமல் இருக்கவும் வாய்ப்பு அதிகம். எதிரொலி இருக்கும் அரங்குகளில் நிகழ்ச்சி நடத்துவதால் எதிர்பார்க்கும் பயனும் ஏற்படாது; பார்வையாளர்களும், பேச்சாளரும் அயர்ச்சி அடைந்துவிடுவர்.
எனவே, சரியான ஒலி அமைப்பை முன் கூட்டியே உறுதி செய்துகொண்டு, தேவையெனில் தனியாக ஒலிபெருக்கிக் கருவிகளை ஏற்பாடு செய்துகொள்வதே பயன் தரும்.
3. பொதுக் கூட்டங்களில் சட்டத்திற்குட்பட்ட வகையில் தெளிவான, அதிகத் தொலைவு கேட்கும் வகையிலான ஒலிபெருக்கிப் பெட்டிகளை (Speaker Box)ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. தேவையெனில் கழகப் பாடல்களையும், பேச்சுகளையும் ஒலிபரப்ப வசதியாக PenDrive பயன்படுத்தும் வசதியும், செல்பேசியிலிருந்தும் கணினியிலிருந்தும் ஒலிபரப்பும் வகையில் 3.5 mmஆடியோ ஜாக்கும் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
5. ஒலி வாங்கி (Mic) சரியானதாக இருக்க வேண்டும். சரிவர இணைப்பில்லாத கேபிள் வயர், பேச்சாளர்களின் தொண்டையைப் பிடிக்கும் வகையிலான தரமற்ற, பழைய, பழுதடைந்த ஒலிவாங்கிகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
6. பேச்சாளரின் உயரத்திற்கேற்ற Stand, Podium, அல்லது போடியத்திற்கேற்ப உயரத்தை அதிகரிக்க வாய்ப்பான அதிகப் பரப்புடைய ஆசனப் பலகை போன்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
7. கலை நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், ஒலி அமைப்பு எப்படி இருக்க வேண்டும், எத்தனை ஒலிவாங்கிகள், என்ன உயரத்தில் ஸ்டாண்டுகள் என்பதை முன்பே அவர்களிடம் பேசித் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
8. எந்த மேடையாயினும், பேச்சாளருக்கு ஒலி கேட்கும் வகையிலான Monitor (Speaker) வைக்கப்பட வேண்டும்.
9. பயிற்சிப் பட்டறைகளில் Projector தேவைப்படின், அதற்கேற்ற திரையும், சரியான வெளிச்சம் வரும் வகையிலான Projectorம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
நிகழ்ச்சிகள் சிறக்க, தோழர்கள் இவற்றில் கவனம் செலுத்துமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்