ஜிஎஸ்டி விகிதத்தை மறு சீரமைக்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஒப்புதல்

2 Min Read

சென்னை, ஆக. 22- ஜி.எஸ்.டி. விகிதத்தை மறுசீரமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங் கும் என்று டில்லியில் நடந்த அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

அமைச்சர்கள் குழுக்கூட்டம்

ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டம், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) இழப்பீட்டு மேல்வரியினை மறு உருவாக்கம் செய்வதற்கான அமைச்சர்கள் குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

ஜி.எஸ்.டி. விகிதங்களை சீரமைக்கும் முனைவுகள் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், மாநிலங்களின் நிதி ஆதாரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் பெரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்திவரும் நிலையில், இதற்கான செலவினங்களை குறைக்கும் வகையில் வரிசீரமைப்பு வழிவகுக்கக்கூடாது.

நீட்டிக்க வேண்டும்

குறிப்பாக சமூக நலத்துறையில் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம் முழு மனித ஆற்றலையும் அடைவதற்கான வழியை காட்டுகின்றன. எனவே ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேற் கொள்ளும் வரி சீரமைப்பு முனைவுகள் ஒவ்வொரு மாநிலத்தின் வருவாயை பாதுகாக்கும் விதமாக அமைந்திட வேண்டும். ஜி.எஸ்.டி. விகிதங்களை சீரமைக்கும், தருணத்தில் இழப்பீட்டு மேல்வரியும் முடிவுக்கு வரவுள்ளது. ஒரே நேரத்தில், ஜி.எஸ்.டி. வரி விகிதக்குறைப்பு மற்றும் இழப்பீட்டு மேல்வரியை நீக்குவது ஆகியவை மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும். எனவே ஜி.எஸ்.டி. விகித மறுசீரமைப்பு காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடு செய்ய இழப்பீட்டு மேல்வரியை நீட்டிக்க வேண்டும்.

ஒத்துழைப்பு

தற்போது மேல்வரி விதிக்கப்பட்டு வரும் பொருட்கள் மீது, இழப்பீட்டு மேல்வரியினை தொடர இயலாத நிலை யில், மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை குறைப்பதற்கு, மாற்று வழிமுறை செய்யப்பட வேண்டும்.

இழப்பீட்டு மேல்வரியை 4 முதல் 6 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு வருவாய் இழப்பை ஈடுசெய்ய மாநிலங்கள் மட்டும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். உடனடி தீர்வாக மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதமாக எவ்வித நிபந்தனையும் இல்லாமல் உயர்த்தப்பட வேண்டும். மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை கருத்தில்கொண்டு. ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மறுசீரமைப்பதில் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *