சென்னை, ஆக. 22- பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு நிறைவு பெற்றது. 1,45,481 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு இருக்கின்றன.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாணவர் சேர்க்கை நடந்திருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
பொறியியல் கலந்தாய்வு
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 423 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 7ஆம் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்தது.
அதனைத்தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வும், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுப்பிரிவு கலந்தாய்வும் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது.
மொத்தம் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையிலும், 2ஆவது சுற்று கலந்தாய்வு கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் கடந்த 7ஆம் தேதி வரையிலும் நடந்து முடிந்தது. 2ஆவது சுற்று முடிவில் 92,424 இடங்கள் நிரம்பியிருந்தன.
அதனைத்தொடர்ந்து 3ஆவது சுற்று கலந்தாய்வு கடந்த 7ஆம் தேதி தொடங்கி, நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இந்த சுற்றில் பொதுப்பிரிவில் 50,093 இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 2,075 இடங்களும் என மொத்தம் 52,168 இடங்கள் நிரம்பின. ஆக சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு. பொதுப்பிரிவு என அனைத்து இடங்களையும் சேர்த்து மொத்தம் 1,45,481 இடங்கள் நிரம்பி இருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
மொத்தம் உள்ள 187.297 இடங்களில் 1,45,481 இடங்கள் நிரம்பி யிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 77.7 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. கலந்தாய்வு நிறைவில் 41,746 இடங்கள் நிரம்பவில்லை.
கலந்தாய்வு தொடங்கியதில் இருந்து இந்த ஆண்டு 50 ஆயிரம் இடங்கள் வரை காலியாகலாம் என கல்வியாளர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அதைவிட குறைவான காலியிடங்களே இந்த ஆண்டு ஏற்பட்டு இருக்கின்றன.
மாணவர் சேர்க்கை
ஒட்டுமொத்தமாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், 39 கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. 118 கல்லூரிகள் 95 சதவீத இடங்களுக்கு அதிகமாகவும், 164 கல்லூரிகள் 90 சதவீத இடங் களுக்கு அதிகமாகவும், 205 கல்லூரி கள் 80 சதவீத இடங்களுக்கு அதிக மாகவும், 292 கல்லூரிகள் 50 சதவீத இடங்களுக்கு அதிகமாகவும், 32 கல்லூரிகள் 10 சதவீத இடங் களுக்கு அதிகமாகவும் பூர்த்தி செய் திருக்கின்றன. 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கையும், 3 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையும் ஏற்பட்டுள்ளன.
இது கடந்த ஆண்டுகளை காட்டி லும் மாணவர் சேர்க்கை நன்றாகவே இருந்துள்ளது என்றும், அதிலும் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி இருக்கிறது என்றும் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறினார்.
மண்டல வாரியாக…
மேலும் இந்த ஆண்டு ‘கோர்’ பொறியியல் படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும், மேலும் ஆரம்பத்தில் இருந்தே கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பொறியியல் படிப் புகளிலும் ஏராளமான மாணவர்கள் சேர்ந்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மண்டலவாரியான மாணவர் சேர்க்கையில் கோவை மண்டலத்தில் (85 சதவீதம்) அதிகளவில் மாண வர்கள் சேர்ந்திருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக சென்னை மண்டலம் (78 சதவீதம்), நெல்லை மண்டலம் (67 சதவீதம்), திருச்சி மண்டலம் (66 சதவீதம்) இடங்கள் நிரம்பி உள்ளன. இதில் மதுரை மண் டலத்தில்தான் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. அங்கு 55 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றன. இதில் நிரம்பாத இடங்கள் அடுத்தகட்டமாக தொடங்கும் துணை கலந்தாய்வில் சில குறிப்பிட்ட இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் வழியில் படிக்கக் கூடிய சிவில் படிப்பில் 328 இடங்களில் 280 இடங்களும், மெக்கானிக்கல் படிப்பில் 386 இடங்களில் 274 இடங் களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் படிப்பில் அனைத்து இடங்களும் (35 இடங்கள்) நிரம்பி யுள்ளன