கி.தளபதிராஜ்
“மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் முதன்மையான கொள்கை. அதாவது எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல. அது போலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்ல. ஒவ்வொரு மனிதனும் சுதந்திர மாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். இந்த நிலை ஏற்பட ஜாதி ஒழிய வேண்டும்!” என்ற பெரியார், தன் வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்புக்காக போராடினார்.
“மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக் கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவ மாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி முழுகச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது?” என்றார்.
காங்கிரசில் இருந்தபோதே 1924ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராடி வெற்றிகண்டார் பெரியார். அந்தப் போராட்டமே இந்தியாவில் நடைபெற்ற முதல் சமூக நீதிப்போராட்டமாக வரலாற்றாய்வாளர்கள் குறிக்கின்றனர். அதே காலகட்டத்தில் சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யர் நடத்திய குருகுலத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பேதப் படுத்தப்பட்டதை அறிந்து அதற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கினார் பெரியார். ஜாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு வகுப்புவாரி உரிமை கோரி காங்கிரசை விட்டே வெளியேறினார்.
பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டமானாலும், இராமர் பட எரிப்பானாலும், புராண, இதிகாச, மனுதர்ம பிரதிகள் கொளுத்தப்பட்டதானாலும் அனைத்தும் ஜாதி ஒழிப்பிற்காகவே அவரால் நடத்தப்பட்டது. ஜாதி ஒழிய வேண்டுமானால் இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் ஒழிய வேண்டும்: ஒழிக்கப்பட வேண்டும் என்றார். ஜாதியின் மூல வேரை தேடித் தேடி அழிக்க முயன்ற பெரியார், அது எந்த வடிவில் வந்தாலும் அதை அழித்தொழிப்பதையே தனது தலையாய பணியாய் மேற்கொண்டார்.
1857இல் பார்ப்பனர்களால் தூண்டப்பட்ட சிப்பாய் கலவரம் முடிவுற்ற நிலையில், காங்கிரஸ் கொடுத்த அழுத்தத்தில் ‘மத சம்பிரதாய விஷயங்களில் பிரிட்டீஷ் அரசு இனி தலையிடாது!’ என விக்டோரியா மகாராணி வாக்குறுதி அளித்தார். இதையே குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்ட பார்ப்பனர்களும், காங்கிரசில் இருந்த பிற்போக்கு சக்தியினரும், பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வந்தனர். ‘மத விஷயங்களில் தலையிடுவதில்லை!’ என்ற கொள்கை, காந்தி – இர்வின் ஒப்பந்தத்திற்குப் பிறகு 1931ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் தலை தூக்கியது.
காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை நடத்தி வந்த பெரியார் தனது குடிஅரசு பத்திரிகையில் பிரிட்டீஷ் அரசின் பார்ப்பன ஆதரவுப் போக்கையும், அதற்குக் காரணமாக விளங்கிய காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார்.
1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. “வெள்ளைக்காரனிடமிருந்து ஆட்சி பார்ப்பனர்களின் கைக்கு மாறியிருக்கிறது. வெள்ளையன் வெளியேறிய இந்தியாவில் ஜனநாயகத்தை (Democracy) எதிர்பார்க்க முடியாது. இனி பார்ப்பனநாயகம் (Brahminocracy) தான் கோலோச்சும்!” என்ற பெரியார் 1947 சுதந்திர நாளை துக்க நாளாக அறிவித்தார்.
பெரியார் எச்சரித்தபடியே அனைத்தும் நடந்தது. 1942 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கிரிப்ஸ் தூதுக்குழுவைத் தொடர்ந்து 1946இல் இந்தியாவிற்கு வந்த விக்டோரியா மகாராணியின் அமைச்சரவை தூதுக் குழுவும் இந்தியாவிற்கெனத் தனியானதொரு அரசியல் நிர்ணயசபையை உருவாக்கப் பரிந்துரை செய்தது. அதன்படி அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இராஜேந்திரப்பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் வரைவுக்குழு உறுப்பினர்களாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், கோபால்சாமி அய்யங்கார், அல்லாடிகிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, போன்றோர் இடம் பெற்றனர். 1950 ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்திய அரசியல் சட்டம் உருவாகிக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே, ஜாதிக்கொரு நீதி என்ற இந்து லா வை எடுத்துவிட உறுதி வேண்டும் என்று எழுதினார் பெரியார்.
1931இல் தந்தை பெரியார் அவர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான கராச்சி பிரஜா உரிமைத் திட்டம் நகல் எடுக்கப்பட்டதுபோல் மீண்டும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25, 26 பிரிவுகள் அமைந்தன. அதோடு 13, 19, 368, 372(1) ஆகிய பிரிவுகளும் ஜாதி ஆதிக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்தது கண்டு வெகுண்டார் பெரியார்.
1956ஆம் ஆண்டு மயிலாடுதுறை மணல்மேட்டில் பிப்ரவரி 17ஆம் நாள் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “சட்டத்தின் மூலம் ஜாதி ஒழிய வேண்டும். சட்டத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகள் எல்லாம் ஒழிந்தால்தான் கொஞ்சம் அயர்வேன். பார்ப்பனத்தி நமக்குப் பெண்டாட்டி மட்டுமல்ல. வைப்பாட்டியாக இருந்தாலும் அவருக்குச் சொத்து கொடுக்க வேண்டும். ஆனால் பாப்பானுக்கு நம் ஜாதிப் பெண் பெண்டாட்டியாக இருந்தால் கூட கணவனிடம் சொத்து கேட்க உரிமை இல்லை. இப்படிப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டு ஜாதியை ஒழிக்க முடியுமா? முதலில் இந்த சட்டத்தை கொளுத்தி விட்டுப் பிறகு நேரு, ‘ஜாதி ஒழிய வேண்டும்!’ என்று சொன்னால் அதை ஒருவாறு உண்மை என்று நம்பலாம்.” என்றார் பெரியார். (குடிஅரசு : 05.03.1956)
சட்ட எரிப்பு போராட்டத்திற்கு முன் பெரியார் நடத்தியது ‘பிராமணாள்’ பெயர் பலகை அழிப்புப் போராட்டம். சென்னையில் நடைபெற்றுவந்த பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம் குறித்து பேசிய பெரியார், “இதுவரை ஜாதியை ஒழிக்க வேண்டுமென்ற முயற்சியில் 700 பேர் வரை சிறைக்குப் போய்விட்டார்கள். இதைப்பற்றி சர்க்காரோ, சம்பந்தப்பட்டவர்களோ ஏதும் கவனித்ததாகத் தெரியவில்லை. இனியும் ஆயிரம் பேர்வரை அனுப்பினாலும் இந்த நிலைதான் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. ஆகவே வேறு வழி என்ன என்பதைச் சிந்திக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
அடுத்த மாதம் 3 ஆம் தேதி தஞ்சையில் திராவிடர் கழக மாநாடு கூடப்போகிறது. அங்கு மிகவும் தீவிரமான தீர்மானங்கள் செய்யப்படலாம். மாநாட்டிற்கு முன்பே நம்மைப் பிடித்து அடைத்தாலும் அடைக்கலாம். அல்லது நமது தீர்மானங்கள் ஏற்பட்டவுடன் அந்தச் சாக்கை வைத்துப் பிடித்தாலும் பிடித்து அடைக்கலாம். எப்படி இருந்தாலும் இன்றைய தேக்க நிலையை ‘நாம் ஒரு வெட்டுக் கொடுத்துத்தான் நமது பகடைக்காயை’ நகர்த்த வேண்டியவர்களாக இருக்கிறோம்!’ என தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். (விடுதலை 28.10.1957)
பெரியார் தன் வாழ்நாளில் நடத்திய போராட்டங்களிலேயே மிகக் கடுமையானதும் பல்லாயிரக் கணக்கான தோழர்கள் தங்கள் குடும்பத்தைத் துறந்து மூன்று மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை சிறைக்கொட்டடியில் சிறைபட்டு சித்திரவதைப்பட்டதும், சிறையிலேயே சிலர் தங்கள் இன்னுயிரை இழந்ததும், விடுதலையான சில நாட்களிலேயே பல தோழர்கள் நோய்வாய்ப்பட்டு மாண்டதுமான மிகப் பெரிய இழப்புக்கு ஆளான ஒப்புவமை இல்லாத ஒரு போராட்டம் தான் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்.
சாகத் துணிவு கொள்ளுங்கள்!
அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தபோது பெரியாருக்கு வயதோ 79! சென்னை வண்ணை நகரில் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மிக நீண்ட விளக்க உரையாற்றிய பெரியார் தோழர்கள் உயிர் கொடுக்கவும் தயாராக வேண்டும் என்று கர்ஜித்தார்.
தஞ்சை ஸ்பெஷல் மாநாடு
நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற ஸ்பெஷல் மாநாட்டில், “ஒரு மனிதன், நான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன்? என்று கேட்கக் கூடாது; கேட்க உரிமை இல்லை என்றால் இது என்ன சுயராஜ்யம்? நீங்கள் சிந்திக்க வேண்டும். எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக் கூட உதைத்ததில்லை. குத்தியது இல்லை. ஒருவனுக்குக் கூட ஒரு சிறு காயம் கூட ஏற்படுத்தியதில்லை. கலவரம் இல்லாமல், நாசம் இல்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன். வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன் தானே? வேறு வழி இல்லை என்றால் என்ன செய்வது? நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ் ஜாதி? இதற்குப் பரிகாரம் வேண்டுமென்றால், குத்துகிறேன் என்றான் – வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல் வெட்டாமல் இருப்பதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது.” என்றார் பெரியார்.
ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை திருத்த அரசுக்கு 15 நாள் வாய்தா கொடுத்து தஞ்சை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட எரிப்புப் போராட்டத்திற்கு கழகத் தோழர்களையும், பொதுமக்களையும் தயார்படுத்தும் பணி முழு வீச்சில் தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட ஆர்வமுள்ள தோழர்களின் பட்டியல் விடுதலையில் தினந்தோறும் வெளிவந்தது. போராட்டத்திற்கான அவசியத்தை விளக்கி விடுதலையில் தலையங்கங்களும் கட்டுரைகளும் வந்தவண்ணம் இருந்தது.
“தோழர்களே! நான், மூன்று ஆண்டுகளுக்கோ, பத்து ஆண்டுகளுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ மற்றும் பிரிட்டிஷ்காரன் காங்கிரஸ் கிளர்ச்சியின் போது கையாண்ட எந்த விதமான கொடிய தீவிரமான அடக்குமுறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும் பிரயோகித்தாலும் கூட அவைகளுக்கு பயப்பட்டு என் லட்சியத்தையோ திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவதில்லை! கழகத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே! நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்குப் பயந்துவிட வேண்டியதில்லை; பயந்து விடவும் மாட்டீர்கள். சட்டத்தை பார்த்துப் பயந்துவிட்டதாக பேர் வாங்காதீர்கள்! ஆகவே இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டு தீர்மானத்தை நிறைவேற்ற பெயர் கொடுங்கள்!” என்ற பெரியாரின் அறிவிப்பு கொட்டை எழுத்தில் விடுதலையில் வெளிவந்தது. (விடுதலை : 8.11.1957)
பெரியார் அவர்கள் தன் மீது போடப்பட்ட வழக்கில் சிறைப்படுத்தப் படுவோம் என அறிந்து அதற்கு முன் போராட்ட வீரரர்களை சந்திக்க ரயிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எரிக்கப்பட வேண்டிய அரசியல் சட்டங்கள் சிறு தொகுப்பாக பல்லாயிரக் கணக்கில் அச்சடித்து பெரியார் பயணத்தின் போது வழங்கப்பட்டது. அதற்கும் காலணா வீதம் விலை நிர்ணயித்திருந்தார். தோழர்கள் போட்டி போட்டுகொண்டு வாங்கிச் சென்றனர். 40,000 ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தது.
சாம்பலை அமைச்சருக்கு அனுப்புங்கள்
“சட்டத்தைக் கொளுத்துங்கள்! சாம்பலை அமைச்சருக்கு அனுப்புங்கள்! சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன் மூலம் அரசாங்கத்தினர், ‘ஜாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும்!’ என நமக்கு சவால் விட்டிருக்கின்றனர். இந்தச் சவாலை எதிர்த்து சட்டத்தைக் கொளுத்தா விட்டால் நீங்கள் மனிதர்கள் தானா? சட்டத்தைக் கொளுத்தி சாம்பலை சட்டம் செய்த அமைச்சருக்கு அனுப்பி வையுங்கள்! சட்டம் கொளுத்திய மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன் மூலமாவது கொஞ்சம் தெரிந்து கொள்ளட்டும்!” என்றும் பெரியார் அறிவித்தார்.
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பெரியார்
தமிழ்நாடு முழுவதும் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும் இடங்கள் விடுதலையில் வெளியிடப்பட்டது. சென்னையில் எழும்பூர் பெரியார் திடலில் 26.11.1957 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களும் மற்ற கழகத் தோழர்களும் கலந்து கொண்டு பேசுவார்கள். கூட்ட முடிவில் அரசியல் சட்டம் கொளுத்தப்படும் என்ற செய்தி 24 ஆம் தேதி விடுதலையில் வந்தது. 25 ஆம் தேதி மாலை திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் கைது செய்யப்பட்டார்.
இந்திய அரசியல் சட்டம் தீக்கிரை!
திட்டமிட்டபடி இந்திய அரசியல் சட்டம் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் கொளுத்தப்பட்டது. வயது வித்தியாசமின்றி ஆண்களும், பெண்களும், நிறைமாத கர்ப்பிணிகளும், கைக் குழந்தைகளோடு தாய்மார்களும் குடும்பம் குடும்பமாக பல்லாயிரக் கணக்கில் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறையில் இடமின்றி கைது செய்ய இயலாமல் பல இடங்களில் கைதை தவிர்த்தது காவல்துறை. கைது செய்ய மறுக்கப்பட்டவர்கள் அருகருகே வேறு வேறு இடங்களுக்குச் சென்று சட்ட நகலைக் கொளுத்தி மீண்டும் கைதாக முயற்சித்தனர். திருச்சியில் மட்டுமே 3000க்கும் மேற்பட்டோர் சட்டத்தை எரித்தனர்! தமிழ்நாடு காவல் துறை கைது எண்ணிக்கையை எவ்வளவோ குறைக்க முயற்சித்து கடைசியில் 2718 என கணக்கு காண்பித்தது.
சிறையில் நான்காயிரம் தன்மான வீரர்கள்
இன்று மாலை வந்த கணக்குப்படி திருச்சி மத்திய சிறையில் மட்டும் சட்ட எரிப்பில் கைதான வீரர்கள் 1940 பேர் இருக்கிறார்கள். இது தவிர திருச்சி மாவட்டம் பூராவிலும் உள்ள சப்ஜெயல்களிலும் சட்ட எரிப்பில் கைதானத் தோழர்கள் உள்ளனர். கடலூர், கோவை, வேலூர், சென்னை முதலிய ஊர் மத்திய சிறைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு மாவட்ட சப் ஜெயில்களிலும் கருஞ்சட்டை வீரர்கள் உள்ளனர். சரியான கணக்கு வந்தால் சுமார் நாலாயிரம் பேர் இருக்கக்கூடும் (விடுதலை : 4.12.1957)
சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற வீரர்களின் பட்டியல் விடுதலையில் பக்கம் பக்கமாக தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் வெளியிடப்பட்டது. அடுத்தடுத்து வந்த கட்டுரைகள் போராட்ட வெற்றியை சிறப்பாக பதிவு செய்தது.