இந்நாள் – அந்நாள்

2 Min Read

கைவல்யம் பிறந்தநாள் இன்று (22.08.1877)

மலையாளக் கள்ளிக்கோட்டை யில் 22.08.1877 அன்று பிறந்த பொன்னுச்சாமியவர்கள் (கைவல்யம்) திருச்சியில் ஏழாம் வகுப்புவரை பள்ளிக்கல்வி பயின் றாரெனினும் அறிவுக்கடலாக விளங்கினார்.

தந்தை பெரியார் அவர்களின் இளமைப் பருவத்தில், அவர்களின் கடைக்கு வரும் கணக்கற்ற ‘சாமியார்’களோடும் ‘பாகவதர்’களோடும் தருக்கமும் கிண்டலும் செய்து கொண்டிருந்த நாள்களில் அறிமுகமானவர்தான், பிற்காலத்தில் இயக்கத்தின் விலைமதிக்கவொண்ணா உடைமையாய்த் திகழ்ந்தார் கைவல்யம் அவர்கள்.

இவர்களின் அறிமுகம் கருத்துப் பரிமாற்றம், அன்பு, ஆர்வம், நட்பு, பற்று, உரிமை என்று கூர்தலியலின்படி ஓங்கியது. இருவரும் ஒன்றாக ஏனாம்பள்ளி  ஜமீன்தாரர் திருமணத்துக்குச் சென்றனர்.  திருமண வீட்டில் விருந்து அருந்திக்கொண்டிருந்தபோது, தந்தை பெரியாருக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக அவரின் நீர்க்குவளையைக் கையில் எடுத்த பார்ப்பனரின் மகனை அருகிலிருந்த சமையற் பார்ப்பனத் தடியன் ஒருவன், “என்னடா மடையா, சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் எடுத்துவிட்டாய்!” என்று திட்ட, சீற்றத்துடன் எழுந்த கைவல்யத்துறவி தம் எச்சிற் கையினாலேயே ஓங்கி அவன் செவுளில் ஓர் அறைவிட்டு, “யாரடா சூத்திரன்?” என்று முழங்கி, அவனை மன்னிப்புக் கேட்குமாறு செய்தார் என்னும் செய்தி நம் சிந்தனைக்குப் பெரும் விருந்து!

இத்தகைய சாமியார்  தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கம் அமைக்கும் பணியில் உற்ற தோழராகத் தோள் கொடுத்தார். நாடெங்கிலும் சென்று மக்களோடு முகத்திற்கு முகம் பேசாவிட்டாலும், ‘குடிஅரசு’ கட்டுரைகளின் வாயிலாகத் தமிழர்களின் அகத்தோடு நிறையப் பேசினார். முதலாம் சுயமரியாதை மாநாட்டின்போது, “மனுவின் காலம் எப்போதோ போய் விட்டது; பூமியானது பலவித மாறுதல்களை அடைந்து விட்டது; நதிகள் தம் சொந்த மார்க்கங்களை நீத்தன; புஷ்ப ஜாதிகளும் மிருக ஜாதிகளுமே மாறிவிட்டன; பன்றிக்கறியைத் தின்னவே பார்ப்பான் படிக்கும் படிப்பெல்லாம் பாடுபடுகிறது. இப்படியிருந்தும் ‘பிராமணர்கள்’ என்று சொல்லிக் கொண்டு நம் நாட்டில் இன்னும் அப்படியே மனுவால் எழுதப்பட்ட விதிகளுக்கும் கருமங்களுக்கும் தாராளமாக அடிமைத்தனம் வேண்டுமாம்!” என்றெழுதி நம்மின மக்கட்கு உணர்ச்சியூட்டிய இவர், “நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஒன்று சேர்ந்தால், ஒருமைப்பட்டுச் சிந்தையைச் செலுத்த முடிந்தால், ஒரே பாட்டைப் படித்தாரானால், ஒரே ஒரு கொள்கையை நினைக்க வல்லவர்களானால், எந்தக் காரியத்தையும் செய்து விடலாம்!” என்று தூண்டிவிட்டு, பல்லாயிரக்கணக்கில் செங்கற்பட்டுக்குப் பயணமாக வைத்தார். தந்தை பெரியார்  அவர்களின் இயக்கத்தின் எதிர்காலத்திற்கான திருமண ஏற்பாட்டின்போது அதை வரவேற்று இவர் எழுதிய கட்டுரை கருத்துக்கினிமை பயப்பதாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *