சென்னை, ஆக.22 எந்நாளும் சமூகத்தின் நலனுக்காக சிந்தித்து வாழ்ந்தவர் தான் ரகுமான்கான் என துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேனாள் தி.மு.க. அமைச்சர் ரகுமான்கான் எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நியாயங்களின் பயணம், மவுனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய நூல்களை வெளியிட்டார். இந்த நிகழச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இடி, மின்னல், மழை
நம்முடைய தி.மு.கழகம் 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் ஆளுங்கட்சியை சட்டசபையில் கேள்விகளாலும், தங்களுடைய சிறப்பான வாதங்களாலும் அதிரச் செய்தவர்கள் மூன்று பேர். அதில், ஒருவர், இன்றைக்கு நாம் கொண்டாடிக் கொண்டிருக் கூடிய நம்முடைய ரகுமான்கான்.
மற்றொருவர், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அடுத்தது க.சுப்பு. இவர்களை தான், திமுக தலைவரும் கட்சியின் உடன்பிறப்புகளும் கட்சியின் இடி, மின்னல், மழை என்று புகழ்ந்தார்கள். அந்த வகையில், நம்முடைய இன எதிரிகள் மீது தன் பேச்சாற்றலால் இடியாக இறங்கியவர் தான் ரகுமான் கான். ரகுமான்கான், கலைஞர் அவர்களுடைய மனம் கவர்ந்த பேச்சாளராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். கலைஞரின் மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்தவர். நம்முடைய தலைவரின் மீதும் மிகுந்த நம்பிக்கையும், அன்பும் கொண்டிருந்தவர்.
இந்தக் கட்டுரைத் தொகுப்புக்கான பணிகளை ரகுமான்கான், பல ஆண்டுகளுக்கு முன்பே முடித்துவிட்டார். ஆனால், இந்த நூலை அவர் அப்போது வெளியிடவில்லை. காரணம், நம்முடைய தலைவர், முதலமைச்சர் நாற்காலியில் அமரட்டும். அப்போதுதான் நான் வெளியிடுவேன் என்று உறுதியோடு இருந்தார். இதை நம்முடைய தலைவர் தன்னுடைய முன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளார். ரகுமான்கான் விரும்பியது போல, இன்றைக்கு முதலமைச்சராகவே வந்து அவருடைய நூல்களை நம்முடைய தலைவர் வெளியிடுகிறார்கள். இது தான் திராவிட இயக்கம். இது தான் கழகத் தொண்டர்களுக்கும் தலைவருக்கும் உள்ள பாசப்பிணைப்பு. இந்த உணர்வு தான், இந்த இயக்கத்தை இன்றைக்கும் உயிரோட்டமாக வைத்திருக்கிறது.
சமூக சிந்தனை
ரகுமான்கான் பேச்சாற்றல் காரணமாக அவரை நாம் ‘இடி’ என்று சொன்னாலும், அவர் எழுதிய கவிதை நூல்களை படித்துப் பார்த்தால், அவர் தென்றலாகவும் இருந்து இருந்திருக்கின்றார் என்று உங்களுக்கெல்லாம் புரியும். நடைப்பிணம் என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். மனிதனுடைய அய்ம்புலன்கள் இந்த சமூகத்திற்கு எப்படி பயன்பட வேண்டும் என்று அந்தக் கவிதை சொல்கிறது. கண்கள் சாதாரணமாகப் பார்க்கக் கூடாது, அநீதிகளை பார்க்க வேண்டும், கால்கள் சாதாரணமாக நடக்கக் கூடாது, நியாயங்களை நோக்கி நடக்க வேண்டும், கைகள் பிறருக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என்பது தான் அந்தக்கவிதை.
இப்படி, எந்நாளும் சமூகத்தின் நலனுக்காக சிந்தித்து வாழ்ந்தவர் தான் ரகுமான்கான். பெரிய கவிதைகள் மட்டுமல்ல, ஹைக்கூ கவிதைகளையும் சிறப்பாக எழுதியிருக்கின்றார். இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலில் அடிமைகள் பாசிஸ்ட்டுகளைப் பார்த்து பயப்படுகிறார்கள், பம்முகிறார்கள். இந்த அடிமைகளுக்காக, அன்றைக்கே ஒரு ஹைக்கூ கவிதையை ரகுமான் கான் எழுதி இருக்கிறார். “மன்னராக இருந் தாலும்.. மண்டியிடாது.. மண் பொம்மை”. ஆனால், மண் பொம்மைகள் கூட செய்யாததை, இன்றைக்கு சில அடிமைகள் டில்லியிடம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கலைஞர் அவர்களுடைய சட்டமன்றப் பொன் விழாவையொட்டி ரகுமான்கான் எழுதிய கட்டுரை ஒன்று இந்த நூலில் இருக்கிறது. அதிலே சட்டமன்றத்திலே கலைஞர் அவர்களுடைய நகைச்சுவையான பதில்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதில் ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட நான் விரும்புகின்றேன்.
1982 ஆண்டில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் ஒன்று காணாமல் போய்விட்டது. அந்த கோயிலின் அதிகாரி ஒருவரும் அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார். அதற்காக நீதி கேட்டு கலைஞர் திருச்செந்தூரை நோக்கி தொண்டர்களோடு நடைப்பயணம் சென்றார். இதுபற்றி சட்டமன்றத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ஒருவர், “கலைஞர் திருச்செந்தூரை நோக்கி நடைப்பயணம் சென்றார். ஆனால், அங்கேயுள்ள முருகன், அவரைப் பார்க்க விரும்பாமல் எம்.ஜி.ஆருடைய ராமாவரம் தோட்டத்திற்கு போய்விட்டார்” என்று கிண்டலாக பேசியிருந்தார். அந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.
அப்போது, சபையில் இருந்த கலைஞர் உடனே எழுந்து “இதுவரைக்கும் முருகனுடைய வேல் தான் காணவில்லை என்று நாம் நினைத்தோம். இப்போது அதிமுக உறுப்பினர் சொல்வதைப் பார்த்தால், முருகனையே காணோம் என்று தெரிய வருகின்றது. முருகன் இருக்கும் இடத்தையும் சொல்லியிருக்கிறார். பேரவைத் தலைவர் அவர்களே, முருகனை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று கலைஞர் அன்று நகைச்சுவையாக சட்டமன்றத்தில் பேசினார். இது மாதிரி பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரை நூலிலே நீங்கள் படிக்கலாம்.
இந்த நூல்கள் வெளியீட்டு விழாவில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட நாம் அத்தனைபேரும் உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.