தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!!
கடந்த இரண்டாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநர் பதவிகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்; காரணம், அத்துறையில் பழுத்த அனுபவமும், ஆளுமையும் பெற்றதாலும், அத்தகைய கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு என்பது அங்கீகார உளத் திருப்தி தந்து, பதவி ஓய்வு பெறுகிறவரை ஊக்கத்தோடு பள்ளிக் கல்வித் துறை பணி செய்தல் அமையும் என்பதாலும், அதனை அய்.ஏ.எஸ். அதிகாரியின்கீழ் கொணர்ந்தால், அது எதிர்பார்க்கும் பலனைத் தராது என்று இரண்டாண்டுகளுக்கு முன்பே நாம், தமிழ்நாடு அரசுக்குச் சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்தோம். கடந்த மே 15 அன்றும் அறிக்கைமூலம் வலியுறுத்தினோம்.
தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்; ஆசிரியர்கள் அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இப்போது மீண்டும் பழைய முறையைப் புதுப்பித்து, தக்க ஆளுமை உள்ள மூத்த கல்வி அதிகாரிகளை இயக்குநர்களாக்கி முதலமைச்சர் அவர்கள் எடுத்த முடிவு சாலச் சிறந்த முடிவு – பாராட்டி, நன்றி கூறுகிறோம்!
புதிய இயக்குநர்களும், கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களும் ஒன்றுபட்டு நன்கு ஒத்துழைத்து கடமையாற்றி, பள்ளிக் கல்வித் துறையை முதன்மை நிலைக்கு மேலும் கொண்டுவர வேண்டுகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.6.2023