சென்னை, ஆக.21- சென்னை மாநகராட்சியில் தூய்மைப்பணியை தனியாரிடம் ஒப்படைக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தீர்மானம்
சென்னை பெருநகர மாநகராட்சியில் 5 மற்றும் 6-ஆவது மண்டலங்களில் துப்புரவுப் பணியை டில்லி எம்.எஸ். டபிள்யூநிறுவனத்துக்கு வழங்கி கடந்த ஜூன் 16-ஆம் தேதி இயற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உழைப் போர் உரிமை இயக்கத்தின் தலைவர் வழக்குரைஞர் கே.பாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். பின்னர் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இங்கு துப் புரவு பணிகளை மேற்கொள்ள நாள் கூலி அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
ஊதியம் குறைக்கலாம்
9 முதல் 15 மண்டலங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த தனியார் நிறுவனம் ஏற்ெகனவே வேலை செய்த பெரும்பாலான துப்புரவு தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக்கொண்டன. இந்தநிலையில் 2 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றும் 5 மற்றும் 6 மண்டலங்களில் தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் வேலை பறிபோகும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், நாள் ஒன்றுக்கு ரூ.793 ஊதியமாக தூய்மை பணியாளர்களுக்கு கிடைக்கிறது. அந்த ஊதியத் தொகையை தனியார் நிறுவனம் குறைக்கலாம். இது தொழில் தாவா சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, துப்புரவு பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மறுசுழற்சி முறை
ஆனால், மருத்துவ விடுப்பு, போனஸ், திருமண உதவித் தொகை ரூ.20 ஆயிரம் என்று அனைத்து சலுகைகளும் பணியில் சேரும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தனியார் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.
மாநகராட்சி தரப்பில், தூய்மைப் பணியை மேம்படுத்த தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்பு குப்பைகள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் தேக்கி வைக்கப்பட்டது. தனியாரிடம் இந்த பணியை ஒப்படைக்கும்போது, மறுசுழற்சி முறையில் இந்த குப்பைகள் அழிக்கப்படும்.
இதனால் சுற்றுச்சுழல் பாதுகாக்கப் படும். இது அரசு கொள்கை முடிவு என்பதால், இதில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது.
அரசுக்கு உரிமை
தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது இல்லை. தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை அரசிடமும், தொழில் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் உள்ளது. தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதால் தூய்மைப் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்களது அடிப்படை உரிமை பாதிக்காது என்று வாதிடப்பட்டது.
எனவே, ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் நலன் கருதி கொள்கை முடிவு எடுக்க உரிமை உள்ளது. அதே நேரம், அந்த முடிவு அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. அதனால் சென்னை மாநகராட்சியில் பணியாற்றியபோது தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய ஊதியத்தை தனியார் நிறுவனமும் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.
ரத்து செய்ய முடியாது
ஊதியம் குறைக்கப்பட்டால், அவர்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். எனவே, தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக (நாள் ஒன்றுக்கு ரூ.793) பெற்ற ஊதியத் தொகையை டில்லி எம்.எஸ்.டபிள்யூ நிறுவனம் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தி உறுதி செய்யவேண்டும்.
தூய்மை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்படும் என்றும் தனியார் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, தூய்மை பணியை தனியாருக்கு வழங்கி இயற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கை முடித்து வைக்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.