சென்னை, ஆக.21 2025 – 2026ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை எம்.எட் (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2025 அன்று முதல் தொடங்கி நேற்றுடன் (20.08.2025) முடிவடைகிறது. இந்த கால அவகாசம் 15.09.2025 வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் (எம்.எட்.) பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 11.08.2025 முதல் தொடங்கப்பட்டது.
மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி விண்ணப்பப் பதிவு இன்றுடன் முடிவடைகிறது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசையின் படி 26.08.2025 முதல் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடங்கும். இதன் விவரம் SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் மாணாக்கர்களுக்கு அனுப்பப்படும். முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று முதல் தொடங்கும்.
எம்.எட். சேர்க்கைகான விண்ணப் பிக்க தவறிய மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க 21.08.2025 இன்று முதல் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக தொடர்ந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 15.09.2025 வரை மாணாக்கர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்” இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்
மாநில கல்விக் கொள்கை கருத்தரங்கு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் 23ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை, ஆக.21 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையின் சிறப்புகளையும் – தேசியக் கல்விக் கொள்கையின் தீமைகளையும் மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கில் சென்னை ”அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்” ஆகஸ்ட் 23 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு “எங்கள் கல்வி எங்கள் உரிமை” என்ற தலைப்பில் ”கருத்தரங்கம்” நடைபெறவுள்ளது.
தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் இரா.ராஜீவ்காந்தி தலைமையில் மாநிலத் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் இரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், பூர்ணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி, ஜெ.இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி – மக்கள் நீதி மய்யத் தலைவர் – மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இந்தக் கருத்தரங்கில் தி.மு.க. மாவட்ட, மாநகர ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருச்சி மருத்துவருக்கு
இங்கிலாந்து மருத்துவக் கல்லூரியில் பன்னாட்டு ஆலோசகர் பதவி
இங்கிலாந்து மருத்துவக் கல்லூரியில் பன்னாட்டு ஆலோசகர் பதவி
திருச்சி, ஆக.21 திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் மேனாள் துணை முதல்வரும், பிரபல நரம்பியல் நிபுணருமான மருத்துவர் எம்.ஏ. அலீம், இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோவிலுள்ள மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் ராயல் கல்லூரிக்கு பன்னாட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியில் நீடிப்பார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நரம்பியல் நிபுணர் இத்தகைய உயரிய பன்னாட்டு பதவியில் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. தற்போது திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நரம்பியல் துறை பேராசிரியராகவும் பணியாற்றிவரும் மருத்துவர் அலீமின் இந்த நியமனம், தமிழ்நாட்டுக்கும் திருச்சிக்கும் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.