இந்தியா’ கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2 Min Read

தமிழ்நாடு

சென்னை, ஆக. 21 இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தி வருமாறு:

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நீதியரசராக விளங்கிய அவர், தமது பணிக்காலம் முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாத்தவர் ஆவார். நமது நாட்டின் அமைப்புகளெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், சுதர்சன் ரெட்டி அவர் களை வேட்பாளராக்கியதன் மூலம், மக்களாட்சியையும் அரசிய லமைப்பின் விழுமியத்தையும் பாதுகாப்பதில் நமது ஒருமித்த உறுதிப்பாடு வலுப்படுகிறது.

சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய மக்களாட்சியைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் பா.ஜ.க.வின் துணை அமைப்புகளாக மாற்றப்பட்டு, அரசியலமைப்புச் சட்டமே ஆபத் தில் சிக்குண்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சியியல், சமூகநீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையில் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவரை ஆதரிப்பதுதான் நம்முன் உள்ள கடமை!

நீட் விலக்கு, கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பது, நியாயமான நிதிப் பகிர்வு, கல்வி நிதி விடுவிப்பு உள்ளிட்ட தமிழ்நாட்டின் நியாய மான பல கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்து வருகிறது. ஆளுநர்கள் மூலமாக இணை அரசாங்கம் நடத்தி, மாநில அரசுகளின் செயல் பாட்டை முடக்கி, உயர்கல்வி நிறுவ னங்களை வலுவிழக்கச் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

மாநில உரிமைகள் பறிப்பு, அதிகாரக்குவிப்பு, வெறுப்பு பிரச் சாரம் தீவிரமாக முன்னெடுப்பு, இடைவிடாத ஹிந்தி & சமஸ்கிருதத் திணிப்பு என அரசியல மைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் அநீதிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்து தீவிரமாகக் குரலெழுப்பி வருகிறது.

மாநில உரிமைகளையும் அரசிய லமைப்புச் சட்டத்தையும் காக்க, மதநல்லிணக்க உணர்வு கொண்ட தமிழ்நாட்டு மக்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து தி.மு.கழகக் கூட்டணி நாடாளுமன்ற, சட்டமன்ற  உறுப்பினர்களுக்கே வாக்களித்துள்ளனர். எனவே, சுதர்சன் ரெட்டி அவர்களை ஆதரிப் பதுதான் அவர்களது முடிவுக்கும் உணர்வுக்கும் மதிப்பளிப்பதாக அமையும்!

அரசியலமைப்பு, பன்மைத்துவம், சமூகநீதி, மொழியுரிமைகள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகவாதியாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடமளித்து அவையில் எதிர்க் கட்சிகளின் குரல்களுக்கு வாய்ப் பளிக்க கூடியவராக, சுதர்சன் ரெட்டி  திகழ்கிறார்.

கூட்டாட்சியலுக்கு எதிரான போக்கு, எதேச்சாதிகாரம் மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புவது ஆகியவற்றை எதிர்த்து நிற்கக் கூடியவராக சுதர்சன் ரெட்டி  மிகச் சரியான தேர்வு என  வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *