ஆளுநருக்குக் கடிவாளம் போட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு

‘‘தமிழ்நாடு சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோ தாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதையடுத்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்துக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்க வைத்தனர். மேலும், சட்டப் பேரவையில் மறுநிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒரு மாத காலத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாத காலத்திலும் ஒப்புதல் அளிக்க வேண்டு மென கால நிர்ணயம் செய்தும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, அதிகாரப்பகிர்வு தொடர்பாக அரசியலமைப்பு சட்ட ரீதியாக 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பி குடியரசுத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதற்கு விடை காணும் வகையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. அப்போது தமிழ்நாடு அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோரும், கேரள அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபாலும் ஆஜராகி வாதிட்டனர். “இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் வாயிலாக பதிலளிக்கப்பட்டுள்ளது. ‘கூடிய விரைவில்’ என்பதற்கு விளக்கம் காணப்பட்டு தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அரசியல் சாசன பிரிவு 143-அய் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் கேள்விகளை எழுப்பி விளக்கம் கோர முடியாது. மொத் தத்தில், இந்த கேள்விகளை குடியரசுத் தலைவரின் கேள்வி களாக கருத்தில் கொள்ளாமல், குடியரசுத் தலைவர் வாயிலாக மத்திய அரசு எழுப்பியுள்ள கேள்வி களாகவே கருத வேண்டும்” என வாதிட்டனர்.

அதையடுத்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியலமைப்பு சட்ட ரீதியாக சிக்கல் எழுந்தால் ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்குமான பங்கு என்ன என்பதை விளக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் குடியரசுத் தலைவர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார். கால நிர்ணயம் செய்து  இரு நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பே இறுதியாகி விடாது. ஒரு வேளை அரசியல் சாசன அமர்வு அந்த தீர்ப்பு தவறு என்றோ அல்லது அதற்கு எதிர்மறையான தீர்ப்பையோ வழங்கலாம். உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள இந்த கால நிர்ணயத்தால் சிக்கல் எழுந்துள்ளது. ஏனெனில், இவ்வாறு கால நிர்ணயம் செய்யக்கூடாது என்ற நோக்கில்தான் ‘கூடிய விரைவில் என்ற வார்த்தையை சட்டமேதை அம்பேத்கர் பயன்படுத்தியுள்ளார்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூரியகாந்த், “இந்த வழக்கு மேல் முறையீட்டு வழக்கு அல்ல. குடியரசுத் தலைவரின் விளக்கம் கோரும் கடிதம் மீதான விசாரணை, அவ்வளவுதான்” என்றார்.

இந்த வழக்கில் முக்கியமானது – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றம் நிறைவேற்றும் ஒரு சட்ட முன்  வடிவிற்கு ஒப்புதல் அளிக்காமல், ஆளுநராக இருக்கக் கூடியவர் எவ்வளவுக் காலம் வேண்டுமானாலும் ‘கோப்’பைத் தூங்கப் போடலாம் என்ற நிலை இருந்தால், சட்டமன்றத்திற்கு என்ன மதிப்பு – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்தவர்கள் எப்படி செயல்பட முடியும்?

ஆளுநர் கால வரையின்றி சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன் வடிவை, எந்தப் பதிலும் அளிக்காமல், பீரோவில் வைத்துக் கொள்ளலாம் என்றால் – அந்தக் காலம் அய்ந்தாண்டுகள் வரை கூட நீளலாம் என்றால், நடப்பது மக்களாட்சியா? ஆளுநர் ஆட்சியா என்ற கேள்வி எழாதா?

வெள்ளைக்காரர்களின் ஆட்சியில் ஆளுநர் நியமனம் என்பது அவர்களின் வசதிக்காக நிர்வாகத்துக்காக!

ஆனால் சுதந்திரம் அடைந்ததாகக் கூறுபவரும் இந்தியாவில் ஆளுநர் என்பவர், வெள்ளைக்காரர் ஆட்சியில் இருந்தது போல் நடந்து கொள்ளலாம். என்றால், அது எப்படி சுதந்திர நாடாக இருக்க முடியும்?

இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு இது தொடர்பான வழக்கைத் தாக்கல் செய்தது.

ஆளுநர் எந்த ஒரு சட்டமுன் வடிவையும் ஒரு மாத கால வரையறைக்குள்ளும், குடியரசுத் தலைவர் 3 மாதத்துக்குள்ளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவம் சமூகநீதி, மதச் சார்பின்மை ஜனநாயகக் குடியரசு என்பதற்கிணங்க தீர்ப்புக் கூறியுள்ளது.

இதை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக குடியரசு தலைவரை தேவையில்லாமல் இதற்குள் புகுத்தி, பிரச்சினையை சிக்கலாக்குவது தேவை தானா?

இந்தியாவில் நடப்பது அதிபர் ஆட்சி முறையல்ல – ஜனநாயகக் குடியரசாகும். ஆனால் ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சியின் கொள்கை என்பது ஒரே நாடு, ஒரே மொழி,ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்பதாகும்.

மாநிலங்களே கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் கொள்கை. அதற்கான அஸ்திவாரத்தை வலிமையாக அமைக்கத்தான் ஒவ்வொரு செங்கல்லாக எடுத்து வைத்துக் கொண்டு வருகிறது. இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு!

உச்சநீதிமன்றத்தைப் ெபாறுத்தவரை குடியரசு தலைவருக்கும், ஆளுநருக்கும் கோப்புகள் மீது விதித்துள்ள காலக் கெடுவில் உறுதியாக இருப்பது வரவேற்கத்தக்கது.

யார் கையிலோ இருக்கக் கூடிய பூமாலையாக நாடு ஆகிவிடக் கூடாது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமை மாநில ஆட்சிக்கு இருக்கிறது.

இந்த நிலையில் ஆட்சியைச் செயல்பட விடாமல் முட்டுக்கட்டைப் போடும் அத்துமீறிய அதிகாரத்தை நியமன அதிகாரியான ஆளுநரிடம் ஒப்படைப்பது – ஜனநாயகத்தை அவமதிப்பதும், சித்தரவதை செய்வதும் ஆகும். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் இந்தப் பிரச்சினையை அணுகுவதே சரியானதாகும்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *