சென்னை, ஆக.21 நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வேலை தேடி வரும் பல தொழிலாளிகள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் தோராய எண்ணிக்கை தற்போது வரை 35 லட்சம் பேர் வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்வளவு பேர் என கணக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கோரி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாடு வந்ததற்கான காரணம், எங்கு வேலை செய்கிறார்கள், வாழ்க்கை நிலை, சுகாதார நிலை உள்ளிட்டவற்றை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.