“என்ன, சும்மா வீட்டு நம்பர் ஜீரோ, வீட்டு நம்பர் ஜீரோன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க. வீடே இல்லாத வங்க எல்லாம், ரோட்டுல படுத்திருக்காங்க தெரியுமா? அவங்கள்லாம் இந்தியக் குடிமக்கள் இல்லையா? அவங்க எல்லாம் ஓட்டுப் போட வேண்டாமா? இது ஜனநாயக நாடில்லையா? அவங்களுக்கு உரிமை இல்லையா?” என்று தேர்தல் ஆணையர் பேசப் பேச கையிலிருந்த முடியெல்லாம் நட்டுக்கிட்டு நின்னுடுத்து!
கவுண்டமணி அம்பி சொல்ற மாதிரி, ‘அட்…றாஆஆ… சக்க்க… அட்றா சக்க.. அட்றா சக்க… அட்றா சக்க”ன்னு அஞ்சாறு தடவை சொல்ற மாதிரி ஆயிடுத்து!
வீடே இல்லைன்னாலும், பாலத்துக்குக் கீழே படுத்திருந்தாலும், அவங்க கிட்டயெல்லாம் ஆதாரைத் தாண்டிய ஆதாரங்களான பாஸ்போர்ட், மெட்ரிக்குலேசன் சர்டிபிகேட், மாநில அரசு வீடு ஒதுக்கிய ஆதாரம் என்று 11 வகை ஆதாரங்களில் ஏதாவது ஒன்றைத் தலைமாட்டுக்கு அடியில் வைத்துத் தூங்குகிறார்கள் என்ற உண்மை(!)யை எல்லோருக்கும் உணர்த்துறதுக்குப் பாவம் தேர்தல் கமிஷனும் படாத பாடு படுறது!
அதனால அவாளுக்கு யோசனை சொல்லலா மேன்னு கிளம்பிட்டேன்” என்றார் கிச்சு மாமா!
மாமாவின் பரிந்துரைகளைத் தீவிரமாக எலக்சன் கமிஷன் ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது. மாமாவிடம் போட்டு வாங்கியதில் சில டிரிக்குகள் லீக் ஆகின.
‘வாக்குத் திருட்டுன்னு எல்லாம் பெரிய வார்த்தைய பிரயோகம் பண்ணிட்டா… இந்த தேஷத்துல இருக்கிற எல்லா மனுஷாளையும் வோட்டர்களா ஆக்கணும்னுட்டு பேசறவாளைப் பற்றி இப்படி பேசறதெல்லாம் மகா பாவம்’ன்னு கண்ணுல ஜலம் வச்சுண்ட மாமா… சொன்ன அய்டியால்லாம் கேட்டு நேக்கே… ச்சே… எனக்கே கலங்கிடுச்சு.
மாமாவின் ப்ரொபோசல் இது தானாம்!
“கனம் சீப் எலக்ஷன் கமிஷனர் சமூகத்துக்கு,
நிரந்தர வீடில்லாதோருக்கும் வோட்டுரிமை கொடுக் கும் தங்கள் சஹாய சிந்தை வேறு யாருக்கும் வராது. அவாளுக்கெல்லாம் ‘ஜீரோ’, ‘டபுள் ஜீரோ’, டிரிபிள் ஜீரோ’ என்று முகவரி கொடுத்து வகைப்படுத்தியது ஜீரோவைக் கண்டுபிடித்ததற்கு நிகரான சாதனையாகும்.
பெற்ற தாய் தந்தையர் யாரென்று தெரியாதவாளுக்கு “Ghsdlkjflkfh” என்று கொடுத்து யாரும் இங்கு அநாதை இல்லை என்பதை நிரூபித்திருக்கும் தங்கள் சமுகத்தின் காருண்ய ஜீவ சிந்தையை மெச்சுதற்கு வார்த்தை இல்லை.
நிற்க.
பல லட்சக் கணக்கில் வாக்காளர்களைத் தாங்கள் சேர்த்திருப்பதாகவும், அவர்களை எப்படி கணக்கில் கொண்டு வந்தீர்கள் என்றும் அதிகப் பிரஸங்கியாகச் சிலர் கேட்பதாக அறிந்தேன்.
பாரதம் என்பது தேவர்கள் சஞ்சாரம் செய்யும் பூமி, ரிஷிகள் வாழும் பூமி! அவர்கள் ரட்சிப்பதால் தான் இப் பாரதம் சுபிக்ஷமாயிருக்கிறது.
நம் வேத, இதிகாச, புராணங்களின்படி, முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், நந்தி, நாரதர், அட்டதிக்குப் பாலகர்கள், கோடிக் கணக்கான கடவுள்கள் எல்லாம் இந்தப் பூமிக்கு உரியவர்களே!
நீங்கள் அவாளுக்கெல்லாம் வாக்குகள் கொடுத்து, பட்டியலில் சேர்ப்பதை யாரும் சந்தேகிக்க இயலாது. அப்படி கேட்போரை நாஸ்திகாள் என்று ஒதுக்கிவிடலாம்.
எங்கள் நம்பிக்கையின்படி, அண்டார்டிகாவில் இருந்து பிரிந்து வந்த பாரதத் தட்டு, சைனாவோடு மோதி, ஹிமாலயா தோன்றும் முன்பிருந்தே இவாள் எல்லாம் பாரதத்தில் வஸிப்பவர்கள்.
அவர்களை ஓட்டுக் கணக்கில் சேர்த்தால், ‘நம்பிக்கை’யையும், ‘ஒட்டு மொத்த மனஸாட்சி’யையும் மீறி எந்த நீதிமன்றமும் கூட உங்களைக் கேள்வி கேட்க முடியாது.
மாத்திரமல்லாமல், ‘பீகாரில் ஒரு மாட்டுத் தொழுவத் தில் 54 வாக்காளர்கள் இருப்பதாகச் சேர்க்கலாமா?’ என்று சில அஞ்ஞானங்கள் கேட்கின்றனவாம்!
பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக் கின்றனர் என்பது பற்றி தெரிந்து கொள்ளுவது அவஸியமாகும்.
தலை – சிவபெருமான்
நெற்றி – சிவசக்தி
வலது கொம்பு – கங்கை
இடது கொம்பு – யமுனை
கொம்புகளின் நுனி – காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
கொம்பின் அடியில் – பிரம்மன், திருமால்
மூக்கின் நுனி – முருகன்
மூக்கின் உள்ளே – வித்யாதரர்கள்
இரு காதுகளின் நடுவில் – அஸ்வினி தேவர்
இரு கண்கள் – சூரியன், சந்திரன்
வாய் – சர்ப்பாசுரர்கள்
பற்கள் – வாயுதேவர்
நாக்கு – வருணதேவர்
நெஞ்சு – கலைமகள்
கழுத்து – இந்திரன்
மணித்தலம் – எமன்
உதடு – உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
கொண்டை – பன்னிரு ஆதித்யர்கள்
மார்பு – சாத்திய தேவர்கள்
வயிறு – பூமிதேவி
கால்கள் – வாயு தேவன்
முழந்தாள் – மருத்து தேவர்
குளம்பு – தேவர்கள்
குளம்பின் நுனி – நாகர்கள்
குளம்பின் நடுவில் – கந்தர்வர்கள்
குளம்பின் மேல்பகுதி – அரம்பெயர்கள்
முதுகு – ருத்திரர்
யோனி – சப்த மாதர் (ஏழு கன்னியர்)
குதம் – லட்சுமி
முன் கால் – பிரம்மா
பின் கால் – ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
பால் மடி – ஏழு கடல்கள்
சந்திகள் – அஷ்ட வசுக்கள்
அரைப் பரப்பில் – பித்ரு தேவதை
வால் முடி – ஆத்திகன்
உடல்முடி – மகா முனிவர்கள்
எல்லா அவயங்கள் – கற்புடைய மங்கையர்
சிறுநீர் – ஆகாய கங்கை
சாணம் – யமுனை
சடதாக்கினி – காருக பத்தியம்
வாயில் – சர்ப்பரசர்கள்
இதயம் – ஆகவணியம்
முகம் – தட்சரைக் கினியம்
எலும்பு, சுக்கிலம் – யாகத் தொழில்
இதில், சுவையாக ஒரு செய்தியைத் தெரிந்து கொண் டால், அடுத்த பிரஸ் மீட்டில் தாங்கள் பிரஸ்தாபிக்கத் தோதுப்படும்.
பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார். ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து, தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.
அப்போது பசு லட்சுமிதேவியிடம், “நீ சஞ்சல குணம் உள்ளவள். எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது. மலம் கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது”, என்று சொன்னது.
லட்சுமி தேவியும், “அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் பின்புறத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள். லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.
கோமாதாவை பூஜிப்பது இந்து மதத்தில் சம்பிரதாய மாக உள்ளது. இதைத் தான் கோபூஜை என்பர். இது நம் புராணங்களில் விசேஷமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி ஒரு பசுவிற்குள்ளேயே கோடானு கோடி கடவுள்கள் குடியிருக்கும்போது, அந்தப் பசுத் தொழுவத்தில் இவர்களெல்லாம் இருக்க மாட்டார்களா என்று நீங்கள் கிடுக்கிப் பிடி போடுவதற்கும் சௌகர்யமாய் இருக்கும்.
அநேக ஆசீர்வாதங்கள்!
மேற்படி ஸமூகத்தின் அடுத்த பிரஸ்மீட்டைக் காண ஆவலாய் இருக்கும்,
கிச்சு (எ) கிருஷ்ணமாச்சார்ய”
மாமாவின் கடிதத்தைப் படித்துவிட்டு, கோழியில் குடியிருக்கும் தெய்வங்களின் பட்டியலை எடுத்து எலெக்ஷன் கமிஷனருக்கு அனுப்பலாம் என்று நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
– குப்பைக் கோழியார்