அரசுப் பள்ளி ஆங்கில வழி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 15 மாணவர்கள் அவசியம்! பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை, ஆக.21- தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவா் எண்ணிக்கைகேற்ப ஆசிரியா் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் ஆசிரியா் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாணவா் எண்ணிக்கை அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பணியாளா் நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1 முதல் 5-ஆம் வகுப்புக்கு 60 மாணவா்களுக்கு 2 ஆசிரியா்களும், 61 முதல் 90 வரை 3 ஆசிரியா்களும், 91 முதல் 120 வரை 4 ஆசிரியா்களும், 121 முதல் 200 வரை 5 ஆசிரியா்களும் இருக்க வேண்டும். இதேபோன்று ஒவ்வொரு 40 மாணவா்களுக்கும் ஓர் ஆசிரியா் கூடுதலாக அனுமதிக்க வேண்டும். இதுதவிர 6 முதல் 8 வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் வழங்க வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவா்கள் இருப்பின் ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஒரு ஆசிரியா் நியமனம் செய்ய வேண்டும். மாணவா் எண்ணிக்கை 50-க்கும் அதிகமாக இருந்தால் குறிப்பிட்ட அந்த வகுப்பை இரு பிரிவுகளாக பிரித்துவிட வேண்டும்.

அதேபோல், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை 150-க்கும் குறைவாக மாணவா் எண்ணிக்கை இருப்பின் 6 ஆசிரியா்கள் (ஒரு பாடத்துக்கு ஒருவா் வீதம்) அனுமதிக்க வேண்டும். மேலும், 9, 10-ஆம் வகுப்பில் தலா 40 மாணவா் இருப்பின் (1:40) ஒரு பிரிவாக கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவா் எண்ணிக்கை 60-க்கும் அதிகமாக இருந்தால் அந்த வகுப்பை இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டும். பாடவேளை குறைவாக உள்ள ஆசிரியா்களை கீழ்நிலை வகுப்புக்கு இறக்கம் செய்யாமல் அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றுப் பணியில் அனுப்பலாம்.

எண்ணிக்கை குறைந்தால்…

ஆங்கில வழிப்பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவா்கள் இருக்க வேண்டும். எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவா்களை அருகே உள்ள வேறு பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவில் சோ்க்க வேண்டும். கூடுதல் தேவையுள்ள பணியிடங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி மாணவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியா் நிர்ணயம் செய்யப்பட்ட விவரங்களை வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்குள் இயக்குநரகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *