பெரியார் மருந்தியல் கல்லூரியில் பகடிவதை எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருச்சி, ஆக.21- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் பகடிவதை (Ragging) எதிர்ப்பு வாரத்தையொட்டி (12.8.2025 – 18.8.2025) விழிப்புணர்வு கருத்தரங்கம் 18.08.2025 அன்று காலை 11 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் ராகிங் தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அ.ஜெசிமா பேகம் வரவேற்புரையாற்றினார்.

இக்கருத்தரங்கில் திருச்சி கண்டோன்மெண்ட் ஊழல் தடுப்பு பிரிவின் காவல்துறை ஆய்வாளர் வி.நிர்மலா ராகிங் தடுப்பு குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

உயிரையே கொல்லும்…

அவர் தமது உரையில் ராகிங் எனப்படும் பகடிவதை என்பது உடலாலும் மனதாலும் மற்றவர்களை துன்புறுத்துவதே ஆகும். கல்லூரியில் புதியதாக சேரும் மாணவர்களை, பழைய மாணவர்கள் பெயர் கேட்பது, ஊர் கேட்பது போன்ற சிறு சிறு சீண்டல்கள் தவிர்த்து உயிரையே கொல்லும் அளவிற்கு ராகிங் கொடுமையானதாக அரங்கேறியதால்தான் 1997ல் முதன் முதலாக தமிழ்நாட்டில் ராகிங் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டது.

ராகிங்கில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அதனை தொடர்ந்து அந்த மாணவரின் கல்வியும் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் கேலி, கிண்டல்களில் ஈடுபடுவோர் குறித்து புகார் செய்வதற்கான உதவி எண்கள் மற்றும் புகார் செய்வோர் குறித்த தகவல்கள் வெளியில் தெரியாதவாறு சேகரிக்கப்படுவது குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.

உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்

பெற்றோர்கள் தங்களது பொருளாதாரத்தையும் பொருட் படுத்தாது தங்களது பிள்ளைகள் நன்கு படித்து உயர்த்த நிலைக்கு வரவேண்டும் என்று நல்ல கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு சேர்த்துள்ளனர். இங்குள்ள பேரா சிரியர்கள் பட்டைத் தீட்டப்பட்ட வைரக்கற்களாக மாணவர்களை உருவாக்கி வருகிறார்கள்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை மாணவர்கள் புரிந்து கொண்டு தங்களது படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

எந்தவித தவறான செயல் பாடுகளிலும் கவனத்தை செலுத் தாமல் சரியான குறிக்கோளை நோக்கி மட்டும் பயணித்தால் உங்களது வெற்றி உறுதி என்றும் உரையாற்றி கைபேசி பயன்பாடுகள் குறித்தும் சைபர் கிரைம் குற்றங்கள் களைவது தொடர்பாகவும் மாணவர் களுக்கு விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர் பி.வனிதா ராகிங் தடுப்பு சட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர்
எஸ். பிரியதர்ஷினி நன்றி கூறினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 250 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *