அவிநாசி, ஆக.21- திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், கடந்த 17.08.2025 அன்று இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு, இந்திய யோகாசன சங்கம், தமிழ்நாடு யோகாசன சங்கம் மற்றும் தபஸ் யோகாலயா அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கள் யோகாசனத் திறமைகளை வெளிப்படுத்திய இந்தப் போட்டியில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர், செல்வன்.வி.பவனேஷ் 13 வயதிற்கு உட்பட்டோருக்கானப் பிரிவில் கலந்து கொண்டு முதலிடத்தோடு, தங்கப் பதக்கமும், கோப்பையையும் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் கோவாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.
சாதனை மாணவனைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.