ஜெருசலேம், ஆக. 21- காசாவின் முக்கிய நகரான காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித் துள்ளார்.
இந்தப் போர் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக, 60 ஆயிரம் ரிசர்வ் வீரர்களுக்கு இஸ்ரேல் ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் நேற்று (20.8.2025) வெளியிட்ட தகவல்படி, காசா சிட்டியில் தரைவழித் தாக்குதல் நடத்தி, நகரைக் கைப்பற்றும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே இந்த ரிசர்வ் வீரர்கள் வரவழைக்கப் பட்டுள்ளனர்.
இதற்காக முழு நேர ராணுவ வீரர்கள் ஏற்கெனவே எல்லைப் பகுதிக்கு அனுப்பப் பட்டுள்ளனர். மேலும், இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஸெய்டூன் மற்றும் ஜபாலிலா பகுதிகளில் உள்ள இஸ்ரேல் படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.
உலக நாடுகள் கண்டனம்
இஸ்ரேலின் இந்தத் திட்டத்துக்கு பிரிட்டன், ஸ்பெயின், துருக்கி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரிட்டன் பிரதமர் கியோர் ஸ்டார்மர், இந்த நடவடிக்கை போரை முடிவுக்குக் கொண்டு வராது என்று எச்சரித்தார்.
மேலும், இது காசாவில் மேலும் பேரழிவையும் துன்பத்தையும் ஏற்படுத்தும் என ஸ்பெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் ஆல்பரெஸ் தெரிவித்தார்.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக ஹமாஸ் அமைப்பிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்கள் கொல்லப் படக்கூடும் என்பதால், இஸ்ரேலுக்குள்ளும் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது. போரை நிறுத்தி, பிணைக் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இஸ்ரேலில் கடந்த 17.8.2025 அன்று தீவிர போராட்டங்கள் நடைபெற்றன.
அமைதி முயற்சிகளுக்குத் தடை
அமெரிக்கா தலைமையில் மேற்கொள் ளப்பட்டுவரும் அமைதி முயற்சிகளை இஸ்ரேல் இந்த நடவடிக்கையால் அலட்சியம் செய்துள்ள தாகக் கூறப்படுகிறது.
போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து எகிப்து மற்றும் கத்தார் ஆகியவை ஹமாஸிடம் அளித்த வரைவை ஹமாஸ் ஏற்றுக் கொண்ட நிலையில், இஸ்ரேல் அதற்கு நாளைக்குள் (22.8.2025) பதிலளிப்பதாகக் கூறியிருந்தது.
ஆனால், அதற்கு முன்னதாகவே காசா நகர ஆக்கிரமிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது, அமைதி முயற்சிகளுக்குத் தடையாக அமையும் என விமர்சிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காசா நகரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பாலஸ் தீனர்கள் வெளியேறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.