வார்சா, ஆக. 21- போலந்து நாட்டின் ஒசினி கிராமத்தில் வானில் பறந்து வந்த விந்தைப் பொருள் ஒன்று திடீரெனத் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் ‘அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு’ என வதந்திகள் பரவின.
ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன
நேற்று (20.8.2025) அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெடிப்பின் காரணமாக அருகிலிருந்த சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், தீயில் கருகிய நிலையில் இருந்த உலோகம் மற்றும் பிளாஸ்டிக் துண்டுகளைக் கைப்பற்றினர்.
இணையத்தில் பரவிய வதந்திகளுக்குப் பதிலளித்த அதிகாரிகள், வெடித்துச் சிதறிய விந்தைப் பொருள் ஒரு ட்ரோனாக இருக்கலாம் எனத் தெரிவித்தனர். அருகிலுள்ள உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளின் ட்ரோன்கள் போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழையவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வெடித்துச் சிதறியது ராணுவ ட்ரோனா அல்லது கடத்தல்காரர்கள் பயன்படுத்திய ட்ரோனா என்பதை அறிய முயற்சிப்பதாகவும் போலந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.