ஜெருசலேம், ஆக. 21- பன்னாட்டு எதிர்ப்புகளை மீறி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப் பகுதியை இரண்டாகப் பிரிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய குடியிருப்பு கட்டுமானத் திட்டத்துக்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித் துள்ளது.
ஜெருசலேம் நகரத்துக்கு கிழக்கே அமைந்துள்ள ஈ1 (E1) பகுதியில் இந்தக் கட்டுமானங்கள் மேற் கொள்ளப்படவுள்ளன.
சுமார் 20 ஆண்டு களுக்கும் மேலாக இஸ்ரேல் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முயன்றபோது, அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நாடுகளின் அழுத்தங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதால், இஸ்ரேலின் திட்டம் மற்றும் கட்டுமான ஆணையம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தக் கட்டுமானத் திட்டம், மேற்கு கரைப் பகுதியை இரண்டாகப் பிளந்து, எதிர்காலத்தில் பாலஸ்தீனம் என்ற தனி நாடு உருவாகும் வாய்ப்பை முற்றிலுமாக அழித்துவிடும் என பாலஸ்தீனர்களும், மனித உரிமை அமைப்பு களும் கண்டனம் தெரி வித்துள்ளனர். சில மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேலியர்களுக்காக சுமார் 3,500 வீடுகள் கட்டத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கடந்த 14.8.2025 அன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.