எதிர்க்கட்சியினரைப் பழிவாங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு பதவிப் பறிப்பு மசோதாவைக் கொண்டுவந்துள்ளது! இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற முயலுவதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை, ஆக. 21 – ‘‘எதிர்க்கட்சியினரைப் பழிவாங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு பதவிப் பறிப்பு மசோதாவைக் கொண்டுவந்துள்ளது! இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற முயலுவதா?’’ என தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதள பதிவு வருமாறு:

130 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம்!

30 நாள் கைது = மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட முதலமைச்சரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவிநீக்கம் செய்யலாம். பா.ஜ.க. வைத்ததுதான் சட்டம்!

வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை நசுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கு: எல்லா கொடுங்கோன்மையும் இப்படித்தான் தொடங்கும்!

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தி யாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயகச் சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர அழைக்கிறேன்.

பிரதமருக்குக் கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும், அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்து விட்டது.

வாக்குத் திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைத்துள்ள ஆட்சியே கேள்விக்குள்ளாகியுள்ளது. தற்போதைய பா.ஜ.க. அரசு சட்டப்பூர்வ மானதா என்பதே அய்யமாக உள்ளது. தில்லுமுல்லுகளின் மூலம் மக்களின் தீர்ப்பைக் களவாடியுள்ள பா.ஜ.க., தற்போது அதில் இருந்து மக்களின் கவனத்தை எப்படியாவது திசைதிருப்ப முயற்சி செய்கிறது. அதற்காகத்தான், இந்த அரசியலமைப்பு
(130 ஆவது திருத்தம்) சட்டமுன்வரைவு, 2025-அய்க் கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டமுன்வரைவின் நோக்கம் மிகத் தெளிவானது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள தனது அரசியல் எதிரிகளின் மீது பொய் வழக்குகளைப் புனைந்து, எந்த விசாரணையும் தீர்ப்பும் இன்றியே, 30 நாட்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப் பதவிநீக்கம் செய்யலாம் எனும் சட்டப்பிரிவு களின்கீழ், அவர்களை ஆட்சியில் இருந்து பா.ஜ.க. அகற்றவே இது வழி செய்கிறது.

நீதிமன்றங்களால் இரத்து செய்யப்படும்

குற்றம் என்பது தீர விசாரித்த பிறகே முடிவாகும், வெறுமனே வழக்கு பதிவதால் முடிவாகாது என்பதால், அரசியலமைப்புக்குப் புறம்பான இந்தச் சட்டத்திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் இரத்து செய்யப்படும்.

மேலும், பல மாநிலங்களிலும் முதல மைச்சர்களாக அமைச்சர்களாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியில் உள்ள மாநிலக் கட்சித் தலைவர்களை, “ஒழுங்காக எங்களுடன் இருங்கள், இல்லையென்றால்…” என்று மிரட்டுவதற்கான தீய நோக்கமும் இதில் உள்ளது.

எந்தச் சர்வாதிகாரியும் முதலில் செய்வது, தனது எதிராளிகளைக் கைது செய்யவும், பதவிநீக்கவுமான அதிகாரத்தைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதுதான். அதைத்தான் இந்தச் சட்டத்திருத்தமும் செய்ய முயல்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *