காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இனி பொதுவான தேர்வு முறை அமல் தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஆக. 20- தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதில் புதிய சீர்திருத்தத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் ஆகிய இரு முறைகளுக்கும் இனி ஒரே பொதுவான தேர்வு முறை பின்பற்றப்படும் என உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்வு முறை ஏன்?

காவல்துறையில் தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், உதவி ஆய்வாளர் பணியிடங்களில் 20% இடங்கள் பணிமூப்பு மற்றும் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 80% இடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) மூலம் நேரடியாக நியமிக்கப்படுகின்றன.

இருதரப்பினருக்கும் ஒரே தேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, TNUSRB அளித்த பரிந்துரையின்படி இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுவான தேர்வு நடைமுறைகள்

வயது வரம்பு: நேரடி நியமனம் (80%). முற்பட்ட வகுப்பினர்: அதிகபட்ச வயது 30. பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர்: அதிகபட்ச வயது 32. தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் மற்றும் பழங்குடியினர்: அதிகபட்ச வயது 35. அனைவருக்கும் குறைந்தபட்ச வயது: 20. கணவரை இழந்தோர்: அதிகபட்ச வயது 37. மூன்றாம் பாலினத்தவர்: அதிகபட்ச வயது 35. பதவி உயர்வு (20%): காவலர்கள், தலைமைக் காவலர்கள், மேனாள் ராணுவத்தினர்: அதிகபட்ச வயது 47.

கல்வித் தகுதி: அனைத்துத் தரப்பினரும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் எழுத்துத் தேர்வு பொதுவானதாக இருக்கும்.

பகுதி 1: தமிழ் மொழி தகுதித் தேர்வு (100 மதிப்பெண்கள்) 10-ஆம் வகுப்பு நிலையில் கேள்விகள் கேட்கப்படும். குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

பகுதி 2: பொதுத் தேர்வு (70 மதிப்பெண்கள்)      பொது அறிவு: 40 மதிப்பெண்கள் உளவியல்: 30 மதிப்பெண்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 25.

உடல் தகுதி மற்றும் சிறப்பு மதிப்பெண்கள்:   பதவி உயர்வு மூலம் வருபவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  நேரடியாக நியமிக்கப்படுபவர்களுக்கு உயரம், மார்பு அளவு ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற உடல் தகுதித் தேர்வுகள் மற்றும் சிறப்பு மதிப்பெண் நடைமுறைகள் இருதரப்பினருக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இக்னோ தொலைதூரக் கல்வி

ஜூலை பருவ மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு

சென்னை, ஆக. 20- ஒன்றிய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (IGNOU) தொலைதூரக் கல்வி திட்டங்களில் சேருவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, இக்னோவின் சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ் படிப்புகள் நீங்கலாக, மற்ற அனைத்து இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://ignouadmission.samarth.edu.in கூடுதல் விவரங்களுக்கு, பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்: www.ignou.ac.in

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *