தோழர் கவிஞர் அருணன் படைக்கும் விருந்து!

2 Min Read

 தோழர் கவிஞர் அருணன் படைக்கும் விருந்து!

அரசியல்

பேராசிரியர் அருணன் அவர்களின் ஆய்வு களும், அரசியல் பதிலுரைகளும், சொடுக்குத் தெறிக்கும் சாட்டையடிகளான பேட்டிகளும் இதுவரை நாம் படித்தும், கேட்டும் சுவைத்தவை.

அவரது எழுத்துப் போக்கில் ஒரு திடீர் மாற்றம் – காரணம்,

“மாற்றம் என்பதுதானே உலகில் மாறாதது!” அவரது பேனா ஒரு மாற்றம் வேண்டும் என்று அவரிடம் ஒரு ‘கருணை மனு’ போட்டதோ என்னவோ – எப்போதும் எதையும் அலட்சியப் படுத்தாத நம் பேராசிரியர் அருணன் தன் எழுதுகோலின் எளிய வேண்டுகோளையும் ஏற்று கவிதைகளைப் படைத்து, அவரது பேனாவுக்கு மட்டுமல்ல, அவரது நிரந்தர வாசகர்களாகிய நமக்கும் கூட ஈத்துவக்கும் இன்பத்தை இந்த கவிதா மண்டலத்திற்குள் நம்மை  அழைத்துக் காட்டி, “இதோ, நான் அமைத்த புதிய ‘வசந்த மண்டபம்’ பாரீர்” என்கிறார்.

என்ன அதிசயம்; நுழையும்போதே நமது ஒப்பற்ற கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் தனது தகத்தகாய தமிழில் தருவென நின்று நம்மை வரவேற்று, பேராசிரியர் அருணனின் அருணோத் தயத்திற்கு அரிய ஆலாபனைகளை அள்ளி அள்ளித் தந்து மகிழ்கிறார்!

“தனது வாழ்க்கையைப் படிப்பு, எழுத்து, சமூக செயற்பாடு என்று மூன்றாகப் பிரித்துக் கொண்ட பேராசிரியர் அருணன் அவற்றிலிருந்து ஒரு பாகைகூட வழுவியதில்லை” என்று அற்புத வரிகளால் அவரை அளந்து காட்டுகிறார்!

கவிப்பேரரசு எழுதுகிறார் – அணிந்துரையில் “இக்கவிதையில் நான் பெரிதும் ரசித்தது…

“ஞானம் இயங்குவது சுரண்டலில் தெரிகிறது

சுரண்டல் இயங்குவது வர்க்கத்தில் தெரிகிறது

வர்க்கம் இயங்குவது போரில் தெரிகிறது”

இந்த ஞானப் பார்வையில் தான் ஞானக் கோலங்கள் அர்த்தப்படுகிறது” – நியாயந்தானே!

வர்க்கத்தை “சொர்க்கம்” ஆக்கி, அதற்கும் மேலே நம் நாட்டில் நம்மை நாளும் அவமானப் படுத்தி  – அடிமை வாழ்வு வாழச் செய்யும் வருணம் படுத்தும் பாடு பற்றியும் அருணன் சரியாகப் படம் பிடித்துச் சாடியுள்ளார் – உள்ளே!

“சாதியை விலக்கினால்

ஊர் விலக்கம்

சாதிக்குள்ள மரியாதை

சகமனிதருக்கு இல்லை

முதல் மரியாதை

சாதிக்கே

கடைசி மரியாதையும்

அதற்கே!”

– ஜாதி இங்கே வர்க்கத்தைத் தாண்டி ஓங்கி உயர்ந்து நிற்பதனால்தான் சமரசம் நிலவ வேண்டிய சுடுகாடு, இடுகாட்டில்கூட நமது  “ஞானபூமியில்” ‘கடைசி மரியாதை’ பெற ஜாதிக்கே இடஒதுக்கீடு பெற்ற இடத்தினைத்தானே செத்த பின்பும், வாரிசுகள் தேட வேண்டியுள்ளது!

இதைச் சுட்டிக்காட்டிப் புதுக்கவிதை நடையில் எழுந்த வினாவுக்கு விடை காண விரைவோம் – நூலைப் படித்து முடித்தபின்!

கவிஞர் அருணன் அவர்களுக்கு நம் வாழ்த்துகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *