பிஜேபியின் ஜனநாயக யோக்கியாம்சம் இதுதானா?

4 Min Read

தேர்தல் வாக்குப் பட்டியலில் பெரும் மோசடி நடந்திருக்கிறது என்ற ஆதாரப் பூர்வமான தகவல் இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கி விட்டது.

இது ஒன்றிய பிஜேபி அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. ‘‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும்’’ என்பது நம் நாட்டில் உலா வரும் ஒரு பழமொழியாகும்.

அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது. தேர்தல் தலைமை ஆணையர் செய்தியாளர் பேட்டி என்ற பெயரில் அரசியல் வாதிபோல அரசியல் கட்சிகளைச் சாடியுள்ளார்.

பிஜேபியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் என்ன கூறுகிறார்?

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் தாங்கள் ஆளும் சட்டப் பேரவைகளைக் கலைக்கத் தயாரா? என்று ஆணவமாகப் பேசுகிறார். இதுதான் பிஜேபியின் ஜனநாயக யோக்கியதையா?

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட, 65 லட்சம் வாக்காளர் களின் விவரங்களை தேர்தல் ஆணையம்  வெளியிட்டது.

முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் அய்க்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.

இதை முன்னிட்டு, மாநிலம் முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருந்ததும், பீகாரில் இருந்து நிரந்தரமாக குடியேறி வேறு மாநிலங்களில் வாக்காளராக பதிவு செய்தவர்களின் பெயர்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம், 65 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடின.   இந்த வழக்கை, சமீபத்தில் மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை, ஆக., 19க்குள் வெளியிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத, 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்தப் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.  அதிகபட்சமாக பாட்னாவில் 3.95 லட்சம்; குறைந்தபட்சமாக ஷேக்புரா மாவட்டத்தில் 26,256 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

‘வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் ஆதார் அட்டையை சமர்ப்பித்து, செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம்’ என தேர்தல் ஆணையர் தெரிவிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

என்னென்ன தில்லுமுல்லுகள் எல்லாம் நடந்திருக்கின்றன!

மேற்கு பீகார் மாநிலத்தில் உள்ள, சிவான் மாவட்டம் மகராஜ் கஞ்ச் சட்டமன்றத் தொகுதியில் பல முறைகேடுகள் குறித்து ஊடகவியலாளர்கள் ஆய்வு செய்து வெளியிட்டு வருகின்றனர்.

சிவான் மகராஜ்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் வாக்குச் சாவடி எண் 362 மற்றும் 364-அய் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி  கரமான உண்மைகள் வெளியாயின.

இந்த இரண்டு வாக்குச்சாவடியிலும் உள்ள மொத்த வாக்காளர்கள்: 1,035 பேர்

வீட்டு எண் 52-இல் 17 வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே வீட்டில் பார்ப்பனர், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமியர்கள் வாழ்வதாக காட்டப் பட்டுள்ளது.

வாக்குச் சாவடி 364-இல் உள்ள மொத்த வாக்காளர்கள்: 640 பேர்

வீட்டு எண் 22: பார்ப்பனர்  – 5, இஸ்லாமியர்       – 7

வீட்டு எண் 23: பார்ப்பனர்  – 4, இஸ்லாமியர்       – 5

வீட்டு எண் 25: பார்ப்பனர்  – 10, தாழ்த்தப்பட்டவர் – 1

வீட்டு எண் 26: பார்ப்பனர்  – 12, தாழ்த்தப்பட்டவர் – 3

வீட்டு எண் 27: பார்ப்பனர்  – 15, தாழ்த்தப்பட்டவர் – 6

வீட்டு எண் 28: பார்ப்பனர்  – 9, தாழ்த்தப்பட்டவர்   – 1

வீட்டு எண் 29:  பார்ப்பனர் – 8, தாழ்த்தப்பட்டவர்   – 1

இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து பகவான்பூர் மற்றும்  ஹாத்பிரகண்டன் கிராமங்களில் பார்ப்பனர்கள், முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒரே வீட்டில் வசிப்பதாக காட்டப்பட்டுள்ளது.

வீட்டு எண் 23-இன் வீட்டு உரிமையாளர் யுகல் கிஷோர் உபாத்யாய் கூறுகையில், தான் விண்ணப்பம் பூர்த்தி செய்து அதிகாரியிடம் கொடுத்ததாகவும், ஆனால் பட்டியல் வெளியானபோது தனது வீட்டு முகவரியில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆயிஷா பீவி கூறுகையில், ‘‘தனது வீடு உள்ள பகுதியில் பார்ப்பனர்கள் யாருமே இல்லை. ஆனால் எனது வீட்டு முகவரியில் பல பார்ப்பனர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் விவரத்தில் உள்ளது. ஆனால் எங்கள் பெயர் அதில் இல்லை. அதாவது எங்கள் வீட்டு முகவரியில் எங்கள் பெயர் இல்லை. நாளை அந்த பார்ப்பனர்கள் இங்கு வந்து தேர்தல் ஆணையத்தின் அட்டையைக் காண்பித்து எங்களை வீட்டை விட்டு வெளியே செல் என்று கூறினால் நாங்கள் எங்கே செல்வது?’’ என்றார்.

அதே பகுதியில் குளிர்காலத்தில் மாடுகளை அடைக்கப் பயன்படும் மாட்டுத்தொழுவம் ஒன்றில் இருந்து 54 வாக்காளர்கள் பெயர் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இணைய ஊடகவியலாளர் சாகரிகா என்பவர் கூறும் போது ‘‘நான் அந்தப்பகுதிக்கும் மிகவும் பழக்கமானவள். ஆகையால் அந்த  54 வாக்காளர்கள் இருந்த வீட்டு முகவரியைப் பார்த்தவுடன் முதலில் சந்தேகப்பட்டேன்; பிறகு நேரில் சென்று பார்த்த போது ஊருக்கு வெளியே மாடுகளை அடைக்கும் தொழுவம் தான் இருந்தது.

இந்த முகவரிக்கான சான்று எப்படி கொடுத்தார்கள்? வாக்குச்சாவடி அதிகாரிக்கு குறைந்தபட்சம் இந்த பகுதியில் வீடே இல்லை என்பது தெரியாதா? வாக்குச்சாவடி ஊழியர்கள் உள்ளூர்க்காரர்கள் தானே? ஏன் இப்படி நடந்துள்ளது? தவறு என்றால் தேர்தல் ஆணையம் தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டியதுதான்.  ஆனால், இங்கே வேண்டுமென்றே அதிக நபர்கள் போலியான முகவரிகளில் சேர்க்கப்படுகின்றனர். உண்மையான வாக்காளர்கள் விடுபட்டு வருகின்றனர். இது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல’’ என்று கூறினார்.

பிஜேபி ஆட்சி என்றாலே நேர்மைக்கு இடமில்லை! மோசடியின் மறுபெயர்தான் பிஜேபி – அதன் ஆட்சியின் யோக்கியாம்சத்தை காலங் கடந்தாவது நாட்டு மக்கள் உணர்வார்களாக!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *