அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச் சருமான எடப்பாடி பழனிசாமி – ‘‘மக்களைக் காப்போம் – தமிழகத்தைக் காப்போம்!’’ என்ற தலைப்பில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.
சேலம் மாவட்டம் அணைக்கட்டுப் பகுதியில் 18.8.2025 அன்று அவர் பிரச் சாரம் செய்து கொண்டு இருந்தபோது – ‘ஆம்புலன்ஸ்’ ஒன்று வந்துள்ளது.
அவ்வளவுதான் – எடப்பாடிக்கு வந்ததே கோபம்! இது போல நான் பேசும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டத்துக்கு இடையூறு செய்வதற்காகவே தமிழ்நாடு அரசு ஆம்புலன்சை அனுப்பி வருகிறது. இனி இதுபோல் நடந்தால், ‘‘ஆம்புலன்ஸ் –ஓட்டுநரே மருத்துவப் பயனாளியாக்கப்பட்டு அதே ஆம்புலின்சில் அனுப்பி வைக்கப்படுவார்!’’ என்று ஆத்திரம் கொப்பளிக்க வன்முறையைத் துண்டும் வகையில் தன்னிலை மறந்து வெறியூட்டும் வகையில் பேசி இருக்கிறார்.
இது அதிர்ச்சியூட்டக் கூடிய செயல்என்பது ‘அ’னா, ‘ஆவன்னா’ தெரியாத பாமர மனிதருக்கும்கூடத் தெரிந்த ஒன்றாகும்.
பொதுவாக ஆம்புலன்ஸ் வந்தால் வாகனங்களும்,பொது மக்களும் ஒதுங்கிக் கொண்டு ஆம்புலன்சுக்கு வழிவிடுவார்கள்.
இது ஒரு பொது நியதி. மனிதாபி மானம் உள்ள ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய, அறிந்து நடந்துகொள்ள வேண்டிய தகவலாகும்.
ஆனால் ஒரு முன்னாள் முதல் அமைச்சருக்கு இந்த அடிப்படைத் தகவலும் குறைந்தபட்ச மனிதாபி மானமும் இல்லாத நிலையை எண்ணும் போது இரக்கப்பட வேண்டியுள்ளது.
வாக்கு சேகரிப்பதற்காக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இப்படிப் பேசினால் அந்தக் கூட்டத்தில் எடப் பாடியாரின் இத்தகைய பேச்சைக் கேட்டபோது – முகம் சுளிக்க மாட்டார்களா? (கட்சிக்காரர்களை வெறியேற்றுவது என்பது வேறு – அவர்கள் மட்டும் வாக்களித்து விட்டால் வெற்றி பெற முடியுமா?)
ஆதரவு கிடைப்பதற்கு மாறாக எதிர் விளைவைதான் ஏற்படுத்தும்.
ஓர் அண்டப் புளுகை அவிழ்த்துக் கொட்டியுள்ளனர். ‘ஆம்புலன்சில்’ மருத்துவப் பயனாளிகள் யாருமில்லை; வேண்டுமென்றே கூட்டத்தைத் தொந்தரவு செய்வதற்காகவே அரசு செய்த ஏற்பாடு என்று – எதையும் அரசியல் காழ்ப்புக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள் பேசும் அநாகரிகக் குற்றச்சாட்டு.
தமிழ்நாடு திராவிட மாடல் அரசு – இந்திய அளவில் மக்கள் வளர்ச்சிக்கான எல்லா நிலைகளிலும், துறைகளிலும் முதல் இடத்தில் நின்று ஏறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது! மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு என்ற நிலையில் கடைக்கோடி மனிதனின் வீட்டிற்கும் திராவிட மாடல் ஆட்சியின் பலன் போய்ச் சேர்ந்திருக்கிறது; ஒவ்வொருவரும் வீட்டின் கதவைத் தட்டி நற்பலன் சென்றடைந்திருக்கிறது.
மீண்டும் திராவிட மாடல் அரசு, முன்பைவிட அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறுவது உறுதி என்ற நிலை நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில், தோல்வி ஜன்னியால், ஆத்திர அருவருப்பால், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற குழப்ப நிலையில், ஆற்றாமையின் அடி வயிறுபற்றி எரியும் நிலையில், ஆளும் கட்சியின்மீது குற்றப் பத்திரிகை படிக்க வழியற்ற நிலையில், எதைப் பேசுவது என்று தெரியாமல், எதைப் பேசக்கூடாதோ அதைப் பேசி, தனக்குத் தானே பள்ளம் தோண்டிக் கொள்வதை நினைத்தால், ‘அந்தோ பரிதாபம்!’ என்று சொல்லுவதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
எடப்பாடியார் சொல்லுவது எவ்விதத்தில் உண்மையாகும்? ஆம்புலன்சில் மருத்துவப் பயனாளிகள் இல்லை– வேண்டு மென்றே கூட்டத்துக்குத் தொந்தரவு கொடுப்பதற்காகவே ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று சொல்லுவது அறியாமையின் அவசர ஆயுத எழுத்தாகும்.
அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்பட்டாலும் ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்குச் செல்லத்தான் வேண்டும் என்ற அடிப்படை ஞானம்கூட இல்லாமல் ஒரு முன்னாள் முதலமைச்சர் பேசியிருப்பது சிறுபிள்ளைத்தனமாகும்.
வயிற்றுப் போக்கால் சிகிச்சை பெற்ற சந்திரா என்ற பெண்ணை இன்னொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அந்த ஆம்புலன்ஸ் சென்றது என்ற உண்மைத் தகவலைத் தெரிந்து கொண்டால், எடப்பாடியார் முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?
ஆம்புலன்ஸ் ஓட்டுநரே இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை இயக்கும் நிறுவனம் (Emri – Emergency Management and Research Institution) இதுபற்றிக் கூறிய கருத்து முக்கியமானது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவப் பணியாளர்மீது முன்னாள் முதலமைச்சர் மிரட்டல், அவதூறு, அவர்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக, தனது சட்டப்படியான கடமையைத் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்பிரமணியமும் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
‘எடப்பாடி பழனிசாமி அவர்களின் கருத்து அநாகரிகமானது. தமிழ் நாட்டில் 1,330, 108 ஆம்புலன்ஸ்கள் செயல்படுகின்றன. அவை சேவை பணியைச் செய்கின்றன. அந்த சேவைகளை அரசியல் நோக்கங் களுக்காகப் பயன்படுத்துவது தவ றானது; அதுவும் ‘‘ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் பெயர், ஆம்புலன்ஸ் எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்’’ என்று பேசியிருப்பது கண்டனத்துக் குரியது என்று கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பா.ஜ.க. தான் வன்முறை வெறியாட்டம் போடும் கட்சி என்று தெரிந்துள்ள மக்களுக்கு – அந்தப் பா.ஜ.க.வின் நகத்தோடு அதிமுக சதையாக இணைந்து விட்டது என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
ஏற்ெகனவே – பிஜேபியோடு கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க. வில் உள்கட்சியின் அதிருப்தி யும் எரிமலையாகக் கனன்று கொண்டி ருக்கிறது. போதும் போதாதற்கு அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள எடப்பாடியாரின் இது போன்ற பேச்சு பொது மக்களின் மத்தியிலும் பெரும் அருவருப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
வாக்குகளை எண்ணி முடிக்கும் போது – தன்னைத் தானே நொந்து கொள்வார் எடப்பாடி என்பதில் அய்ய மில்லை – இன்றே அவரின் டைரியில் எழுதி வைத்துக் கொள்ளலாம்.
– தார்க்குச்சி