ஜனநாயகம், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட எதிர்க்கட்சிகள் தம் கடமையை ஆற்றியுள்ளன!

5 Min Read

* குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி.இராதாகிருஷ்ணனை நிறுத்தியது –
* அவர் ‘‘தமிழர்’’ என்பதற்காக அல்ல; இது ஓர் அரசியல் யுக்தியே!
* எதிர்க்கட்சியின் வேட்பாளர் ஜனநாயக உணர்வும், ‘மனிதம்’ நிறைந்தவரும் ஆவார்!
இதில் ‘‘வெற்றி – தோல்வி’’ என்பது கொள்கை,
இலட்சியக் கண்ணோட்டமாகவே இருக்கவேண்டும்!

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவருக்கு வேட்பாளர்களை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் நிறுத்தியிருப்பதன் பின்னணி குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

குடியரசு துணைத் தலைவராக இருந்தவர் பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) ஆட்சித் தலைமையினரின் அதிருப்திக்கு ஆளாகி, திடீரென பதவி விலக, அதனால் காலியான அப்பதவிக்கான தேர்தல், வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில், வேட்பாளராக மகாராட்டிர மாநில ஆளுநராக உள்ள திரு.சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களை அறி வித்துள்ளனர்.

பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்றத்தில்
பெரும்பான்மை இல்லை!

பா.ஜ.க. ஒரு மைனாரிட்டி கட்சி. 2024 இல் போது மான அறுதிப் பெரும்பான்மை கிட்டாத நிலையில், தற்போது அது தனது ஆட்சியை ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, பீகார் நிதிஷ்குமார் ஆகியோரின் தலைமையில் நடைபெறும் ஆட்சி, எம்.பி.,க்களின் முட்டுக் கொடுத்தலால் இந்த ஓராண்டை நகர்த்தியுள்ளது.

இந்த ஓராண்டில், அதற்கு முன்பிருந்த 5 ஆண்டுகள் – நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவியே இன்னமும் தேர்வு செய்யாமல், ‘இந்திய ஜனநாயகம்’ ஒரு வேடிக்கைக் காட்சியாகவே உலகத்தார் கண்முன் காட்சியளிக்கும் பரிதாபம் ஒருபுறம்!

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கோவை ‘சி.பி.ஆர்.’ என அழைக்கப்படும் திரு.சி.பி.இராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்; ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சுமார்  40 ஆண்டுகள் தொடர்புள்ள ஒருவர்.  (தனிப்பட்ட முறையில் எவரிடத்திலும் பண்போடு பழகும் பான்மையர் என்பது அவருக்குள்ள தனித்தன்மை) என்றாலும், கட்சி, ஜனநாயகம், தேர்தல் போட்டி என்று வரும்போது, எக்கட்சியின் வேட்பாளர் அவர் என்பதையும், அவரது கொள்கை, லட்சியம் இவற்றையும் பார்த்து முடிவு செய்வது வாக்காளர்களின் கடமையும், பொறுப்பும், நடைமுறையாகவும் உள்ளது என்பது யதார்த்த நிலை.

சி.பி.இராதகிருஷ்ணனை குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக பி.ஜே.பி. அறிவித்திருப்பது – ஒரு வகை யுக்தியே!

தற்போது திடீரென்று சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களை NDA கூட்டணி வேட்பாளராக, பிரதமர் மோடி – பா.ஜ.க. முன்மொழிந்திருப்பது ஒருவகையான தேர்தல் தந்திர உத்தி என்பது, அரசியல் அரிச்சுவடி தெரிந்த அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடியதே!

தமிழர் பற்று, தென்னாட்டவர்மீது திடீர் கரிசனம் – ‘‘காதல்’’ பிரதமர் மோடிக்கும், அவரது கட்சியாகிய பி.ஜே.பி.,க்கும் பீறிட்டு வருவதும் தமிழ்நாட்டிற்கு வரும்போது, ‘சீசனல் பேச்சாக’ அவரது உரை தயாரிக்கப்பட்டு, தமிழர் பெருமை, பாரதி, வள்ளுவர், ராஜராஜ சோழன்,  ராஜேந்திர சோழர்கள் பெருமை, ‘இத்தியாதி, இத்தியாதி’ எல்லாம் தமிழ்நாட்டின் வாக்கா ளர்களுக்குத் தரும் ‘மயக்க பிஸ்கெட்டுகள்’ என்பதையும் பெரியார் மண்ணான தமிழ்நாடு நன்கு உணர்ந்துள்ளது. ‘‘எண்ணெய் செலவே தவிர, (தேர்தல் வெற்றி) பிள்ளை பிழைக்க வழி இல்லை’’ என்பது புரிந்தது; இனியும் புரியும்.

அதன் தொடர்ச்சிதான் இந்தத் ‘தமிழர்’ ஆதரவு தேடல் எல்லாம் என்பது ஒருவகை ‘வித்தை!’

மற்றொரு முக்கிய காரணம் சற்று அழுத்தமானது!

திடீர் என்று பிரதமர் மோடி நாக்பூருக்குச் செல்லவேண்டிய அவசியம் என்ன?

பிரதமர் மோடிக்கு – ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, தலைமையை ‘‘தாஜா’’ செய்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மனச்சிக்கல்களை ஓரங்கட்டினால்தான், ஆட்சியில் 75 வயது மரபு என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் நிர்பந்தத்தைத் தள்ளி வைத்து, தனது தொடர் ‘‘ராஜ பாட்டை’’யை நடத்திட முடியும் என்பதால், இதற்குமுன் – பதவியேற்றவுடன் போகாத ‘நாக்பூர்’ ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்திற்கு அண்மையில் ‘விஜயமும்’ பல வகை உத்திகளும் செய்யப்படுவதாகவும் பல ஏடுகளில் பல கட்டுரைகளும், தகவல்களும் வந்த வண்ணம் உள்ளது!

இந்தப் பதவி நியமனத்தில் ஓர் ஆழ்ந்த ஆர்.எஸ்.எஸ்.காரரை, அமர வைப்பதில், ஆர்.எஸ்.எஸ். மூன்று முறை முன்பு தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் என்பதை, கோட்சே பயிற்சி எடுத்த இயக்கம் என்பதையெல்லாம் மறைத்துவிடவோ, மறந்துவிடவோ வாய்ப்பு ஏற்படும் என்பதும்கூட ஓர் அரசியல் உத்தியாகவும் இருக்கக் கூடும்.

பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். உறவு நெருக்கமாக இல்லாமல் – நெருடலாக உள்ளது என்பதை செய்தி ஊடகங்களில் வரும் செய்திக் கட்டுரைகளால் அறிய முடிகிறது.

எதிர்க்கட்சிகள் நிறுத்திய வேட்பாளர்
எத்தகையவர்?

அதற்கும், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் பதவிக்கு ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரை முன்மொழிவது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்றதுதானே!

ஆனால், இந்தியா கூட்டணி, குடியரசு துணைத் தலைவர்  வேட்பாளராக மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சுதர்சன் ரெட்டி அவர்களைச் சரியாக தேர்வு செய்துள்ளது.

ஜனநாயகத்தில், இன்றைய வாக்குகள் காணாமற்போகும் விசித்திர சூழலில், ‘வேலிகளே பயிர்களை மேயும்’ வெட்கப்படத்தக்க குற்றச்சாட்டுப் பதிவுகள் அங்கிங்கெனாதபடி, பீகார் தொடங்கி, கேரளாவரையில் பேசப்படும் – கண்டனம் வீசப்படும் நிலையில், நல்ல ஜனநாயகத்தை உலகுக்குக் காட்ட எல்லாத் தகுதியும் உள்ள ஒரு வேட்பாளர், அதுவும் மாநிலங்களவையும், பாரபட்சமின்றி – பொதுநிலை தவறாது நடத்தும் ‘மனிதம்’ நிறைந்த ஒரு வேட்பாளராக திரு.சுதர்சன் ரெட்டி அவர்கள் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது!

தமிழர், தமிழரல்லாதார்
பிரச்சினையல்ல!

இதில், தமிழர், தமிழரல்லாதார் பிரச்சினையைவிட ‘ஜனநாயகமா? யதேச்சதிகாரமா?’ என்பதே முக்கிய கண்ணோட்டமாக இருக்கவேண்டும்.

வெற்றி – தோல்வி என்பது ஜனநாயகத்தில் – கொள்கை, லட்சியக் கண்ணோட்டத்தில், வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு உருவம் பெறுகின்றது.

எண்ணிக்கைகளால் பெறும் வெற்றியைவிட, லட்சியத்திற்காகப் போராடி, வெற்றி வாய்ப்பினை இழந்தால்கூட, உண்மையில் ஜனநாயகத்தையும்,  இந்திய அரசியலமைப்புச்  சட்டத்தையும் காக்கும் முயற்சி வெற்றி பெறும் சூழலை உருவாக்க, இந்த வாய்ப்பும் சிறந்த ஒன்று என்று கருதியே போட்டி வேட்பாளரை – தகுதி மிக்கவரை – கொள்கை அடிப்படையில், ஜனநாயகம், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட நிறுத்தி, தேர்தல் களத்தில் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியா கூட்டணி!

மரபைக் காப்பாற்றியதா பி.ஜே.பி.?

நமது தி.மு.க. கூட்டணித் தலைவர் முதலமைச்சரின் தெளிவான அறிக்கை இதனை நன்கு விளக்குவதாக உள்ளது!

பொதுவாகக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வட மாநிலங்களில் இருந்தவர் வந்தால், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குத் தென்மாநிலங்களிலிருந்து ஒருவர் என்ற மரபை சென்ற முறை, மோடி அரசோ, பா.ஜ.க. அரசோ பின்பற்றியதா? என்பதை நினைவுபடுத்திக் கொண்டால், இந்தத் ‘‘தமிழர்’’ வாதத்திற்குள் உள்ள ‘மயக்கம்’ நீங்கக் கூடும்!

வாக்காளர்களைவிட, மக்கள் புரிந்துகொள்வர் என்பது உறுதி!

 கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
20.8.2025

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *